ராஜேந்திர பாலாஜி: அதிமுக முன்னாள் அமைச்சர் கர்நாடகாவில் கைது, முடிவுக்கு வந்த 18 நாள் தேடுதல் வேட்டை

ராஜேந்திர பாலாஜி

பட மூலாதாரம், facebook

படக்குறிப்பு, ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, கர்நாடகாவில் தனிப்படை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 18 நாள்களாக நடந்து வந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது. இதன் பின்னணியில் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரும் செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்தப் புகாரின் அடிப்டையில் கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக மேலும் ஒன்பது புகார்கள் அவர் மீது கூறப்பட்டன.

இந்த மோசடி வழக்கில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். ஆனால், அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதேநாளில், அ.தி.மு.க கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராஜேந்திர பாலாஜி, அதன்பிறகு எங்கே சென்றார் என யாருக்கும் தெரியவில்லை.

இதற்காக ஐந்து தனிப்படைகளை விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகர் ஏற்படுத்தினார். ஆனால், எங்கு தேடியும் அவரை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்பின்னர், மேலும் 3 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒருகட்டத்தில், `கேரளாவில் பதுங்கியிருக்கிறார், கர்நாடகாவில் தலைமறைவாக இருக்கிறார்' என்றெல்லாம் யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியாயின.

Rajendra balaji

பட மூலாதாரம், Rajendra balaji facebook

படக்குறிப்பு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ராஜேந்திர பாலாஜி

தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் போலீஸார் கண்காணித்து வந்தனர். முன்னாள் அமைச்சர் ஒருவரின் கார் ஓட்டுநர் உள்பட சிலரை போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில், அவர் வெளிமாநிலத்துக்குத் தப்பிச் சென்றதாகவும் தகவல் கிடைத்ததாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் புகார் கொடுத்தவர்களிடம், யார் மூலம் எங்கு பணம் கொடுக்கப்பட்டது என்ற விசாரணையும் நடைபெற்று வந்தன. இருப்பினும், ராஜேந்திர பாலாஜி கிடைத்தால் மட்டுமே மேலும் விசாரணையை துரிதப்படுத்த முடியும் எனக் காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ` எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜேந்திர பாலாஜியை தேடி வரும் பணிகள் நடக்கின்றன. இதுதொடர்பான விசாரணையில் 3 கோடி ரூபாயை அவர் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினில் நடைபெற்ற மொத்த ஊழலும் அவரால் மட்டும் நடைபெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் நடமாட முடியாத சூழல் வரும் என்றெல்லாம் அவர் பேசி வந்தார். தற்போது அவர்தான் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்' என்றார்.

தொடர்ந்து, கேரளா, கர்நாடகா, கோயம்புத்தூர், திருச்சி என பல பகுதிகளில் தனிப்படை முகாமிட்டது. ஒருகட்டத்தில் டெல்லியில் பதுங்கியிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கான பணிகளில் ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டிருந்தனர். `ஓரிரு நாள்களில் ஜாமீன் கிடைக்கலாம்' எனக் கூறப்பட்ட நிலையில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற பகுதியில் ராஜேந்திர பாலாஜிகைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: