இலங்கை நிலை இந்தியாவிலும் ஏற்படும்: பிரதமர் மோதியிடம் அதிகாரிகள் சொன்னது ஏன்?

பட மூலாதாரம், ANI
இன்றைய (05.04.2022) நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
இந்தியாவில் இலவசங்களைக் கொடுக்கும் சில மாநிலங்கள் இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடலாம் என பிரதமர் நரேந்திர மோதியிடம் அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளதாக தி இந்து தமிழ் திசை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த செய்தியில், ''நல்லாட்சியை வழங்க, நிர்வாகத்தில் மேம்பாட்டைக் கொண்டுவர ஆலோசனைகளை வழங்குமாறு பிரதமர் மோதி, பிராந்திய வாரியாக 6 குழுக்களை அமைத்துள்ளார். அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் அனைவருமே செயலர் நிலையில் உள்ளவர்கள்.
பிரதமர் மோதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலர் பிகே மிஷ்ரா, கேபினட் செயலர் ராஜீவ் கவுபா ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பிரதமர் மோதி, "பற்றாக்குறைகளை சமாளிக்க திட்டம் போடுவதை விடுத்து அதிகப்படியானவற்றை நிர்வகிக்க திட்டம் தீட்டுங்கள். வறுமையைக் காரணம் காட்டும் பழைய சாக்குகளை விட்டொழியுங்கள். பெரிய இலக்குகளைக் கொள்ளுங்கள்" என்று அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.
அதிகாரிகள் அளித்த விளக்கம்
அப்போது அதிகாரிகள் சிலர், "இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் மாநிலங்கள் இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்" என்று எடுத்துரைத்தனர்.
அண்மையில், தேர்தலை சந்தித்த பஞ்சாப், உ.பி., கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட இலவசத் திட்டங்களை முன்வைத்து அதிகாரிகள் இந்த ஆலோசனையை பிரதமருக்கு வழங்கினர்.'' என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை விவகாரம்: கர்நாடக முதலமைச்சர் டெல்லி பயணம்

பட மூலாதாரம், Basavaraj Bommai
மேகேதாட்டு அணை, அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார் என்று தினத் தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்த அந்த செய்தியில், காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகேதாட்டு என்கிற இடத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதைக் கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்துவதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.
இந்த நிலையில், பசவராஜ் பொம்மை இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு, நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்த உள்ளார்.
அதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசும் அவர், அமைச்சரவை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கோருகிறார். கர்நாடக அமைச்சரவையில் இன்னும் 4 இடங்கள் காலியாக உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உள்ளன.
அதனால் அமைச்சரவையை விரைவாக விஸ்தரிக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு பசவராஜ் பொம்மை ஒப்புதல் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பசவராஜ் பொம்மையுடன் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோளும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
கிரிஷி உதான் திட்டம்: வேளாண் பொருட்களுக்கு 53 விமான நிலையங்களில் கட்டண சலுகை
வேளாண் பொருட்களை தேசிய, சர்வதேச அளவில் அனுப்பும் கிரிஷி உதான் திட்டத்தில் திருச்சி, கோயம்புத்தூர் உட்பட நாடு முழுவதும் 53 விமான நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளாக தினமணி செய்தியில் உள்ளது.
இது குறித்த அந்த செய்தியில், வேளாண் பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்லும் கிரிஷி உதான் திட்டத்தில் பயனடைந்தவர்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி இரன்னா காடாடி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் அளித்த பதில் அளித்துள்ளார்.
அதில், சர்வதேச, தேசிய வழித்தடங்களில் வேளாண் பொருட்களை கொண்டு செல்ல, கடந்த 2020ம் ஆண்டு கிரிஷி உதான் திட்டம் தொடங்கப்பட்டது. மலைப்பகுதிகள், வட கிழக்கு மாநிலங்கள், பழங்குடியினர் பகுதிகளில் இருந்து வரும் எளிதில் அழுகும் உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வசதிக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அகர்தலா, டேராடூன், திமாபூர், இம்பால், ஜம்மு, குலு, லே, ராய்ப்பூர், போர்ட் ப்ளேர், ராஞ்சி உள்ளிட்ட 25 விமான நிலையங்களில் கவனம் செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்திய விமான நிலைய ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள கோயம்புத்தூர், திருச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், ஜலந்தர், ஆக்ரா, அமிர்தசரஸ், சண்டிகர், வாரணாசி உள்ளிட்ட மேலும் 28 விமான நிலையங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
கிரிஷி உதான் திட்டத்தில் சிவில் விமான போக்குவரத்து, வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், கால்நடை, மீன் வளம், வர்த்தகம், உள்ளிட்ட 8 அமைச்சகங்கள், துறைகள் உள்ளன.
இத்திட்டத்தின்படி, வேளாண் பொருட்களின் தரையிரக்கம், வாகன நிறுத்துமிடம், சரக்கு முனையத்தில் இருந்து பயணியர் பகுதிக்கு செல்லும் கட்டணம் ஆகியவை முழுமையாக தள்ளுபடி செய்து, விமான போக்குவரத்தின் மூலம் விவசாய உற்பத்தியை எளிதாக்கி, ஊக்குவிக்கப்படுகிறது.
ஏற்றுமதி அதிகரிப்பு
இதில், 2021-22ம் நிதியாண்டில் பிப்ரவரி வரை உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் மொத்தம் 1,08,479 மெட்ரிக் டன் அழுகிப் போகும் வேளாண் பொருட்கள் கையாளப்பட்டுள்ளன.
இது 2020-21ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 24, 437 மெட் ரிக் டன் அதிகம். என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.'' என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













