எஸ்.பி. வேலுமணி இடங்களில் நடந்த சோதனையில் 11 கிலோ தங்கம்; 118 கிலோ வெள்ளி கிடைத்தன - லஞ்ச ஒழிப்புத் துறை

எஸ்.பி.வேலுமணி

பட மூலாதாரம், SP VELUMANI

கோவையில் உள்ள அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணியின் வீடு மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்று சோதனை நடத்தியது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் எஸ்.பி வேலுமணி, அவருடைய சகோதரர் அன்பரசன், அன்பரசன் மனைவி பிரேமலதா உட்பட பத்து பேர் மற்றும் மகா கணபதி ஜுவல்லர்ஸ், கான்ஸ்ட்ரோ மால் குட்ஸ் மற்றும் ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட் என்கிற மூன்று தனியார் நிறுவனங்களின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை எஸ் பி வேலுமணி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருந்தார்.

இந்த காலகட்டத்தில் அவர் தன் பெயர், தன் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் ரூ.58,23,97,052 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இது இவர் கணக்கில் காட்டியுள்ள வருமானத்தைவிட 3,920% அதிகம் என லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

11 கிலோ தங்கம்; 118 கிலோ வெள்ளி- எஸ்.பி வேலுமணி வீட்டில் என்னவெல்லாம் கையகப்படுத்தப்பட்டன?

மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் எஸ்.பி வேலுமணி, அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த ஐந்தாண்டு காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சம்பாதித்ததை வைத்து சொத்துக்களை வாங்கியுள்ள நிலையில் வெளிநாடுகளிலும் இவர்கள் சொத்துக்கள் வாங்கி இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன எனவும் அந்த முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருந்தது. அவர் அமைச்சராக இருந்தபோது மாநகராட்சி டெண்டர் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை 60க்கும் மேற்பட்ட இடங்களில் அப்போது சோதனை நடத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது இது இரண்டாவது முறை.

இன்று கோவை மாவட்டத்தில் உள்ள 41 இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் சோதனை நடைபெற்றது.

கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி வேலுமணி இல்லத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 8 மணி வரை நடைபெற்றது. சோதனை தொடர்பான தகவல் வெளியானவுடன் எஸ்.பி வேலுமணி இல்லம் முன்பாக அதிமுகவினர் திரண்டனர்.

இன்று கோவையில் எஸ்.பி வேலுமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், வடவள்ளி சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமலை சண்முகம் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. அதோடு எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் மற்றும் பிரமுகர்களின் இல்லங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.

11 கிலோ தங்கம்; 118 கிலோ வெள்ளி- எஸ்.பி வேலுமணி வீட்டில் என்னவெல்லாம் கையகப்படுத்தப்பட்டன?

அதுபோக அதிமுக ஆட்சியில் கோவை மாவட்ட ஏ.டி.எஸ்.பி.யாக இருந்த அனிதா, டி.எஸ். பி சண்முகம், காவல் ஆய்வாளர்கள் லோகநாதன் மற்றும் சந்திரகாந்தா உள்ளிட்ட நான்கு காவல்துறை அதிகாரிகளின் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது .

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி அன்பழகன், செங்கோட்டையன், சி.வி சண்முகம், கே.சி.கருப்பண்ணன், எம்எஸ்எம் ஆனந்தன், எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரும் எஸ்.பி. வேலுமணி இல்லத்திற்கு வருகை தந்தனர்.

இன்று 13 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 11 கிலோ தங்கம் 118 கிலோ வெள்ளி, கணக்கில் வராத ரொக்கம் 84 லட்சம் மற்றும் 34 லட்சம் ரூபாய் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

சோதனை முடிவில் எஸ்.பி வேலுமணியின் இல்லத்திலிருந்து ஒன்பது முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் முன்னாள் அதிமுக அமைச்சர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி "திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த வழக்கைப் பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறது. என்மீது மட்டுமல்லாமல் எனது உறவினர்கள் மற்றும் எனக்கு நெருக்கமானவர்களின் மீதும் பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம். இன்று நடைபெற்ற சோதனையில் அவர்கள் எதையுமே கைப்பற்றவில்லை. நாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: