"மோதியை விமர்சிப்பவர்கள் தேச விரோதிகள்" - "மெட்ரோ" ஸ்ரீதரன் பேட்டி

மெட்ரோ ஸ்ரீதர்
    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி என ஐந்து மாநிலங்களும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கின்றன. கேரள மாநிலத்தில் பாஜக தன் முதல்வர் வேட்பாளராக இ. ஸ்ரீதரனை முன்நிறுத்தியுள்ளது. 89 வயதான அவரும் பாஜகவுக்கு ஆதரவாக உற்சாகமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இவர் டெல்லி மெட்ரோ உட்பட பல முக்கிய ரயில் திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டமைத்து முடித்தார்.

பொறியியல் ரீதியில் சிக்கலான மற்றும் பொறியியல் அதிசயமாகக் காணப்படும் கொங்கன் ரயில்வே பாதைகளை அதிக பணமும் நேரமும் செலவிடாமல் அசாத்தியமாக வடிவமைத்ததும் இவர் தான்.

பாலக்காட்டில், பல்லன்சாத்தனூர் கிராமத்தில் ஸ்ரீதரனின் தேர்தல் பிரசாரத்தின் போது, அவரை நேர்காணல் செய்தது பிபிசி.

இவர் பிறந்த மாவட்டம் பாலக்காடு தான் என்பது குறிப்பிடத்தக்கது. முனைவர் இ. ஸ்ரீதரனின் கார் வந்த உடன் "மெட்ரோ மேன், மெட்ரோ மேன்" என்கிற கோஷத்தை முழங்கினர் மக்கள். அவரைச் சந்திக்க மக்கள் முண்டியடித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஊழல் அரசை வெளியேற்ற, தனக்கும், தன் கட்சிக்கும் (பாஜக) வாக்களிக்குமாறு கோரி, மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டார் ஸ்ரீதரன்.

"நான் மெட்ரோவை கட்டமைத்திருக்கிறேன். தற்போது கேரளத்தில் ஒரு தூய்மையன அரசைக் கட்டமைக்க வந்திருக்கிறேன்" எனக் கூறிய போது மக்கள் மகிழ்ச்சியில் தங்கள் ஆதரவுக் குரலை வெளிப்படுத்தினர். என் கரை படியாத கரங்கள், பாஜகவுக்கு வலுசேர்க்கும் என்றார் ஸ்ரீதரன்.

டெல்லி மெட்ரோ உட்பட பலவேறு இந்திய நகரங்களில் மெட்ரோ சேவையை கட்டமைத்ததால், ஸ்ரீதரனுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனால் பாலக்காட்டி இவர் வெற்றி பெறும் அளவுக்கு இவரை மக்கள் நேசிக்கிறார்களா?

அவர் பிரசாரம் மேற்கொண்ட பல்லன்சாத்தனூர் கிராமத்தில் ஒரு பெண், ஸ்ரீதரனுக்கு வாக்களிப்பேன் எனக் கூறினார்.

2016-ம் ஆண்டு கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த முதியவர், இந்த தேர்தலில் ஸ்ரீதரனுக்கு வாக்களிப்பேன் எனக் கூறினார். இப்படி ஸ்ரீதரனுக்கு வாக்களிப்பேன் எனக் கூறுபவர்கள், அக்கிராமத்தில் குறைவாகவே இருக்கிறார்கள். காரணம், அது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருப்பது தான்.

சொல்லப் போனால் தமிழக எல்லையில் இருக்கும் கேரள மாவட்டமான பாலக்காட்டில், இந்துக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இருப்பினும் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஷஃபி பரம்பில் என்கிற காங்கிரஸைச் சேர்ந்த இஸ்லாமிய வேட்பாளர் தான் வெற்றி பெற்றார்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கூட காங்கிரஸ் கட்சியே அங்கு வெற்றிக் கொடி நாட்டியது. ஆனால் ஸ்ரீதரன், தான் வெற்றி பெறுவேன் என நம்பிக்கையோடு இருக்கிறார். சொல்லப் போனால் கேரளத்தில் அரசை அமைப்பது யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக பாஜக இருக்கும் என்கிறார்.

மெட்ரோ மேன்

"நாங்கள் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம். இந்த முறை நிச்சயம் 40 இடங்களிலாவது வெல்வோம். அதிகபட்சமாக 75 இடங்களில் வெற்றி பெறலாம் என்கிறார். பாஜக முழுமையாக வெற்றி பெறவில்லை என்றாலும், நாங்கள் தான் ஆட்சி அமைக்க இருப்பவர்களை தீர்மானிப்போம்" என்கிறார்.

ஆனால் அரசியல் விமர்சகர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் இரண்டு அல்லது மூன்று இடங்களைப் பிடிக்கவே பாஜக போராடும் எனக் கூறுகிறார்கள். கடந்த 2016-ம் ஆண்டு, பாஜக முதல் முறையாக நேமம் என்கிற ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் இருப்பது உங்களுக்கு எப்படி இருக்கிறது? எனக் கேட்டோம்.

"பல பிரசார கூட்டங்களில் பங்கெடுப்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது, ஆனால் நான் அதை ரசிக்கிறேன்" என்றார்.

ஸ்ரீதரனோடு கொஞ்சம் நேரத்தை செலவிடும் யாரும், அவர் பிரதமர் நரேந்திர மோதியின் தீவிர ஆதரவாளர் என்பதை அறிந்து கொள்ளலாம். அதே போல, தன்னைப் பொருத்தவரை, மோதியையோ, அவரது அரசையோ, அவரது கட்சியையோ விமர்சிப்பவர்கள் தேசத்துக்கு விரோதமானவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்கிறார் ஸ்ரீதரன்.

"மோதி அரசு பல புதிய யோசனைகளைக் கொண்டு வந்திருக்கிறது, நாட்டின் பிம்பத்தை உயர்த்தவும், நாட்டு மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்தவும் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். ஆனால் சிலர் எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள்".

மோதியை விமர்சிப்பதே தேசத்துக்கு விரோதமானவர்கள் அல்லது தேச பக்தி இல்லாதவர்கள் எனக் கருதுவீர்களா? எனக் கேட்டதற்கு, ஆம் என்கிறார் ஸ்ரீதரன். அவர்கள் தான் பாஜக அதிகாரத்துக்கு வருவதற்கு எதிராக இருக்கிறார்கள். பாஜக அதிகாரத்துக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை" என கூறுகிறார்.

ஸ்ரீதரன்

காரணமே இல்லாமல் அரசை விமர்சிப்பவர்கள் தேச விரோதிகள் தான் என்கிறார். "ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் இருக்கின்றன என்றால்

யாரும் ஏற்றுக் கொள்வார்கள். வெறுமனே அரசின் பிம்பத்தை சிதைப்பதற்கு விமர்சிக்கிறார்கள் என்றால், குறிப்பாக சர்வதேச அரங்கில் சிதைக்கிறார்கள் என்றால் அது தேசத்துக்கு எதிரானது. அவர்கள் உண்மையில் தேசத்தை நேசிக்காதவர்கள்" எனக் கூறினார்.

மோதியை விமர்சிப்பவர்களை, ஸ்ரீதரன் விரும்பவில்லை. மோதியின் ஆட்சியில் இந்திய ஜனநாயகக் கொள்கைகள் சீரழிவதாகக் கருதுபவர்களையும் அவர் புறக்கணிப்பது போலத் தெரிகிறது. `ஃப்ரீடம் ஹவுஸ்` என்கிற அமெரிக்க அமைப்பு மற்றும் `வீடெம்` என்கிற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அமைப்பு போன்றவைகள் இந்தியாவில் ஜனநாயகம் பின்னடைவைச் சந்திப்பதை சுட்டிக் காட்டினார்கள்.

"இந்தியா எப்படி முன்னேறி இருக்கிறது என்பது குறித்து அவர்களுக்குப் பொறாமை" என பதிலளித்திருக்கிறார் ஸ்ரீதரன். "10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ராணுவ பலம் என்ன தெரியுமா? இன்றைய நிலை என்ன தெரியுமா? உலக அளவில் நான்காவது வலிமையான ராணுவம் இந்தியாவினுடையது. அனைவரும் இது குறித்து பொறாமைப்படுகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைந்து வருகிறது, மோதி அரசில் எதிர் கருத்து பேசும் குரல்வலைகள் நெரிக்கப்படுகின்றன என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீதரன்

"இது தவறு. இது அவர்களின் பார்வை. நீங்கள் பொதுவாக மக்களிடம் கேளுங்கள். அவர்கள் ஏன் மோதியை மீண்டும் இரண்டாவது முறை தேர்ந்தெடுத்தார்கள்?" என பதிலளித்திருக்கிறார்.

இதை எல்லாம் விட, ஸ்ரீதரன் விவசாயிகள் போராட்டத்தையும் நிராகரிக்கிறார். போராட்டம் நடத்துபவர்கள் இடைத்தரகர்கள் என்கிறார் ஸ்ரீதரன்.

"போராடுபவர்களில் ஒருவராவது வேளாண் மசோதாக்களைப் பார்த்தார்களா? அதில் ஒரு சட்டப் பிரிவையாவது விவசாயிகளுக்கு எதிரானதாக கூற முடியுமா? இருப்பினும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என்னைப் பொருத்தவரை போராடுபவர்கள் உண்மையில் விவசாயிகள் அல்ல, அவர்கள் இடத்தரகர்கள். அவர்கள் தான் விவசாய சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கிறார்கள்" என்கிறார்.

பாஜகவில் இணைவதற்கு கடந்த மாதம் அழைப்பு விடுக்கப்பட்ட போது, மோதியின் மெட்ரோ கொள்கைகளையும், ரயில்வே அமைப்பின் சில பகுதிகளை தனியார்மயப்படுத்துவதையும் எதிர்த்தார் ஸ்ரீதரன். தன் விமர்சனத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறார் ஸ்ரீதரன்.

உங்களை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது குறித்து, பாஜகவிலேயே அதிகம் பேசப்படவில்லையே?

ஒரு சிறிய மெளனத்துக்குப் பிறகு "நான் முதல்வராவதற்காக பாஜகவில் இணையவில்லை. என்னை முதல்வர் ஆக்குவேன் என அவர்கள் எந்த உறுதி மொழியையும் கொடுக்கவில்லை. நான் இப்போது கேரளத்துக்கு சேவை செய்ய, பாஜக சிறந்த கட்சியாக இருக்கும் எனக் கருதி இணைந்திருக்கிறேன்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: