திருப்பதி ஏழுமலையான் கோயில் நில வழக்கு: 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு

திருப்பதி கோயில்

இன்று இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கே 3,402 ஏக்கர் நிலம் சொந்தம் என 23 ஆண்டுகள் நடந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

திருப்பதியில் பல இடங்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக சொத்துகள் உள்ளன. அதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், வேத பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், பத்மாவதி விருந்தினர் மாளிகை, தேவஸ்தான செயல் அலுவலர், இணை செயல் அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக 3,402 ஏக்கர் நிலம் உள்ளது.

இவை அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என திருப்பதியை சேர்ந்த கங்காராம் மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஓம்கார் தாஸ் வழக்கு தொடர்ந்தார். கடந்த 1998ம் ஆண்டு தொடர்ந்த இவ்வழக்கு இனாம் துணை தாசில்தார் நீதிமன்றத்தில் 23 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் தேவஸ்தானத்திற்கு சாதகமாக இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது என்று அச்செய்தி கூறுகிறது.

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3,729 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்கிறது தினமணி செய்தி. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.80 லட்சம் கோடியாகும்.

கடந்த 2021-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் மட்டும் நாட்டின் ஏற்றுமதியானது 30,000 கோடி டாலரை கடந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.22.50 லட்சம் கோடியாகும்.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி அளவானது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது என வா்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தினமணி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

15 - 18 வயதினருக்கு தடுப்பூசி - முதல் நாளில் 41 லட்சம் பேர்

இந்தியாவில் 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கிய முதல் நாளான நேற்று 41 லட்சத்துக்கும் மேலான சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று ஆரம்பகட்ட தரவுகள் தெரிவிப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக முறையே 7,71,615 மற்றும் 5,55,312 டோஸ்கள் 15 - 18 வயதினருக்கு செலுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 1,87,710 ஆக உள்ளது.

41,27,468 டோஸ் கோவேக்சின் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 146.71 கோடியைத் தொட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: