நீட், ஜெ.இ.இ.இ பயிற்சி - கிராமப்புற மாணவர்களுக்கு வழிகாட்டும் திருச்சி என்.ஐ.டி இக்னைட் குழு

பட மூலாதாரம், NIT, IGNITTE
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட படிப்புகளில் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேர கிராமப்புற மாணவர்களுக்கு திருச்சி என்.ஐ.டி இக்னைட் என்கிற மாணவர் குழுவினர் இலவச பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்.ஐ.டி உள்ளிட்டவற்றின் பெயர்களைக் கூட கேட்டறியாத கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை அந்த கல்வி நிறுவனங்களிலேயே சேர வைக்கிறது திருச்சி என்.ஐ.டி இக்னைட் மாணவர்களின் குழு.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி) ஆசிரியர்களின் மேற்பார்வையில், இக்னைட் கிளப் மூலம் தேசிய தொழில் நுட்பக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் (NIT, IIT) ஆகியவற்றில் சேருவதற்கான அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வான JEEE தேர்வை எழுத கிராமப்புற மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சியானது அளிக்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு தன்னார்வ மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்த குழுவில் பலரும் பயிற்சி பெற்று, என்.ஐ.டி, ஐஐடி மற்றும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை

பட மூலாதாரம், NIT IGNITTE
என்.ஐ.டி இக்னைட்டில் பயிற்சி பெற்று, என்.ஐ.டியிலேயே படித்து வரும் மாணவர் சேதுபதி பிபிசி தமிழிடம் கூறுகையில், "நான் திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். என்.ஐ.டி இக்னைட்டின் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்றதால், ஜெ.இ.இ.இ பற்றிய பயம் போய், புது நம்பிக்கை கிடைத்தது.
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நாங்கள் பிரமிப்பாக பார்த்த திருச்சி என்.ஐ.டியில் சேர்க்கையும் கிடைத்தது பெரிய விஷயம்.

பட மூலாதாரம், Sethupathi
எனக்கு கிடைத்த வாய்ப்பு என்னைப்போன்ற கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால், நானும் இக்னைட் கிளப் உறுப்பினராகி உள்ளேன். கிராமப்புற மாணவர்கள் சந்தேகங்கள், சூழலை நன்கு உணர்ந்துள்ளதால், எளிமையாக வழிகாட்ட முடிகிறது.'' என்கிறார்.
இதேபோல் இக்னைட்டில் பயிற்சி பெற்று தற்போது திருச்சி என்.ஐ.டி மாணவியாக உள்ள புகழரசி பிபிசி தமிழிடம் கூறுகையில், ''திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்தேன். மாவட்டம் முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, 30 பேர் தேர்வு செய்யப்பட்டோம். எந்த என்.ஐ.டியில் பயிற்சி பெற்ற என்.ஐ.டியில் மாணவியாக சேர்ந்தது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.'' என்கிறார் மாற்றுத்திறனாளி மாணவியான புகழரசி.
நீட் தேர்விற்கும் பயிற்சி

பட மூலாதாரம், Harikrishnan
பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் சேர மட்டுமல்ல விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கும் பயிற்சி அளிக்கின்றனர். இதன்படி, திருச்சி என்.ஐ.டி இக்னைட் கிளப்பில் பயிற்சி பெற்ற மாணவர் ஹரிகிருஷ்ணன் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஹரிகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். அப்போதுதான் என்.ஐ.டி இக்னைட் கிளப் மூலம் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன். கொரோனா காலத்திலும் எங்களுக்கு தொடர்ந்து ஆன்லைனில் பயிற்சி அளித்தனர்.
வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் முதலில் என்.ஐ.டியிலும் கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு ஆன்லைன் வழியிலும் வகுப்பு நடத்தினர். நான் திருச்சி மாவட்டத்தில் வசித்தாலும் சிறப்பு பயிற்சிக்கு செல்லும் வரை என்.ஐ.டி என்று ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது.
அங்கு பெற்ற வழிகாட்டலால், நீட் தேர்வில் 432 மதிப்பெண் பெற்றதோடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு சேர்க்கை தரவரிசையில் மாநில அளவில் முதல் சேர்க்கையைப் பெற்றேன்.'' என்கிறார்.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முதன்மை கல்வி அலுவலர் ஒருங்கிணைப்பில் என்.ஐ.டி இக்னைட் கிளப் மூலம் சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆன்லைனிலும் தொடரும் பயிற்சி

பட மூலாதாரம், NIT IGNITTE
இக்னைட் கிளப் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பிபிசி தமிழிடம் கூறுகையில், "கிராமப்புற மாணவர்கள் என்.ஐ.டி போன்ற கல்வி நிலையங்களுக்கு வர வேண்டும் என்பதற்காக என்.ஐ.டியின் மாணவர் சஞ்சீவி இதை நிறுவினார். ஜெஇ.இ.இ பயிற்சி அளிக்கப்பட்டாலும் நீட், க்ளாட் என மாணவர்கள் விரும்பினால் அதற்கேற்ற பயிற்சி தருகிறோம்.
தற்போது மொத்தம் 56 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். கொரோனா காலத்தில் ஆன் லைன் மூலம் பயிற்சி அளித்தோம். இப்போதும் நேரில் வர முடியாத மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன் லைனில் பயிற்சி அளிக்கிறோம்.

பட மூலாதாரம், NIT Trichy
திருச்சி என்.ஐ.டியில் படிக்கும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டும் மாணவர்கள் 60 பேர் இக்னைட் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். தன்னார்வலர்களாக உள்ள இவர்கள்தான் இந்த சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். என்.ஐ.டி மாணவர் நலன் டீன் குமரேசன் தலைமையில் பேராசிரியர்கள் மஞ்சுளா, செல்வகுமார் ஆகியோர் ஆசிரியர் ஆலோசர்களாக இருந்து நெறிப்படுத்தி வருகின்றனர்.'' என்கிறார்.
திருநெல்வேலியிலும் இக்னைட் கிளப்
திருச்சியில் தொடங்கிய இக்னைட் கிளப் பயிற்சி வகுப்புகள் இந்த ஆண்டு முதல் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் அணுகினால் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த பயிற்சியை தர தயாராக உள்ளதாக இக்னைட் ஆசிரியர் ஆலோசகர் மஞ்சுளா கூறுகிறார்.
இது குறித்து அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "இக்னைட் கிளப்பில் பயிற்சி பெற்ற திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கிராமத்து மாணவர் அருண்குமார் முதல் முறையாக இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி)சேர்ந்துள்ளார். கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பலர் சேர்ந்துள்ளனர்.''என்றார்.
பிற மாவட்டங்களிலும் சேவை

பட மூலாதாரம், NIT IGNITTE
மேலும், "திருச்சி என்.ஐ.டி முன்னாள் மாணவரான திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்னு அணுகியதைத் தொடர்ந்து, தற்போது அங்கும் இக்னைட் கிளப் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை மூலம் தொடர்பு கொண்டால், நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க தயாராக உள்ளோம்.
இந்த பயிற்சிகள் முழுக்க முழுக்க தன்னார்வலர்களாக மாணவர்களால், இலவசமாக நடத்தப்படுகிறது. என்.ஐ.டி வளாகத்தில் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடமும் அளிக்கப்படுகிறது.'' என்கிறார் பேராசிரியர் மஞ்சுளா.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டு
என்.ஐ.டி, ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களையே தெரிந்திருக்காத மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அங்கேயே படிக்கவும் வைக்கிறார்கள். வழிகாட்டலும் பயிற்சியும் கிராமப்புற, அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்தால், அவர்களும் உயர்கல்வி நிறுவனங்களில் எளிதில் சேர முடியும் என்பதை என்.ஐ.டி இக்னைட் குழு நிருபித்து வருகிறது என்கிறார்கள் ஆசிரியர்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













