தி.மு.க vs அ.தி.மு.க: அம்மா மினி கிளினிக் மூடல் - ஜெயலலிதா புகழை மங்கவைக்கும் முயற்சியா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு முழுவதும் அம்மா மினி கிளினிக் மூடப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். `மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக இந்தத் திட்டத்தை மூடுகிறார்கள்' என்கிறார் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை செவ்வாய்க்கிழமை காலையில் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டமானது ஓராண்டு திட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. பல இடங்களில் இது தற்காலிக மருத்துவமனையாகத்தான் இருந்துள்ளது. தற்போதைய ஆட்சியில் நீண்டகால மருத்துவத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்கள் வேறு பணிகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மார்ச் 31 வரையில் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் கூடுதலாக 1,820 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களும் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்,'' என்றார்.
மேலும், ''அம்மா மினி கிளினிக்குகளால் எவ்வளவு பேர் சிகிச்சை பெற்றார்கள் என்ற விவரத்தை அ.தி.மு.கவால் தர முடியுமா?' எனவும் மா.சுப்ரமணியன் கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், ma subramanian facebook
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ''ஏழை எளிய மக்கள் கிராமப்புறங்களிலும் நகரப் பகுதிகளிலும் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு அம்மா பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இத்திட்டம் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்துக்குரியது. இது ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு'' என விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆட்சிக் காலத்தில் 1950 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால், இந்தத் திட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை அடையவில்லை எனவும் இதனை மூடுவதன் மூலம் மாதம்தோறும் 26 கோடியே 71 லட்சத்தை சேமிக்க முடியும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், 196 மினி கிளினிக் கட்டடங்களை நகர்ப்புற சுகாதார மையங்களாக மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், Tndipr
அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பு செயலாளருமான வைகைச்செல்வன், `` கிராமங்களில் மினி கிளினிக்குகளை ஏற்படுத்தி மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மிகுந்த உதவியாக இத்திட்டம் இருந்தது. அது தற்போது காழ்ப்புணர்ச்சி கருதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக அந்த வரலாற்றை மாற்றுவதற்கு தி.மு.க முனைகிறது. ஒரு புதிய அரசு வந்தால் பழைய அரசின் சாதனைகளை மக்களிடத்தில் மறக்கடிக்கச் செய்வதும் ஆகச் சிறந்த திட்டங்களை அழித்துவிடும் வகையில் தி.மு.க அரசு செயல்படுவது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'' என்கிறார்.
மேலும், `` ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கினர். இதுபோல் நடக்காது என முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் நடந்தது வேறு. ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட 8 அமைச்சர்களை தி.மு.க இறக்குமதி செய்துள்ளது. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட திட்டங்களை நசுக்குகிறது. ஒரு திட்டம் அதன் நோக்கத்தை எட்டுவதற்கு போதிய அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் காரணங்களைக் கூறுவது என்பது திட்டமிட்ட பொய்ப் பிரசாரம்'' என்கிறார்.
அ.தி.மு.க முன்வைக்கும் விமர்சனம் தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி, `` அம்மா உணவகம் அப்படியே செயல்பட்டு வருகிறது. அதே பெயரிலேயே அது தொடர்ந்து நடக்கிறது. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எந்தவொரு திட்டத்தையும் நாங்கள் மூடவில்லை. மினி கிளினிக்குகளை மூடுவதால் மட்டுமே ஒருவரது புகழ் மங்கிவிடாது. அது தவறான பேச்சு'' என்கிறார்.
`` மினி கிளினிக்குகளை பெயர் அளவுக்கு திறந்து வைத்துவிட்டு ஊரை ஏமாற்றினார்கள். அம்மா உணவகத்திலும் கடந்த அரசு கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தியது. எடப்பாடி தனது பெயருக்காக மட்டுமே இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார். தன்னை உருவாக்கிய சசிகலாவையே எடப்பாடி மறந்துவிட்டார். பிறகு ஜெயலலிதா மட்டும் எப்படி அவர் நினைவில் இருப்பார்? ஏதோ பேச வேண்டும் என்பதற்காக விமர்சிக்கிறார்'' என்கிறார்.
பிற செய்திகள்:
- திருப்பதி கோயில் நில வழக்கு: 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு
- சத்ய பால் மாலிக்கின் சர்ச்சை பேச்சுகள்: மோதி, அமித் ஷா பொறுமைக்கு என்ன காரணம்? யார் இவர்?
- வங்கதேசம் மீதான அமெரிக்காவின் கோபம் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?
- புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு - கோபத்தில் உறவினர்கள் சாலை மறியல்
- சீனா: கொரோனா தனிமைப்படுத்துதலுக்காக நள்ளிரவில் கொண்டு செல்லப்படும் மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












