ஒமிக்ரான் தொற்று: இத்தாலியில் இருந்து இந்தியா வந்த 13 பேர் தலைமறைவு

பட மூலாதாரம், Getty Images
இத்தாலியிலிருந்து இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கு வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனிமைப்படுத்துதல் முகாமிலிருந்து அவர்கள் தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று இத்தாலியின் மிலன் நகரில் இருந்து இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கு தனி விமானம் மூலம் வந்த 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த 125 பேரில் தற்போது 13 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
13 பேரில் ஒன்பது பேர் விமான நிலையத்தில் இருந்து எப்படி தப்பிச் சென்றனர்? நான்கு பேர் உள்ளூர் மருத்துவனையிலிருந்து தப்பிச் சென்றனர் என ஷெர்ஜாங் சிங் என்ற நகர நிர்வாக அதிகாரி பிபிசி பஞ்சாபி சேவையிடம் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒமிக்ரான் திரிபால் இந்தியாவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தாலியில் இருந்து இந்தியா வந்த அந்த விமானத்தில் மொத்தம் 160 பேர் பயணம் செய்தனர். அதில் சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் என 19 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்திற்கு வெளியே தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவசர ஊர்திகள் வரிசையாக நிற்பதையும், கூட்டம் கூடியிருப்பதையும் தொலைக்காட்சியில் காண முடிந்தது.
தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நகரின் குருநானக் தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்கு பயணிகள் விமான நிலையத்திலிருந்து எப்படி தப்பினர் என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் "சுகாதார அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு" தப்பி விட்டதாக அதிகாரிகள் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் நடைமுறைய தொடங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
"அவர்கள் காலைக்குள் திரும்பவில்லை என்றால் அவர்களின் புகைப்படங்களை செய்தித்தாளில் பிரசுரித்து அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்," என அமிர்தசரஸின் துணை ஆணையர் குர்ப்ரீத் சிங் கேஹரா என்டிடிவியில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதுபோலவே அமிர்தசரஸ் நகரிலும் அதிகரித்து வருகிறது.
செவ்வாயன்று, மாநிலத்தில் தற்காலிக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 876, டெல்லியில் 465, கர்நாடகத்தில் 333 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 121 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் தொற்று உறுதியான 3,007 பேரில் 1, 199 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 3.5 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- ஆபத்தான ஒமிக்ரானை லேசானது என்றழைக்கக் கூடாது - உலக சுகாதார அமைப்பு
- "நாடு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது"- பாஜக எம்.பி வருண்காந்தி விமர்சனம்
- சுல்லி டீல்ஸ், புல்லி பாய் செயலிகள்: ஒரே மாதிரி வழக்குகள் - டெல்லி, மும்பை போலீஸ் கையாண்டது எப்படி?
- கஜகஸ்தான்: அரசு எதிர்ப்பாளர்களை ஒடுக்க ரஷ்ய படை விரைந்தது - டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












