தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி உரை: 20 முக்கிய புள்ளிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2022ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார்.

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியவற்றில் முக்கியமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

  • ஜனவரி 12-ஆம் நாள் அயலகத் தமிழர் நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாள் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும். வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உள்ள தமிழர் நல சங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அயலகத் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களில் கட்டமைப்புகளின் மேம்பாட்டுக்கு உதவ 'தாய் மண் திட்டம்' வழிவகை செய்யும்.
  • தமிழ்நாடு அதிக அளவில் கனிம வளங்களைக் கொண்டு இருந்தாலும் அதற்கேற்ற வருவாயை மாநில அரசு பெறுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக கனிமங்களில் இருந்து பெறப்படும் வருவாயில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்கும் அரசிற்கு உரிய வருவதற்கும் 'இயற்கை வள மேலாண்மை திட்டம்' வகுக்கப்படும்.
  • முல்லை பெரியாறு அணையின் தற்போது அனுமதிக்கப்பட்ட அளவான 142 அடி உயரத்திற்கு அணை நீரை இந்த ஆண்டு தொடர்ந்து பல நாட்கள் தேக்க முடிந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அணையின் முழு கொள்ளளவான 152 அடியை எட்டத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.
  • இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழ்விட சூழல் மேம்படுத்தும் வகையில் முதல் கட்டமாக 176 கோடி ரூபாய் செலவில் 3510 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் உயர்த்தப்பட்ட பணக்கொடை , திறன் மேம்பாட்டுப் பயிற்சி, கல்வி ஊக்கத்தொகை, இலவச ஆடைகள், பாத்திரங்கள், இலவச எரிவாயு இணைப்பு போன்ற பல்வேறு நலத் திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
  • இயற்கையோடு இயைந்த வாழ்வு என்ற தமிழர்களின் தொன்மையான பண்பாட்டை மீட்டெடுக்கவும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிகளால் உண்டாகும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மீண்டும் 'மஞ்சப்பை' எனும் மக்கள் இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
  • தமிழ்நாட்டிலுள்ள 24,345 அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் திறன் மிக வகுப்பறைகள் உயர்ந்து வரும் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப புதிய கட்டடங்கள், 6992 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், நவீன அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், பள்ளிகளுக்கு அகன்ற அலைவரிசை வசதி, மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படும்.
  • முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த 181 கோடி ரூபாய் செலவிடப்படும்.
  • தரவு மையங்களில் 30,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்து தரவு மையம் முதலீடுகளில் முகவரியாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. அதிக முதலீட்டை ஈர்ப்பதற்காக, தரவு மையங்கள் அமைப்பதற்கு 'தரவு மையக் கொள்கை 2021' என்ற புதிய கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.
  • கடந்த ஏழு மாதங்களில் மூன்று முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி 56 ஆயிரத்து 730 கோடி ரூபாய் முதலீட்டில் 1,74,999 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க கூடிய 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இவற்றில் இதுவரை 21508 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
  • 1997 முதல் 2001ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட 145 பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் இந்த ஆண்டு முதல் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம்

11. 500 கோடி ரூபாய் மதிப்பில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம், 430 மில்லியன் டாலர் மதிப்பில் சென்னை மாநகர ககூட்டாண்மை திட்டம், 905 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மாநகர திறன்மிகு போக்குவரத்து அமைப்பு போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி, சாலைகள், போக்குவரத்து, வெள்ள நீர் வடிகால், குடிநீர் வழங்கல், பொழுதுபோக்கு உள்ளிட்ட சமூக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

12. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012இன் கீழ் நிவாரணம் வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் இழப்பீட்டு தொகை வழங்கவும் 'தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு நிதி' என்ற ஒரு சிறப்பு நிதியை அரசு உருவாக்கியுள்ளது.

13. இந்த நிதியாண்டில் 4,02,829 உறுப்பினர்களைக் கொண்ட 29, 425 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.

14. பட்டியலின, பழங்குடி மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்காக தன்னாட்சி அதிகாரங்களுடன் சட்டப்படி அமைக்கப்பட்ட 'தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தை' அரசு உருவாக்கியதன் மூலம் அவர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

15. இந்த அரசு பொறுப்பேற்ற பின் திருக்கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 1628.61 கோடி ரூபாய் மதிப்பில் 432.82 ஏக்கர் பரப்பளவுள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு கால பூஜை திட்டத்தில் 12959 கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

16. நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே தொழில் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேவையற்றவை என்ற இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

17. தமிழ் நாட்டில் இருந்து ஹஜ், ஜெருசலேம் போன்ற புனித பயணம் மேற்கொள்வதற்கான மானியத்தை அரசு தொடர்ந்து வழங்கும். சிறுபான்மையினரை கவலையடையச் செய்தது திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற இந்த சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

18. மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை கண்டறிய மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மையம் ஒன்றை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

19. சுற்றுலா மூலம் பொருளாதாரம் பொலிவு பெறுவதற்கான திட்டம் மாநில அரசால் வகுக்கப்படும். இந்த ஆண்டு சாகச சுற்றுலாவை உள்ளடக்கிய புதிய சுற்றுலா கொள்கை வெளியிடப்படும்.

20. நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்புகளைப் 700 கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: