ராஜேந்திர பாலாஜி போலீஸ் வலையில் சிக்கியது எப்படி? இனி என்ன நடக்கும்?

ராஜேந்திர பாலாஜி
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதன் மூலம் தனிப்படை போலீஸாரின் 18 நாள் தேடுதல் பணி முடிவுக்கு வந்துள்ளது. ` இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது நபராக ஆக இருக்கும் ராஜேந்திர பாலாஜியை தேடி வந்ததில் உள்நோக்கம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவரை கைது செய்துள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க வழக்கறிஞர்கள்.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் (2016-21) பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது ரவீந்திரன் என்பவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். அந்த மனுவில், ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3.10 கோடி ரூபாயை ராஜேந்திர பாலாஜி ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதில் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான நல்லதம்பி என்பவர் மூலம் பணம் கைமாறப்பட்டதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, வேலை வாங்கித் தருவதாகக் கூறி ராஜேந்திர பாலாஜி மோசடி செய்ததாக மேலும் ஒன்பது புகார்கள் பதிவானது. இந்த வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் பெறுவதற்காக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இது மோசடிக்குரிய குற்றம் என்பதால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பல மாநிலங்களில் தேடுதல் வேட்டை

இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்கு விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் முயன்றனர். ஆனால், மாவட்டத்தில் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, கர்நாடகம், டெல்லி எனப் பல மாநிலங்களில் அவரைத் தேடி வந்தனர். அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், வழக்கறிஞர்கள் எனப் பலரையும் போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால், ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார் எனக் கண்டறிய முடியவில்லை.

ஒரு கட்டத்தில் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரீஸ் என்பவர் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் முறையிடவே, வீட்டுக்குள் சோதனை நடத்திய ஆய்வாளர் சிவபாலனை காணொலி விசாரணையில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. `வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்துவதற்கு மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெறப்பட்டதா?' எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதில் அளித்த காவல் ஆய்வாளர் சிவபாலன், மாவட்ட எஸ்.பியின் அனுமதியின் பேரிலேயே சோதனை நடத்தியதாக கூறினார். இதையடுத்து `மாவட்ட எஸ்.பி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கர்நாடகாவில் சிக்கியது எப்படி?

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.கவினர், முன்னாள் அமைச்சருக்கு வேண்டியவர்கள் எனப் பலரிடமும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் வைத்து ராஜேந்திர பாலாஜியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருடன் பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், அவருடைய உதவியாளர்கள் நாகேஷ், ரமேஷ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்தவர்களின் செல்போல் பேச்சுக்களை அடிப்படையாக வைத்தே, போலீஸார் நெருங்கியதாகவும் அ.தி.மு.க வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ராஜேந்திர பாலாஜி

இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு விருதுநகர் மாவட்டத்துக்கு ராஜேந்திர பாலாஜி அழைத்து வரப்பட உள்ளதாகவும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பிறகு போலீஸ் கஸ்டடிக்குள் அவரைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 18 நாள்களாக ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் அவருக்கு உதவிய நபர்களும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

டெல்லி, கேரளா என சுற்றினாலும் கர்நாடகாவை மையமாக வைத்து போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதன் பின்னணியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருக்கு வேண்டிய நபர்கள் உதவி செய்வதை தனிப்படை போலீஸார் கண்டறிந்ததும் ஒரு காரணம் எனவும் அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கின்றனர்.

ஏ1 மீது ஏன் நடவடிக்கை இல்லை?

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரை, `` நாளை உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவரை அவசரம் அவசரமாக கைது செய்துள்ளனர். இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன'' என்கிறார்.

``ராஜேந்திர பாலாஜி வழக்கில் புகார் கொடுத்த ரவீந்திரன் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்தப் பத்திரத்தில், ` நான் நல்லதம்பியிடம்தான் பணம் கொடுத்தேன். அந்தப் பணம் திரும்ப வராததால் 28.8.2021 அன்று போலீசாரிடம் புகார் கொடுத்தேன். கடந்த 1.10.21 அன்று பணத்தை செட்டில் செய்துவிடுவதாக போலீசார் முன் உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு நல்லதம்பி சென்றார். ஆனால் அன்றைய தினம் போலீசாரிடம் கேட்டபோது, `நல்லதம்பி அந்த பணத்தை ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்துவிட்டதாக கூறிவிட்டார். எனவே நீங்கள் ஐ.ஜியிடம் புதிய புகார் கொடுங்கள்' என்றனர். எனவே, ஐ.ஜியிடமும் புகார் கொடுத்தேன். உண்மையில் நான் ராஜேந்திர பாலாஜியை நேரில் பார்க்கவேயில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் இருந்தே இது பொய் வழக்கு என்பது நிரூபணமாகிறது'' என்கிறார் இன்பதுரை.

தொடர்ந்து பேசுகையில், `` நாளை உச்ச நீதிமன்றத்தில் இந்த உண்மைகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்திலேயே போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாக நல்லதம்பி இருக்கிறார். இரண்டாவது குற்றவாளியாகவே ராஜேந்திர பாலாஜி சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது வரையில் ஏ1 ஆக சேர்க்கப்பட்ட நல்லதம்பி வெளியில் உலவிக் கொண்டுதானே கொண்டிருக்கிறார்? முதல் குற்றவாளியே சுதந்திரமாக விட்டுவிட்டு இரண்டாம் குற்றவாளியாக உள்ள ராஜேந்திர பாலாஜியை மட்டும் பிடிக்க சொல்லி எந்த சட்டம் சொல்கிறது? அவரை சிறையிலடைக்க காவல்துறை இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கான காரணம் என்ன?'' எனக் கேள்வி எழுப்புகிறார்.

அவமானப்படுத்துவதுதான் நோக்கம்

ராஜேந்திர பாலாஜி

பட மூலாதாரம், Rajendra Balaji FB

படக்குறிப்பு, ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர்

மேலும், ``ராஜேந்திர பாலாஜி வெளியில் இருந்தால் சாட்சியைக் கலைத்துவிடுவார் எனவே அவரை கைது செய்யவேண்டிய அவசியம் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர். அப்படியானால் ஏ1 ஆக இருப்பவர் சாட்சியைக் கலைக்க மாட்டாரா? இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்து அவரை அவமானப்படுத்த வேண்டும். அதன்மூலம் அ.தி.மு.கவை களங்கப்படுத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க அரசின் திட்டம்'' என்கிறார்.

``அப்படியானால், சட்டரீதியாக சந்திக்காமல் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?'' என்றோம். `` அவரை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என எட்டுக்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்தனர். தொடர்ந்து அடுக்கடுக்காக பொய் வழக்கு போடுகின்றனர். அதனால் உச்ச நீதிமன்றத்தின் துணையோடு இந்த வழக்கை எதிர்கொள்ள நினைத்தார். அது அவரது சட்ட உரிமை. இந்த வழக்கை சட்டப்படியாக சந்தித்து நிரபராதியாக ராஜேந்திர பாலாஜி வெளியில் வருவார்'' என்றார்.

தி.மு.க சொல்வது என்ன?

அ.தி.மு.க தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான ராஜீவ்காந்தி, `` இது பழைய வழக்கு. மதுரை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்றபோது, ` இது பிணை வழங்க முடியாத குற்றம்' என நீதிமன்றம் தெரிவித்தது. ரவீந்திரன் கொடுத்த புகாரில் நல்லதம்பி பணம் வாங்கியதாக இருந்தாலும், ராஜேந்திர பாலாஜியின் அதிகாரத்தை வைத்துத்தான் இந்தப் பணம் வாங்கப்பட்டது. இவர் அரசு ஊழியர் என்பதற்காகத்தான் லஞ்சம் வாங்கப்பட்டது. அதனால்தான் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எங்களால் நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது,'' என்கிறார்.

``அரசியல் பழிவாங்கும் நோக்கம் இருப்பதாகக் கூறுகிறார்களே?'' என்றபோது, ``அப்படி எந்த நோக்கமும் அரசுக்கு இல்லை. இந்த வழக்கில் ஏ1 ஆக குற்றம் சாட்டப்படும் நல்லதம்பியும் கைது செய்யப்படுவார். மோசடி வழக்கில் முகாந்திரம் இருந்ததால்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளியூர்களுக்கு ராஜேந்திர பாலாஜி தப்பிச் சென்றார். கொலைக்குற்றத்தைவிட பெரிய குற்றமாக, மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டுவதைப் பார்க்கிறோம். அதனால் அரசு தன்னுடைய கடமையைச் செய்கிறது,'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: