பள்ளி, கல்லூரிகள் திறப்பு - முதல் நாள் அனுபவத்தை பகிரும் தமிழகம், புதுச்சேரி மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, மேகாலயா, திரிபுரா உள்பட பல்வேறு மாநிலங்களில் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு இன்று 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மாணவர்கள் நேரில் வருகை தந்தனர்.
இதையொட்டி பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், மாணவர்களின் பெற்றோர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வகுப்புகளில் பங்கேற்க தாமாக முன்வந்து ஒப்புகை வழங்குகிறோம் என பெற்றோர் படிவத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மாணவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கடும் நிபந்தனைகள்
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஏராளமான பெற்றோர் கொரோனா பரவல் அச்சம் காரணமாக தங்களுடைய பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை.
மற்றவர்கள் பள்ளி வாயில்வரை வந்து தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். வகுப்புறைகளில் சமூக இடைவெளி விட்டு அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டதால் அவற்றில் அமர்ந்தவாறு மாணவர்கள் வகுப்புகளை கவனித்தனர்.
ஒருவரையொருவர் தொட்டுப் பேசக்கூடாது, கட்டிப்பிடிக்கக் கூடாது, இடைவேளை நேரத்தில் மாணவர்கள் குழுவாக நிற்கக் கூடாது போன்ற கடும் நிபந்தனைகளால் தங்களுடைய மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு மாணவர்கள் வகுப்புகளில் பங்கெடுத்தனர்.
உணவு இடைவேளையும் வகுப்புகள் வாரியாக அவகாசம் விட்டு, விட்டு வழங்கப்பட்டதால் மாணவர்கள் ஒரே நேரத்தில் அதிகமாக கூடுவது தவிர்க்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பள்ளி சீருடை அணிந்து வரும் மாணவர்கள் தங்களுடைய பள்ளி அடையாள அட்டையை காண்பித்தால் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து வந்தவர்களுக்கு கெடுபிடி
தென் தமிழகத்தில் குறிப்பாக கேரள மாநிலத்துக்கு அருகே உள்ள தமிழக மாவட்டங்களில் படிக்கும் மாணவர்கள் கேரளாவுக்கு சென்று வந்தாலோ இல்லை அங்குள்ள எல்லை மாவட்டங்களில் இருந்து வருவதாக இருந்தாலோ அவர்கள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பள்ளி, கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
சென்னையில் அரசு மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.
"கொரோனா பரவும் என்ற பீதிக்கு மத்தியில்தான் பள்ளிகளுக்கு வருகிறோம். ஆனாலும், இங்கு பழைய நண்பர்களை பார்ப்பது, ஆசிரியர்களுடன் நேரடியாக பேசுவது, பாடங்களில் சந்தேகங்களை கேட்பது என எல்லாமே நேரடியாக நடப்பதால் இங்கு வருவதை விரும்புகிறோம்," என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
ஒரு சில கல்லூரி மாணவர்கள், "கெடுபிடி அதிகம் இருந்தாலும், நாளடைவில் இது எங்களுக்கு பழகி விடும். கல்லூரிகளுக்கு மீண்டும் நேரடியாக வந்ததில் மகிழ்ச்சி," என்று தெரிவித்தனர்.
மாநில அளவில் கிட்டத்தட்ட அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா தடுப்பூசி குறைந்தபட்சம் முதல் டோஸ் போட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சில கல்லூரிகளில் தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சேலத்தில் மாணவ, மாணவிகள் ஆர்வம்

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று அரசு உத்தரவின்படி 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தன.
சேலம் மாவட்டத்தில் 295 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், 317 தனியார் பள்ளிகள் என மொத்தமாக 612 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1.83 லட்சம் மாணவ மாணவிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வருகிறார்கள்.
இதில் 295 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் முழுமையாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை தொடங்கியுள்ளன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியுடனும் ,உற்சாகமாகவும் வகுப்புகளுக்கு மாணவ, மாணவிகள் வந்தனர்.
பள்ளி திறப்பு குறித்து மாணவிகள் கூறும்போது, "ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்த முடியாமலும், புரிந்து கொள்ள முடியாமலும் இருந்தோம். தற்போது நேரடி வகுப்பு மூலம், பாடங்கள் மனதில் நன்றாக பதியும். அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்று தெரிவித்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பரவலாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தன. அங்கும் சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவிகள் கல்வி நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் 264 பள்ளிகள் திறப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் 264 பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த பள்ளிகளில் 64 ஆயிரத்து 753 மாணவ மாணவிகள் பயில்கின்றனர் 5,245 ஆசிரியர்கள் இவர்களுக்கு பயிற்றுவிக்க வருகை தந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
நீண்ட விடுமுறைக்கு பிறகு சக மாணவர்களையும் நண்பர்களையும் சந்தித்த மகிழ்ச்சியில் மாணவர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 97 சதவீதம் ஆசிரியர்களுக்கு நோய்த்தொற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வெப்பமானி கொண்டு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. முக கவசம் அணியாத மாணவ, மாணவிகளுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.
பல பள்ளிகளில் இன்று காலை இறை வணக்கத்துடன் வகுப்புகள் துவங்கின. பல மாதங்களுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் ஒருவருக்காருவர் உரையாடி மகிழ்ந்தனர.
புதுச்சேரியில் என்ன நிலை?

புதுச்சேரியில் இன்று முதல் 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களிலும் சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிக்குள் நுழையும் முன் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்பே வகுப்பறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கின.
கொரோனா தாக்கத்தால் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாத கடைசியில் இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. கொரோனா பெருந்தொற்று தணியாத நிலையில், கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமலேயே மாணவர்கள், முந்தைய பருவ தேர்வுகளின் தேர்ச்சி அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததால் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மழலையர் வகுப்புகள் நீங்கலாக பிற அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு ஆரம்பத்தில் பரவலாக ஆட்சேபம் கிளம்பினாலும், நாட்கள் செல்லச் செல்ல அந்த புதிய திட்டத்தை மாணவர்களும் பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர்.
கொரோனா தாக்கம் நீடித்ததால் 2019-20இல் அமல்படுத்தப்பட்டதை போலவே, 2020-21 கல்வியாண்டிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதே நடைமுறையை புதுச்சேரி அரசும் பின்பற்றியது.
மற்ற மாநிலங்களில் என்ன நிலை?
டெல்லி, புதுச்சேரி, தமிழ்நாடு,மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிகளுடன் சேர்த்து கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அங்கு பள்ளிகள் திறப்புக்கு 14 நாட்களுக்கு முன்பாக ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியாவது ஆசிரியர்கள் போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்தபோதும், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவை நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து உள்ளுறை கூட்டத்துக்குப் பிறகே முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளன.
இதேபோல, டெல்லியில் உள்ள மத்திய அரசு கல்வி நிலையங்களான கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகளும் இன்று திறக்கப்படவில்லை. ஆன்லைன் மாணவர்களுக்கான வகுப்பு பாடங்களை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி முதல்வர்களுக்கு கேந்த்ரியா வித்யாலயா தலைமையகம் உத்தவிட்டிருந்தது.
பஞ்சாப், சண்டீகர், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன. அந்த மாநிலங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி, கல்லூரி ஊழியர்கள் குறைந்தபட்சம் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ஆவது போட்டிருக்க வேண்டும் என மாநில அரசுகள் நிபந்தனை விதித்துள்ளன.
தெலங்கானாவில் நீதிமன்றம் தலையீடு
தெலங்கானா மாநிலத்தில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர அரசு அனுமதித்திருந்தாலும், அவர்களை கல்வி நிலைய நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தாமாக முன்வந்து விரும்பும் மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் கல்வி நிலையங்களுக்கு வரலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், அக்டோபர் 4ஆம் தேதி பள்ளிகள் அனைத்தையும் முழுமையாக இயக்க அரசு முடிவு செய்திருப்பதால், அதற்கு முன்பாக மாநிலத்தில் உள்ள கொரோனா சூழ்நிலை தொடர்பான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தெலங்கானாவில் பல தனியார் பள்ளிகள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் திட்டத்தை ஊக்குவித்துள்ளன.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இன்னும் கல்லூரிகளை தொடங்குவது குறித்து முடிவு செய்யவில்லை.
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













