கொரோனா தடுப்பூசி இந்திய விலங்குகளுக்கு கிடைக்காத அவலம் - யார் பொறுப்பு?

விலங்குகள் கொரோனா

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் செல்லப் பிராணிகள், விலங்குகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. ''இந்தியாவில் மனிதர்களுக்கான கொரோனா தடுப்பூசியில் மட்டும் ஆர்வம் காட்டப்படுவதால் விலங்குகளின் நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது'' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். என்ன நடக்கிறது?

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இவற்றைக் களையும் வகையில் தடுப்பூசி திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

அடுத்து, மூன்றாம் அலையின் தாக்கம் வரவிருப்பதால் அதனை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் தயாராகி வருகின்றன. அதே நேரம், விலங்குகளை பாதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக சூழல் ஆர்வலர்களும் கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் நாய்கள் சிலவற்றுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவற்றை வீதியிலேயே சிலர் விட்டுச் செல்லும் அவலமும் நடந்தேறியது. அதாவது, ''மனிதர்கள் மூலமாக வளர்ப்புப் பிராணிகளை இந்த வைரஸ் தாக்கினால், அந்த விலங்குகள் மூலமாக மனிதர்களிடையே இன்னும் வேகமாக வைரஸ் பரவும்'' என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியானது.

இதன் காரணமாக சீனா உள்ளிட்ட சில நாடுகளில் வளர்ப்புப் பிராணிகள் கொல்லப்பட்டன. சில நாடுகளில் வளர்ப்புப் பிராணிகளை தெருக்களில் அலையவிடும் சூழலும் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விலங்குகள் நல அமைப்பான `பீட்டா', ''விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குத் தொற்று பரவுவதாக எந்தவித தரவுகளும் இல்லை. நாய்களைத் தாக்கும் கொரோனா திரிபுகள் வேறுபட்டவை'' என தெரிவித்திருந்தது.

வளர்ப்புப் பிராணிகளின் துயரநிலை

விலங்குகள் கொரோனா

பட மூலாதாரம், Getty Images

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளைத் தவிர விலங்குகளைத் தாக்கும் கொரோனா தொற்றை உயிரின ஆர்வலர்கள் இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். உயிரியல் பூங்காக்களில் வளர்க்கப்படும் விலங்கினங்கள் ஒரு வகை, சரணாலயங்களில் உள்ள விலங்கினங்கள் மறுவகை.

சரணாலயங்களில் மனிதர்களின் நடமாட்டம் இல்லாததால் அவை பாதிக்கப்படுவது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம், உயிரியல் பூங்காக்களில் உள்ள சிங்கம், புலி உள்ளிட்ட உயிரினங்கள் கொரோனா தொற்றால் உயிரிழப்பது தொடர்ந்தது.

சிங்கங்களின் உயிரிழப்பு

விலங்குகள் கொரோனா

பட மூலாதாரம், Getty Images

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீலா என்ற பெண் சிங்கம் கொரோனா தொற்றால் சமீபத்தில் உயிரிழந்தது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 10 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிய முடிந்தது. பின்னர் சிங்கங்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வந்தாலும் கடந்த ஜூன் 16ஆம் தேதி ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்தது.

இந்த சிங்கத்தின் மாதிரிகளை போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்துக்கு (NIHSAD) அனுப்பியதில், உயிரிழந்த சிங்கத்துக்கு கோவிட் தொற்று தாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், குஜராத், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயிரியல் பூங்காக்களிலும் வன விலங்குகள் உயிரிழந்தன. இது சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, வண்டலூர் உயிரியல் பூங்கா துணை இயக்குநர் நாக சதீஷ் கிடிஜாலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ` 3 சிங்கங்கள் மற்றும் 4 புலிகளின் மாதிரிகள் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (IVRI) சார்ஸ் கோவ் 2 (SARS CoV2) பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. அந்நிறுவனம் அனுப்பிய அறிக்கையின்படி, 4 புலிகள் மற்றும் 1 சிங்கத்தின் மாதிரிகள் `நெகட்டிவ்' என்றும் இறந்த நீலா உட்பட இரண்டு பெண் சிங்கங்களுக்கு `சார்ஸ் கோவ் 2 (SARS CoV2) பாசிட்டிவ்' எனவும் கண்டறியப்பட்டது.

மாறுபட்ட வகையான வைரஸ்

விலங்குகள் கொரோனா

பட மூலாதாரம், Getty Images

அதே நிறுவனம் எதேச்சையாக வேறு ஏதேனும் நோய்க்கிருமிகள் உள்ளனவா என ஆய்வு செய்ததில் 2 சிங்கங்களுக்கு கேனைன் டிஸ்டம்பர் வைரஸ் (CDV) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 மாதிரிகளில் `நெகட்டிவ்' என முடிவுகள் வந்துள்ளன. கோவிட் தொற்று நேரத்தில் ஏதாவது மன அழுத்தம், வேறு பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா தொற்று இருப்பது பொதுவானது ' எனத் தெரிவித்துள்ளார்.

விலங்குகள் கொரோனா

பட மூலாதாரம், Getty Images

மேலும், `4 சிங்கங்களின் மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வு போபாலில் உள்ள நிசாட் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டது. மரபணு வரிசைப்படுத்துதல் பகுப்பாய்வில் 4 சிங்கங்களின் மாதிரிகள் பாங்கோலின் பரம்பரை B.1.617.2 வகையைச் சேர்ந்தவை என்பதையும் அவை உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்திய டெல்டா வகையைச் சேர்ந்தது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11.05.2021 அன்று உலக சுகாதார அமைப்பானது, B.1.617.2 மரபணு பரம்பரை வரிசைப்படுத்துதலில் இது மாறுபட்ட வகை எனக் கூறி வகைப்படுத்தியுள்ளது. இது வேகமாகப் பரவும் தன்மை கொண்டதோடு நடுநிலைத்தன்மைக்கு குறைவானது எனவும் தெரிவித்துள்ளது' எனவும் நாக சதீஷ் கிடிஜாலா குறிப்பிட்டுள்ளார்.

விலங்குகளுக்கு தடுப்பூசி கொள்முதல்

விலங்குகள் கொரோனா

பட மூலாதாரம், Getty Images

ஆனால், விலங்குகளுக்கான தடுப்பூசியை கொள்முதல் செய்வது குறித்து இந்திய அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேநேரம், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் விலங்குகளுக்கான தடுப்பூசியை செலுத்தி வருவதில் போதிய அக்கறையை செலுத்தி வருகின்றன.

ஜூலை முதல் வாரத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் புலிகள், கரடிகள் ஆகியவற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

தொடர்ந்து ஆக்லாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இரண்டு புலிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. `அங்குள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும்கூட எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது' என்ற நோக்கில் செலுத்தப்பட்டதாக பூங்காவில் பணிபுரியும் கால்நடை சேவைகளில் துணைத் தலைவர் அலெக்ஸ் ஹெர்மன் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகளை நியூஜெர்சியில் உள்ள கால்நடை மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

பலன் கொடுத்த கார்னிவாக் கோவ்

விலங்குகள் கொரோனா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவில் விலங்குகளுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரையில் புலிகள், சிங்கங்கள், கொரில்லாக்கள் தவிர வீட்டுப் பூனைகள், நாய்கள் ஆகியவற்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தயாரிக்கப்பட்ட கார்னிவாக் கோவ் (Carnivac-Cov) தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் விலங்குகளுக்கு நல்ல பலன் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை நாய், பூனை, ஆர்டிக் நரிகளுக்கு செலுத்தப்பட்டதால் கிடைத்த பலன்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளை வாங்குவதற்கு மலேசியா, தாய்லாந்து, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம், இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு போதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ` கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், விலங்குகள் நடமாடும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் மூட வேண்டும். இவற்றில் பணிபுரியும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். விலங்குகளின் அன்றாட செயல்பாடுகளில் மாற்றம் தென்பட்டால் உடனடியாக அவற்றைக் கவனிக்க வேண்டும்' எனவும் அறிவுறுத்தியிருந்தது.

புது வகையான வைரஸா?

விலங்குகள் கொரோனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனிதர்களை தாக்கும் வைரஸ்கள் எளிதாக பரவக்கூடிய ஆபத்தில் இருப்பவை கொரில்லாக்கள்

``இந்தியாவில் விலங்குகளுக்கான தடுப்பூசியை செலுத்துவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா?" என மூத்த கால்நடை மருத்துவரும் டெல்லி உயிரியல் பூங்காவில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவருமான பன்னீர்செல்வத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` விலங்குகளுக்கு வரக் கூடிய தொற்றை குணப்படுத்துவதற்கு போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக, உயிரியல் பூங்காக்களில் விலங்குகளை பாதித்துள்ளது ஒரு புதுவகையான வைரஸாகப் பார்க்கப்படுகிறது. மனிதர்களுக்கு முதல்முறையாக வந்த கொரோனாவுக்கும் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தும் திரிபுகளைப் போலவே விலங்குகளுக்கும் ஏற்பட்டுள்ளது" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``கொரோனா வைரஸ் என்பது நாய், பூனை ஆகியவற்றில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. நாய்களுக்கு வருவதை கேனைன் டிஸ்டம்பர், கேனைன் கொரோனா எனக் கூறப்படுகிறது. இது பொதுவாக ஒரு விலங்கில் இருந்து இன்னொரு விலங்குக்கு செல்லும். விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. கொரோனா தொற்று மனிதர்களுக்கு வந்ததால் அவர்கள் மூலமாக விலங்குகளுக்குப் பரவியிருக்கும் எனக் கூறப்படுகிறது. உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் வாழ்கின்றன. அங்கு பராமரிப்பில் ஈடுபடும் ஊழியர்கள் மூலமாக வருவதற்கு வாய்ப்புள்ளது. இதுதவிர, விலங்குகளின் கழிவுகளில் இருந்து பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. அந்தக் கழிவுகளை எல்லாம் முறையாக அழிக்காமல் விட்டுவிட்டால் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது.

21 டிகிரி வெப்பநிலை

விலங்குகள் கொரோனா

பட மூலாதாரம், M K STALIN

படக்குறிப்பு, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இதனைத் தடுப்பதற்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். இந்தியாவில் எந்த பூங்காவிலும் தடுப்பூசியை போடுவதாகத் தெரியவில்லை. டெல்லி பூங்காவில் பென்டா டாக் (penta-dog) என்ற ஊசியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம். தொடர்ந்து நான்கைந்து வருடங்களாக தடுப்பூசி போட்டு வந்தால் வைரஸ் தொற்றால் விலங்குகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதுதவிர, 21 டிகிரி வெப்பநிலைக்கு மேல் வைரஸ் உயிர் வாழ்வதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் விலங்குகளின் இருப்பிடங்களில் கிருமி நாசினிகளை தெளித்துவிட்டு 21 டிகிரிக்கு வெப்பநிலைக்கு மேல் கொண்டு வருவதற்கான சூழல்களை ஏற்படுத்த வேண்டும். மேலும், பூங்காக்களில் உள்ள மருத்துவமனைகளும் விலங்குகளின் இருப்பிடங்களில் இருந்து தள்ளியே இருக்கும். அங்கு நோய்வாய்ப்பட்ட விலங்குகளை அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும்" என்கிறார்.

என்ன செய்ய வேண்டும்?

விலங்குகள் கொரோனா

பட மூலாதாரம், Getty Images

மேலும், ``வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகள் சரியாக சாப்பிடுவதில்லை. மிகவும் சோர்வாக காணப்படும். மனிதர்களைப் போல அவைகளுக்கு ஆக்சிஜன் உதவியை செய்வது சாத்தியமில்லை. விலங்குகளுக்கு வழங்கப்படும் இறைச்சிகள் மூலமாக வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பில்லை. நாய்களில் கொரோனா தொற்று பரவுவதை அமெரிக்காவில் கண்டறிந்துள்ளனர். நமது நாட்டில் குஜராத், ஹைதராபாத், வண்டலூர் ஆகிய பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் விலங்குகளுக்குத் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. உயிரியல் பூங்காக்களைத் தவிர சரணாலய விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அங்கு மனித நடமாட்டம் மிகவும் குறைவு. இந்தியாவில் இன்னமும் தடுப்பூசிக்கான முயற்சியை முன்னெடுக்கவில்லை. தற்போது ஃபெலிவேக் என்ற மருந்தை தொடர்ச்சியாக போடச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்," என்கிறார்.

``விலங்குகளின் இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கொரோனா தொற்றுள்ள ஊழியர்களை பராமரிப்புப் பணிகளுக்கு அனுமதிக்கக் கூடாது. பிளீச்சிங் பவுடரைக் காட்டிலும் மஞ்சள் பொடி சிறந்ததாக இருப்பதால் அதனை அனைத்து பூங்காக்களிலும் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் அல்லது குட்டிகளுக்குப் பாலில் மஞ்சளை கலந்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். ஒரு பூங்காவில் ஒரு விலங்கு பாதிக்கப்பட்டுவிட்டாலும் அதன் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த டானிக்குகள், வைட்டமின்களைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நோய்த் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்" என்கிறார் மருத்துவர் பன்னீர்செல்வம்.

கொள்முதலில் அலட்சியமா?

விலங்குகள் கொரோனா
படக்குறிப்பு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

``அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது?" என சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``இந்தியாவில் விலங்குகளுக்குக் கொரோனா தடுப்பூசி என்பதே கிடையாது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அந்த நாடுகளில் இருந்து தடுப்பூசிகள் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிகிறோம். இந்தியாவில் ஹைதராபாத்திலும் வண்டலூரிலும் உள்ள உயிரியல் பூங்காக்களில் விலங்குகள் சிலவற்றுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள விலங்குகளுக்கு கொரோனா தொற்று எப்படிப் பரவியது எனத் தெரியவில்லை. மனிதர்கள் அல்லது இறைச்சிகள் மூலமாக பரவியிருக்கலாம் என்கின்றனர். ஆனால், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே இடைவெளி குறைவு. இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. கொரோனா தடுப்பூசியை பெறுவது தொடர்பாக மத்திய கானுயிர் ஆணையம்தான் முடிவு செய்யும்" என்கிறார் மருத்துவர் அசோகன்.

கொரோனா ஊரடங்கால் பார்வையாளர் கட்டணம் இல்லாமல் உயிரியல் பூங்காக்கள் திணறிவரும் சூழலில், விலங்குகளை பாதித்துள்ள கொரோனா தொற்று உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவே கருதப்படுகிறது.

காணொளிக் குறிப்பு, அழியும் ஆபத்தில் உள்ள சிறுத்தை இனத்தை காக்க புதிய முயற்சி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :