வெங்கய்ய நாயுடு: கல்வி காவிமயத்தை நியாயப்படுத்துகிறதா குடியரசு துணைத் தலைவரின் பேச்சு?

இந்திய வெங்கய்ய நாயுடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெங்கய்ய நாயுடு, இந்திய குடியரசு துணைத் தலைவர்

இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கல்வி காவிமயமாவதாக எழும் குற்றச்சாட்டு தொடர்பாக பேசிய சில வரிகள் தற்போது விவாதப்பொருளாகி வருகின்றன. அவர் என்ன பேசினார்? கல்வியாளர்கள், விமர்சகர்கள் அதை எப்படி பார்க்கிறார்கள்?

ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஷ்வ வித்யாலயாவில் தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க நிறுவனத்தை திறந்து வைத்தபோதே இந்த கருத்துகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார்.

இதே நிகழ்ச்சியில் இந்திய கலாசாரம், பாரம்பரியத்தின் பெருமைகளையும் அவர் விவரித்தார்.

என்ன பேசினார் வெங்கய்ய நாயுடு?

இந்திய கல்விக் கொள்கை

பட மூலாதாரம், Getty Images

"நமது பாரம்பரியம், கலாசாரம், முன்னோர்கள் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். நாம் நமது வேர்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். காலனித்துவ மனப்பான்மையைக் கைவிட்டு, விட்டு, நம் குழந்தைகள் தங்களின் இந்திய அடையாளத்தில் பெருமை கொள்ளக் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்திய மொழிகளில் எத்தனை முடியுமோ அனைத்தையும் நாம் கற்க வேண்டும். நாம் நமது தாய்மொழியை நேசிக்க வேண்டும். அறிவின் பொக்கிஷமான நமது வேதங்களை அறிய சமஸ்கிருதத்தை நாம் கற்க வேண்டும்," என்றும் குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

இளைஞர்கள் தங்களுடைய தாய்மொழியை பிரசாரம் செய்ய ஊக்குவித்த அவர், "அனைத்து அரசிதழ் அறிவிப்புகளும் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியில் வெளியிடப்படும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் தாய்மொழி உங்கள் கண்பார்வை போன்றது, அதேசமயம் வெளிநாட்டு மொழி பற்றிய உங்கள் ஞானம் கண்ணாடி போன்றது," என்று வெங்கய்ய நாயுடு பேசினார்.

நமது கல்வி முறையின் இந்தியமயமாக்கல் என்பதே, இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையின் மையமாகும். கல்விக்கொள்கை தாய்மொழிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பிரமுகர்கள், தங்கள் சொந்த மொழி குறித்து பெருமை கொள்வதால், ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் கூட தங்களுடைய தாய்மொழியிலேயே பேசுகின்றனர் என்றும் வெங்கய்ய நாயுடு சுட்டிக்காட்டினார்.

"நூற்றாண்டு கால காலனித்துவ ஆட்சி நம்மை சிறுமைப்படுத்தப்பட்ட இனமாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தது. நாம் நமது சொந்த கலாசாரம், பாரம்பரிய ஞானத்தை இழிவுபடுத்த பயிற்றுவிக்கப்பட்டோம். அது ஒரு தேசமாக நமது வளர்ச்சியைக் குறைத்தது. வெளிநாட்டு மொழியை நமது கல்வி ஊடகமாகத் திணித்தது, கல்வியை மட்டுப்படுத்தியது. சமூகத்தின் ஒரு சிறிய பிரிவினர், பரந்த மக்களின் கல்வி உரிமையை பறிக்கிறார்கள்" என்று வெங்கய்ய நாயுடு பேசினார்.

முரண்படும் கல்வியாளர்கள்

ஆனால், இந்த கருத்துடன் முரண்படுகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. அவரிடம் வெங்கய்ய நாயுடுவின் உரை பற்றி கருத்து கேட்டபோது, நீளமாகவே பதிளளித்தார்.

மனுவுக்கும் மெக்காலேவுக்கும் என்ன வித்தியாசம் என்பதை முதலில் வெங்கய்ய நாயுடு போன்ற தலைவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாய கல்வி வழங்கும் உரிமையை நரேந்திர மோதி அரசால் இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் 'மனு' எதை விதைத்திருந்தாரோ அதை பலப்படுத்தியதுதான் மெக்காலேவின் பணி. மனுவையும் மெக்காலேவையும் தவிர்த்து விட்டு எல்லோரையும் சமமாக பார்க்கக் கூடிய கற்றல் வாய்ப்பை உருவாக்க வேண்டும். கல்வி உரிமையை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 41 வலியுறுத்துகிறது. மக்களின் பொருளாதார நிலை மேம்பட, கல்வியை கொடுக்கும் பொறுப்பு அரசுடையது, அதை பெறுவது மக்களுடைய உரிமை. ஆனால், தொடக்கக் கல்வியில் கூட பல அடுக்கு கல்வி முறையை வைத்துக் கொண்டு மெக்காலேவை பழி சொல்ல இந்த தலைவர்கள் முற்படுகிறார்கள். வெங்கய்ய நாயுடு தமது உரையின் மூலம், தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கக் கூடிய ஒற்றை கல்வி பரப்புரையை பலப்படுத்த முயன்றிருக்கிறார்," என்கிறார் கஜேந்திர பாபு.

இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தாய்மொழியின் சிறப்பு பற்றி பொதுவாகவே பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டவர். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வரும் முன்பே மத்திய அமைச்சராகவும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளிலும் அரசு விழாக்களிலும் தாய்மொழி கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால், கல்வி காவி நிறமயமாக்கல் கருத்தை வலியுறுத்திப் பேசியது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது.

"ஏமாற்றத்தைத் தருகிறது"

இந்திய கல்விக்கொள்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணனிடம் பேசினோம். அவர் வெங்கய்ய நாயுடு போன்ற தலைவர் இப்படி பேசுவது ஏமாற்றம் தருகிறது என்று கூறினார்.

காரணம் கேட்டபோது, "மெக்காலே கல்வி முறையை மாற்றி விட்டு இந்தியமய கல்வியை உருவாக்க வேண்டும் என வெங்கய்ய நாயுடு பேசியதை வரவேற்க வேண்டும். எல்லா மொழி, கலாசாரம், இனம் போன்ற பின்னணியைக் கொண்ட அனைவருக்கும் கல்வி கற்க உரிமை உண்டு. ஆனால், அந்த சமமான கல்வியைக் கடந்து வெங்கய்ய நாயுடு பயன்படுத்திய வார்த்தைகள், அவர் வகிக்கும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு அழகல்ல என்று லட்சுமணன் கூறினார்.

"கல்வி காவிமயமாவதில் என்ன தவறு என அவர் பேசுவது தவறு என்று கூறிய அவர், இந்தியா போன்ற பன்முக கலாசாரம் கொண்ட நாட்டில் ஒரு கல்வி முறை கொள்கையை திணிக்க முடியாது. அதற்கு ஆதரவாக வெங்கய்ய நாயுடு போன்ற தலைவர்கள் பேசுவது துரதிருஷ்டவசமானது, ஏமாற்றத்தைத் தருகிறது," என்றார்.

இவரது கருத்தையே பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் பிரதிபலித்தார்.

அவர் கூறும்போது, "தரமான கல்வியை பற்றிப் பேசாமல் காவி பற்றி அவர் இப்போது வெங்கய்ய நாயுடு பேசுகிறார் என்று கேள்வி எழுப்பினார். உண்மையில் வெள்ளை, கறுப்பு என்பது நிறம் அல்ல. ஆனால், கல்விக்கே காவி நிறமிட்டு ஒரு குடியரசு துணைத் தலைவராக இருப்பவர் வலியறுத்த வேண்டிய தேவை என்ன?" என்று அவர் கேட்கிறார்.

"இந்தியாவை வளர்த்தெடுப்பதில் சமஸ்கிருதம் மிகப்பெரிய பங்காற்றி வருவதாக மத்தியில் ஆளும் தலைவர்கள் கூறுகிறார்கள். அதில் எதுவும் உண்மை இல்லை. சமஸ்கிருதம் இந்திய மொழிக்களுக்கான அடையாளம் கிடையாது. சமஸ்கிருதத்தையும் தங்களுடைய சித்தாந்தத்தையும் தேசியமாக்கி கட்டமைக்கும் முயற்சிதான் அரசின் கல்விக்கொள்கை. அதனுடைய பரப்புரையாகவே வெங்கய்ய நாயுடுவின் பேச்சை பார்க்க வேண்டியுள்ளது," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

வெங்கய்ய நாயுடுவின் விளக்கம் என்ன?

இந்திய கல்விக் கொள்கை

பட மூலாதாரம், Getty Images

"இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பிரமுகர்கள், தங்கள் சொந்த மொழியில் பெருமை கொள்வதால், ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், தாய்மொழியில் பேசுகின்றனர்.""கல்வியை காவி நிறமாக்குகிறோம் என்று குற்றம்சாட்டுகிறோம், ஆனால் அதில் என்ன தவறு? நமது பண்டைய நூல்களில் உள்ள தத்துவங்களான சர்வே பவந்து சுகினா (அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள்) மற்றும் வசுதேவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) ஆகியவை இந்தியாவின் வழிகாட்டும் கொள்கைகள். அதுவே இன்றும் நமது வெளியுறவுக் கோட்பாடு" என்கிறார் வெங்கய்ய நாயுடு. ஆனால், இந்த கருத்தை எதிர்க்கும் லட்சுமணன், "சமஸ்கிருத மொழி கற்பித்தலை அறிவுறுத்துவதில் தவறில்லை. அவரவர் மொழியை கடந்து பிற மொழியை படிப்பதிலும் தவறில்லை. ஆனால், அதற்கு சமஸ்கிருதத்தை திணிக்கும் வகையில் மத்திய அரசு மாநில மொழியை விட கூடுதலாக சமஸ்கிருதத்துக்கு அதிக நிதியை ஒதுக்குவது, அதை மேம்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மத்திய அரசின் நோக்கத்தை சந்தேகத்துக்குரியதாக்குகிறது," என்று தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி என்ன சொல்கிறது?

கல்வித்துறை
படக்குறிப்பு, தருண் விஜய், முன்னாள் எம்.பி, பாரதிய ஜனதா கட்சி

வெங்கய்ய நாயுடுவின் கருத்துக்களை அச்சுபிழையின்றி இந்திய கல்வித்துறை செயல்படுத்த வேண்டும் என்கிறார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி தருண் விஜய். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, திருக்குறள், தமிழ் மொழி தொடர்பான பல நிகழ்ச்சிகளை வட மாநிலங்களில் நடத்தியவர். அதில் பலவற்றில் தலைமை விருந்தினராக பங்கேற்றவர் வெங்கய்ய நாயாடு.

"வெங்கய்ய நாயுடு இந்திய ஞானம் பற்றி பேசியிருக்கிறார். 70 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருக்க வேண்டிய விஷயங்களைத்தான் இப்போது அவர் பேசுகிறார். காவிமயமாக்கல் என்பது இந்திய அனைத்து மாநில மொழிகள் மேம்படும் ஆன்மா. ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி அதிகம் விரிவடைகிறது. தமிழ் வழி பள்ளிகள் மூடப்படும் நிலை உள்ளது. இப்படித்தான் பல மாநிலங்களிலும் நடக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் எல்லா மாநிலங்களிலும் கண்டிப்பாக மாநில மொழி வழி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்," என்கிறார் தருண் விஜய்.

ஆங்கில வழி கல்வியை ஆரம்ப கல்வியில் இருந்தே வழங்குவதால், நமது பிள்ளைகள் சொந்த மாநிலத்திலேயே அந்நியமாக உணர்வர். இந்தியாவில் திருக்குறள், பகவத் கீதை, வேதம் போன்றவை கட்டாயமாக படிக்கும் நிலை ஏற்பட வேண்டும். வைஸ்ராய்களும் மெக்காலேக்களும் ஆங்கிலம் பேசும் வர்க்கத்தை உருவாக்கிச் சென்று விட்டனர். அது இந்தியர்களை இந்தியரற்ற நிலையில் இருக்கவே ஊக்குவிக்கும்," என்றார் தருண் விஜய்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: