தமிழ்நாட்டில் சொத்து வரி 150% உயர்வு: போராடும் அதிமுக - மறுவிளக்கம் தரும் அமைச்சர் நேரு

அதிமுக ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம், ADMK IT Wing

தமிழ்நாட்டில் சொத்து வரி 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேவேளை 7 சதவீதத்தினருக்கு மட்டுமே 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், `மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள 15 ஆவது நிதிக்குழு, 2022-2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளது'' என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், `பொருளாதார குறியீடுகள் உயர்ந்துள்ள நிலையில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

சொத்து வரி உயர்வு விரம்

எனவே, 600 ச.அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1200 சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடங்களுக்கு 50 சதவீதமும் 1201 முதல் 1800 சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடங்களுக்கு 75 சதவீதமும் 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்வு செய்யப்பட உள்ளதாக.'' தெரிவிக்கப்பட்டது.

அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம், ADMK IT Wing

இதற்கு அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தின. இந்நிலையில், சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று (ஏப். 5ம் தேதி) ஆர்ப்பாட்டனம் நடத்தினர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுகையில், "தேர்தலின் போது சொத்துவரி உயர்த்தபடாது என்று மக்களிடம் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது மக்கள் வயிற்றில் அடிக்கும் வகையில் வரியை உயர்த்தியுள்ளது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.'' என்றார்.

திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசுகையில், "கொரோனா தாக்கத்தால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், திட்டமிட்டு மக்களின் மீது வரியை சுமத்தியுள்ளனர். மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசாக உள்ளது. மத்திய அரசின் மீது பழியைப் போட்டு சொத்து வரியை உயர்த்தியுள்ளனர்.'' என்று குற்றம்சாட்டினார்.

அண்ணாமலை கருத்து

இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில், ` மத்திய அரசு கூறியதால்தான் வரியை உயர்த்தினோம் என அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு வழங்கிய ஆணையில் அவ்வாறு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தபட்ச நில அளவைக்கு ஏற்ப வரி விகிதாச்சார அளவுகளை குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்சார்ந்த பகுதிகளைப் பிரித்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப வித்தியாசங்களுடன் வரி விகிதங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களைச் சந்திக்கத் துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது கோழைத்தனமான பொய்யான புகாரை தெரிவித்து திசை திருப்ப முயற்சி செய்யும் தமிழ்நாடு அரசின் கபட நாடகத்தை பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது.'' என்று கூறியிருந்தார்.

அமைச்சர் நேரு மீண்டும் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு

பட மூலாதாரம், K.N.Nehru

இந்த நிலையில், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது குறித்து ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் தலைமை செயலகத்தில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''15 ஆவது நிதிக்குழுவின் வழிகாட்டுதல்களின்படி, சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரியை உயர்த்தாவிட்டால் மத்திய நிதியை விடுவிக்க முடியாது என்று தெரிவித்து விட்டனர்.

இதனால் கடந்த ஆண்டிற்கான் ரூ. 7 ஆயிரம் கோடி, தற்போது ரூ. 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கிடைக்காது. ஆகையால் மக்களைப் பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது,'' என்று கூறினார்.

பிற மாநிலங்களை விட குறைவு

குறிப்பாக, ''பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவாகவே வரி விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 77.87 லட்சம் குடியிருப்புகளில் 7 சதவீதத்திற்கு மட்டுமே 100 முதல் 150 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக, அதாவது 83 சதவீதத்தினருக்கு 25 முதல் 50 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

மும்பை, பெங்களூரு, புனே உள்ளிட்ட நகரங்களில் இதை விட பல மடங்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் குடியிருப்பின் மதிப்பைக் குறைத்துக் காட்டி வரி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. அதையும் சரியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்''என்றார்.

அண்ணாமலைக்கு பதில்

சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு மத்திய அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, "மத்திய அரசின் வழிகாட்டிதல் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதிக்குள் உயர்த்த வேண்டும் என்றும் காலவரை வைத்திருந்தனர். ஆனால், இதை அவர் படித்திருக்க மாட்டார் போல்.'' என்றார்.

அதிமுகவின் ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு, "அதிமுக ஆட்சியில் 300 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தினார்கள். ஆனால், திமுக ஆட்சியில் படிப்படியாக உயர்த்தினோம். கடந்த 2018ம் ஆண்டு கூட அதிமுக ஆட்சியில் உயர்த்தி விட்டு, தேர்தலுக்கான நிறுத்தி வைத்தனர். ஆனால், இப்போது ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.'' என்றார் கே.என்.நேரு.

காணொளிக் குறிப்பு, நீட் விலக்கு: தமிழ்நாடு ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் தராதது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: