பாஜக எம்.பி வருண்காந்தி விமர்சனம்: "நாடு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது"

வருண் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வருண் காந்தி

(இன்று 07.01.2022 வெள்ளிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மேனகா காந்தியின் மகனுமான வருண்காந்தி, மத்திய அரசை விமர்சித்திருப்பதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பிலிபிட்டுக்கு செல்வதற்காக லக்னெளவுக்கு வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "தற்போது நாடு சிக்கலில் இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டமும், பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தனியார்மயம் என்கிற பெயரில் முக்கிய நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எல்லாவற்றையும் விற்பனை செய்தால் நாடு என்னவாகும்?

நமது முன்னோர்கள் எண்ணற்ற தியாகங்கள் செய்து நாட்டுக்கு விடுதலை பெற்று தந்தனர். அத்தகைய நாடு அழிக்கப்படுவதை நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டை காப்பாற்ற வேண்டும். இன்றைய அரசியல் ஊழல் நிறைந்ததாக இருக்கிறது. நாட்டை பற்றி கவலைப்படுங்கள். நேர்மையானவர்களை அரசியலுக்கு கொண்டு வாருங்கள். உங்கள் பிரச்னைகளை தீர்க்கக்கூடிய தலைவர்களை தேர்ந்தெடுங்கள்" என்று பேசியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மதுரையில் மோதி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

வருகிற ஜனவரி 12 ஆம் தேதி மதுரை பொங்கல் விழாவில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமிழகம் வரவிருந்த நிலையில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12 ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் 'மோதி பொங்கல்' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொள்வார் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

தமிழகம் வரவிருந்த பிரதமர் மோதி, புதுச்சேரி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள இருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக விளக்கமளித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கேரளப் பெண் பிந்து அம்மினி மீது நடு வீதியில் வைத்து தாக்குதல்: தாக்கிய நபர் கைது

அடித்து துன்புருத்தப்படும் பெண் - மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடித்து துன்புருத்தப்படும் பெண் - சித்தரிப்புப் படம்

கேரளாவில் தடையை மீறி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றதாகக் கூறப்பட்ட பிந்து அம்மினி கோழிக்கோடு கடற்கரையில் வைத்து திடீரென ஒருவரால் தாக்கப்பட்டார். அந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருவதாக இந்து தமிழ்த்திசையில் பிரசுரமாகியுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற நடைமுறை காலம் காலமாக இருந்து வந்தது. இந்த நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பைக் காரணமாக வைத்துப் பெண்கள் சிலர் ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்றதால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது. இதில் பிந்து அம்மினியும் ஒருவர்.

இந்த நிலையில் இன்று காலை கோழிக்கோடு சென்ற அவரை ஒருவர் கீழே தள்ளி சரமாரியாக அடித்துள்ளார். கோழிக்கோடு கடற்கரை சென்ற அவரை ஒருவர் இப்படி அடித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

தன்னைச் சிலர் தாக்க வரக்கூடும் என முன்பே போலீஸில் சொன்னதாகவும், போலீஸ் தான் அளித்த புகாரைக் கண்டுகொள்ளவில்லை எனவும் பிந்து அம்மினி புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: