அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை

மரங்கள்

பட மூலாதாரம், MALIN RIVERS

    • எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
    • பதவி, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் செய்தியாளர்

உலகின் 30 சதவிகித காட்டு மர இனங்கள் அழிவை எதிர்கொண்டிருப்பதாக புதிய ஆய்வு மதிப்பீடு ஒன்றின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மக்களால் நன்கு அறியப்பட்ட ஓக் மரங்கள் முதல் வெப்பமண்டல மரங்கள் வரை அழிந்து போகும் இனங்கள் பட்டியலில் உள்ளன.

ஒட்டுமொத்தக் கணக்கீட்டின்படி 17,500 மர இனங்கள் ஆபத்தில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். அழிவின் விளிம்பில் உள்ள பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன ஆகியவற்றைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு எண்ணிக்கையாகும்.

காடழிப்பு, மரம் வெட்டுதல், பருவநிலை மாற்றம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைந்து எடுக்க வேண்டும் என சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"பூமியில் நம்மிடம் கிட்டத்தட்ட 60,000 மர இனங்கள் உள்ளன. இவற்றில் எவையெல்லாம் ஆபத்தில் உள்ளன, என்னென்ன மாதிரியான பேராபத்துக்கள் அவற்றுக்கு ஏற்பட இருக்கின்றன, எவற்றையெல்லாம் உடனடியாகப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது, அவை எங்கெல்லாம் இருக்கின்றன என்பது பற்றி முதல் முறையாக நமக்குத் தெரிய வந்திருக்கிறது" என்கிறார் லண்டன் கியூவில் உள்ள தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த மலின் ரிவர்ஸ்.

உலகம் நலமாக இருக்க வேண்டுமெனில் நம்மிடம் பல்வகையான மரங்கள் இருப்பது அவசியம் என்கிறார் சர்வேச மரங்கள் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த நிபுணர் சாரா ஓல்ட்பீல்ட்.

"ஒவ்வொரு மர இனத்திற்கும் சுற்றுச்சூழலில் தனித்துவமான பங்கு உள்ளது," என்கிறார் அவர். "உலகின் 30% மரங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதால், நாம் உடனடியாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்."

"உலக மரங்களின் நிலை" என்று அழைக்கப்படும் இந்த அறிக்கை உலகில் அறியப்பட்ட 60,000 மர இனங்களில் குறைந்தது 30% அழிவை எதிர்கொள்வதாக எச்சரிக்கிறது.

சுமார் 142 இனங்கள் ஏற்கனவே காடுகளிலிருந்து மறைந்துவிட்டன, அதே நேரத்தில் 442 மர இனங்களில் தலா 50-க்கும் குறைவான மரங்களே இருப்பதால் அவை அழிவுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றன.

உலக அளவில் மரங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் என்னென்ன என்பது குறித்து ஆய்வறிக்கையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

மரங்கள்

பட மூலாதாரம், PROF SHOUZHOUZHANGFAIRYLAKEBC

காடுகளில் பயிரிடுவதற்கான அனுமதியளிப்பது 29 சதவிதத மரங்களைப் பாதிக்கிறது, மரம் வெட்டுதல் 27 சதவிகித மர இனங்களைப் பாதிக்கிறது, கால்நடை மேய்ச்சல் மற்றும் விவசாயம் காரணமாக 14 சதவிகித மரங்கள் பாதிக்கப்படுகின்றன. வளர்ச்சித் திட்டங்களால் 13 சதவிகித மர இனங்களும், காட்டுத் தீயால் 13 சதவிகித மர இனங்களையும் பாதிக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கை பட்டியலிட்டிருக்கிறது.

பருவநிலை மாற்றம், தீவிரமான வானிலை நிகழ்வுகள், கடல் மட்ட உயர்வு ஆகியவை மரங்களுக்கு அச்சுறுத்தலாக வளர்ந்து வருகின்றன. ஆயினும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாக எதிர்காலத்துக்கான நம்பிக்கை இருப்பதாக இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் கூறுகிறார்கள்.

"மரங்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதையும், சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், அமைப்புகளை அணி திரட்டுவதற்கான வழியையும் இந்த அறிக்கை நமக்குக் காட்டியிருக்கிறது," என்கிறார் ரிவர்ஸ்.

மரங்கள்

பட மூலாதாரம், DAVID BARTHOLOMEW

மரங்களைப் பாதுகாப்பதற்கு சூழல் பாதுகாப்பு நிபுணர்கள் பல்வேறு நடவடிக்கைகளைப்பரிந்துரை செய்திருக்கிறார்கள். அவற்றில் கீழ்கண்டவை மிகவும் கவனிக்கத் தகுந்தவை

  • தற்போதுள்ள காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விரிவாக்குதல் (தற்போது அனைத்து மர இனங்களிலும் குறைந்தது 64% குறைந்தது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியில் காணப்படுகிறது)
  • தாவரவியல் பூங்காக்கள் அல்லது விதை வங்கிகளில் அழிவின் விளிம்பில் உள்ள மரங்களைப் பாதுகாக்ககலாம். இதன் மூலம் ஒரு நாள் இவை காட்டில் மீண்டும் வளரக் கூடும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. (தற்போது அனைத்து மரங்களிலும் சுமார் 30% இந்த வழியில் பாதுகாக்கப்படுகின்றன)
  • காடு வளர்ப்பு மற்றும் மரம் நடுதல் ஆகிவற்றை சரியான இடத்தில் சரியான மரத்தை வளர்த்தல் போன்ற பணிகளை அறிவியல்பூர்வமான முறையில் செய்வதற்குத் தேவையான கல்வியை வழங்க வேண்டும்.
  • மரங்களைப் பாதுகாப்பதற்கான நிதியை அதிகரிக்க வேண்டும்.

விஞ்ஞானிகள் 10 லட்சம் விலங்குகள் விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.

கடந்த 300 ஆண்டுகளில், உலகளாவிய வனப்பகுதி சுமார் 40% குறைந்துள்ளது மற்றும் 29 நாடுகள் 90% க்கும் அதிகமான வனப்பகுதியை இழந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

உலகெங்கிலும் உள்ள காடுகளை அழிப்பதில் ஏழு முக்கிய நடவடிக்கைகள் பாதிக்கும் மேலான பங்கை வகிப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

மரங்கள்

பட மூலாதாரம், DAVID BARTHOLOMEW

அழிவின் அபாயத்தில் உள்ள மரங்கள் பின்வருமாறு:

  • பாமாயில் தோட்டங்களின் விரிவாக்கத்தால் இழக்கப்படும் டிப்டெரோகார்ப்ஸ் எனப்படும் பெரிய வெப்பமண்டல மரங்கள்
  • மெக்சிகோ, சிலி மற்றும் அர்ஜென்டினாவின் சில பகுதிகளில் விவசாயம் மற்றும் வளர்ச்சியால் ஓக் மரங்கள் அழிந்துவிட்டன.
  • மடகாஸ்கரில் கருங்காலி மற்றும் ரோஸ்வுட் மரங்கள் கட்டைகளுக்காக வெட்டப்படுகின்றன
  • பராமரிக்க முடியாத தாவர சேகரிப்பின் காரணமாக மாக்னோலியா மரங்கள் அச்சுறுத்தலில் உள்ளன
  • பிரிட்டன் மற்றும் வட அமெரிக்காவில் பூச்சிகள் மற்றும் நோய்களால் இறந்து கொண்டிருக்கும் ஆஷ் உள்ளிட்ட மரங்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :