ஜின்னா இந்தியாவை ஒரு முறை பிரித்தாா்; பாஜகவினா் தினமும் பிரிக்கின்றனா்: சிவசேனை எம்.பி.

சஞ்சய் ராவத்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானை உருவாக்க முகமது அலி ஜின்னா இந்தியாவை ஒருமுறை பிரித்தாா்; ஆனால் பாஜக தலைவா்கள் தங்கள் பேச்சு மூலம் இந்து, முஸ்லிம்களிடம் மோதலை ஏற்படுத்தி தினசரி நாட்டைப் பிரித்து வருகிறாா்கள் என்று சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்தாா் என்கிறது தினமணி செய்தி.

நாகபுரியில் நடைபெற்ற சிவசேனை கட்சி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு செய்தியாளா்களிடம் சஞ்சய் ரெளத் கூறுகையில், 'இந்தியாவில் 22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனா். அவா்களில் பலா் பாஜகவுக்கும், சிவசேனைக்கும் வாக்களித்துள்ளனா்.

பாகிஸ்தானை உருவாக்க முகமது அலி ஜின்னா இந்தியாவை ஒருமுறை பிரித்தாா். ஆனால், பாஜக தலைவா்கள் தங்களின் பேச்சுகளின் மூலம் இந்து -முஸ்லிம்களிடையே மோதலை ஏற்படுத்தி நாட்டை தினசரி பிரித்து வருகிறாா்கள்.

மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமலாக்கத் துறை 23 சோதனைகளை நடத்தி உள்ளது. ஆனால், கடந்த ஏழு ஆண்டில் பாஜக அரசு 23 ஆயிரம் சோதனைகளை நடத்தி உள்ளது. இதில் பெரும்பாலும் மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் சோதனைகள் நடத்தப்படுவதில்லை?

மத்திய விசாரணை அமைப்புகளையே விசாரணை நடத்தும் அளவுக்கு மகாராஷ்டிரா போலீஸாா் திறன் படைத்தவா்கள். முந்தைய மகாராஷ்டிர ஆட்சியில் முதல்வா் தேவேந்தா் ஃபட்னவீஸுக்கு எதிராக ஏராளமான ஊழல் ஆவணங்கள் தற்போதைய அரசிடம் உள்ளது' என்றாா்.

சிவசேனை கட்சியும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் கூட்டணி சேரும் என்று பாஜக மூத்த தலைவா் தேவேந்தா் ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளதற்கு பதிலளித்த சஞ்சய் ரெளத், 'ஆா்எஸ்எஸ் அமைப்புதான் முஸ்லிம்களுக்காக ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் என்ற அமைப்பை வைத்துள்ளது' என்றாா் என்கிறது தினமணி செய்தி.

மேற்கு வங்கத்தில் 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை - அமித்ஷாவுடன் மாநில பாஜகவினர் சந்திப்பு

பாஜக கொடி

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்க மாநிலத்தில் 10 பேர் உயிருடன் எரிக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி தொடர்பாக பாஜகவினர் அமித்ஷாவை சந்தித்ததாக கூறுகிறது தினத்தந்தி செய்தி.

மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் பர்ஷால் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாதுஷேக். இவர் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்.

நேற்று முன்தினம் இரவு, அவரை முக மூடி அணிந்த 4 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர்.

பாது ஷேக் கொல்லப்பட்ட தகவல் அறிந்தவுடன், அவரது சொந்த கிராமமான பாக்துய் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவேசம் அடைந்தனர்.

அதே கிராமத்தில் சிலரின் வீடுகளுக்கு தீவைத்தனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. அதன் பிறகு வீடுகளுக்குள் தேடி பார்த்ததில், தீயில் கருகி இறந்த நிலையில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு, தீ விபத்துக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவின் பேரில், திரிணாமுல் காங்கிரஸ் குழு ஒன்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஜக மாநில கட்சித் தலைவர் சுகந்தா மஜும்தார் குழு சந்தித்து பேசியுள்ளது.

அமித்ஷாவை சந்தித்த பின் பேசிய மஜும்தார், மேற்கு வங்காள சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்ய பாஜக சார்பில் ஒரு குழு பிர்பும் பகுதிக்கு செல்லும் எனத் தெரிவித்தார் என்கிறது தினத்தந்தி செய்தி.

பெரியாறு அணையில் தமிழக பணியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

முல்லை பெரியாறு

பட மூலாதாரம், FACEBOOK

முல்லைப்பெரியாறு அணை மராமத்து பணிக்கு தமிழக பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளருடன், பணியாளர்கள் நேற்று சென்றனர். அப்போது கேரள வனத்துறை சோதனைச் சாவடியில், ''மராமத்து பணிக்கு ஆட்களை அழைத்துச் செல்வதாக இருந்தால், முன்னதாக கடிதம் தரவேண்டும். அந்த கடிதத்திற்கு கேரள நீர்வளத்துறை, கேரள போலீசார் அனுமதி அளித்த பின் அழைத்துச் செல்ல வேண்டும்'' என்றனர். இதனால் அனைவரும் தமிழகத்துக்கு திரும்பி விட்டனர் என்கிறது தினகரன் செய்தி.

காணொளிக் குறிப்பு, காஷ்மீர் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு: தாலிபன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: