ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20வரை நீதிமன்ற காவல் - கைது பற்றி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் - முழு விவரம்

ராஜேந்திர பாலாஜி
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20ஆம் தேதிவரை காவலில் வைத்திருக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜியை, பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி மத்தியில் சிறையில் வைத்திருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, ராஜேந்திர பாலாஜி கைது தொடர்பாக அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரது கைது நடவடிக்கையில் இத்தனை அவசரம் காட்ட வேண்டியது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறது.

`முன்ஜாமீன் மனுவை நாங்கள்தான் ஜனவரி 6ஆம் தேதி எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தோம். ஆனால், ஒருநாள் அவகாசம் இருக்கும்போது ஒரு நாள் முன்னதாக அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாடு அரசின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3.10 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் புகார் கூறியிருந்தார்.

இந்தப் புகார் மனுவை விசாரித்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். இதன்பிறகும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக ஒன்பது புகார்கள் ராஜேந்திர பாலாஜி மீது கொடுக்கப்பட்டன.

இதனால், காவல்துறை தன்னைக் கைது செய்யலாம் என்பதை அறிந்த ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதையடுத்து, எட்டு தனிப்படைகளை அமைத்து டெல்லி, கர்நாடகா, கேரளா எனப் பல மாநிலங்களில் போலீஸார் அவரைத் தேடி வந்தனர். சுமார் 18 நாள்களாக இந்தத் தேடுதல் வேட்டை நீடித்தது.

இதுதொடர்பாக, ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான உறவினர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் எனப் பலரையும் போலீஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். ஆனால், எங்கு தேடியும் ராஜேந்திர பாலாஜி கிடைக்கவில்லை.

ராஜேந்திர பாலாஜி

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர் தங்கியிருப்பதை அறிந்து அவரைப் பின்தொடர்ந்து சென்று போலீஸார் கைது செய்தனர். அவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ.க பிரமுகர் ராமகிருஷ்ணன், நாகேஷ், ரமேஷ் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலத்துக்கு அழைத்து வந்தனர்.

ஆவின் மோசடி வழக்கில் சுமார் 3 மணி நேரம் வரையில் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியின் முன்பு ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்நது, 20 ஆம் தேதி வரையில் ராஜேந்திர பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

முன்னதாக, தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (6 ஆம் தேதி) விசாரணைக்கு வரவிருந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன்பாக இன்று ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, `ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்வதில் ஏன் இவ்வளவு அவசரம்? எனக் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், ` நீதிமன்றத்தின் மீது தமிழ்நாடு அரசு வைத்துள்ள மரியாதை இதுதானா?' எனவும் கூறியுள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி
படக்குறிப்பு, வழக்கறிஞர் இன்பதுரை

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞரும் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரை, ``ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழக காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமணா தலைமைலான மூன்று நீதிபதிகள் அடங்கிய முதலாவது அமர்வு முன்பாக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ` இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும் பழிவாங்கும் உணர்வுடனும் போடப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் நேற்று ராஜேந்திர பாலாஜியை கைது செய்துள்ளனர். நாங்கள் கடந்த 28 ஆம் தேதி முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக இந்த வழக்கை ஆறாம் தேதி (இன்று) எடுத்துக் கொள்வதாகக் கூறியிருந்தீர்கள். அதற்குள் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் மாரீஸ் குமாரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அது தவறு என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சுட்டிக் காட்டியுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும்போதே அவரைக் கைது செய்தது விதிகளுக்கு முரணானது' என்று வாதிட்டார்.

அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

இதற்கு மூன்று நீதிபதிகளும் தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தங்களின் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தலைமை நீதிபதி விசாரணையின் போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியை நோக்கி` உச்ச நீதிமன்றம் உறங்குவதாக நினைக்கிறீர்களா? உச்ச நீதிமன்றம் விடுமுறையில் இருந்தது. அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி

நாங்கள்தான் ஆறாம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தோம். ஒருநாள் அவகாசம் இருக்கும்போது அவரை அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உச்ச நீதிமன்றத்தின் மீது தமிழ்நாடு அரசு வைத்துள்ள மரியாதை இதுதானா? இதனை நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்கிறோம். அவரது வழக்கறிஞரை தொந்தரவு செய்தீர்களா?' என்றனர்.

இதற்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, எனக்கு அதைப் பற்றி தெரியவில்லை. அவரைக் கைது செய்துள்ள விவரத்தை மட்டுமே என்னிடம் தெரியப்படுத்தியுள்ளனர். விரிவான தகவல்களை அரசிடம் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்.

`உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கைது செய்யக்கூடாது என தெரியாதா?' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதன்பிறகு மூத்த வழக்கறிஞர் கிரி வாதிடும்போது, ` இந்த வழக்கில் இன்னும் 3 பேரைக் கைது செய்ய உள்ளனர். அவர்களில் ஒருவர் வழக்கறிஞர்' என்றார். இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்யக் கூடாது என நீதிபதிகள் தடை விதித்தனர்.

இதில், வழக்கின் முதலாவது குற்றம்சாட்டப்பட்ட நபரான நல்லதம்பியின் வழக்கறிஞர், `நல்லதம்பிக்கு முன்ஜாமீன் வேண்டும்' எனக் கேட்க, `நீங்கள் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்' என்று கூறிய நீதிபதிகள். இந்த வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளனர்'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: