"பெண்களின் இடுப்பை தாண்டி திமுக யோசிப்பதில்லை" - பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கடும் தாக்கு

வானதி
    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி சீனிவாசன், தான் போட்டியிடும் அதே தொகுதியில் தேர்தல் களம் காணும் நடிகர் கமல் ஹாசனுக்கு அவரது சினிமா பிரபலம் கை கொடுக்காது என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார பணிகளுக்கு இடையே பிபிசி தமிழுக்கு அவர் அளித்த நேர்காணலில், கோவை தெற்கு தொகுதியில் அதிமுகவினர் பிரசாரத்துக்கு ஒத்துழைப்பு தருகிறார்களா, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட திமுகவினர் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அவரது நேர்காணலில் இருந்து.

கோவை தெற்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதும், அதிமுக தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்தனர். தற்போது அதிமுகவினரின் ஆதரவு எப்படி இருக்கிறது? ஏன் கோவை தெற்கு தொகுதியை தேர்ந்தெடுத்தீர்கள்?

ஆரம்பத்தில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இங்கு அதிருப்தி இருந்தது உண்மைதான். ஆனால், அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அம்மன் அர்ஜுனன் ஆகியோரின் தலையீட்டுக்குப் பிறகு அனைத்து அதிமுக தொண்டர்களும் எங்களுக்கு அருமையாக ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

கடந்த முறை, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டபோது 22 சதவீத வாக்குகளைப் பெற்றேன். மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் பாஜகவிற்கு அதிக வாக்குகள் உள்ளன. மேலும், கடந்த 5 ஆண்டுகளாக கோவை தெற்கு தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அந்த வகையில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால், கோவை தெற்கு தொகுதியை தேர்ந்தெடுத்தேன்.

நடிகர் கமல்ஹாசனின் வருகையால் உங்களின் வாக்குவங்கி பாதிக்கப்படுமா?

நடிகர் கமல் ஹாசனால் நிச்சயம் பாஜகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படாது. காரணம், கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் தனித்தனியே கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருப்பதால் அந்த வாக்கு வங்கி சதவீதம் அதிகமாகும்.

மேலும், அதிமுகவும் நாங்களும் அமைப்பு ரீதியாக இங்கே பலமாக இருக்கிறோம். சினிமா பிரபலம் என்பதால் கமலுக்கு ஊடக வெளிச்சம் அதிகமாக கிடைக்கிறது, சமூக ஊடகங்களில் அவரை பலர் பின் தொடர்கின்றனர். இவையெல்லாம் அவருக்கு தேர்தலில் பலன் அளிக்கும் என நான் கருதவில்லை.

சினிமா பிரபலம் என்பதால் மட்டும் மக்கள் யாருக்கும் வாக்களிப்பதில்லை. தொடர்ச்சியாக மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்கிறார்களா? கடந்த காலங்களில் அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டே மக்கள் வாக்களிப்பார்கள் என நான் நினைக்கிறேன்.

வானதி

சினிமா நட்சத்திரங்கள் குறித்த உங்களின் இந்தப் பார்வை, பாஜக சார்பில் போட்டியிடும் நடிகர், நடிகைகளுக்கும் பொருந்துமா?

ஒரு நடிகர் தன்னுடைய சினிமா பிரபலத்தை மட்டுமே நம்பி தேர்தலில் இறங்கினால், அது அவருக்கு கட்டாயம் கை கொடுக்காது. ஆனால், வாக்குவங்கி நிரூபிக்கப்பட்ட, அமைப்பு ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சியின் வேட்பாளராக நடிகர்கள் தேர்தலில் நிற்கும் போது அங்கு நிலை வேறாகத்தான் இருக்கும்.

உங்கள் தொகுதியில் யாரை பலமான போட்டியாளராக பார்க்கிறீர்கள்?

அனைவரையுமே சக போட்டியாளராகத் தான் நான் பார்க்கிறேன். இவர் பலமானவர், இவர் பலவீனமானவர் என யாரையும் நான் கருதவில்லை. எல்லோரும் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். கூட்டணி கட்சி பலம், அமைப்பு பலம், வாக்கு வங்கி போன்ற காரணங்களால் நான் மற்றவர்களை முந்திச்செல்வதாக நினைக்கிறேன்.

மேலும், மோட்டார் பம்பு உற்பத்தி, தங்க நகை தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள், ஏழை எளிய மக்களுக்கான வங்கி கடனுதவி, முத்ரா நிதி உதவித் திட்டம், கொரோனா கால உதவிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என இந்த பகுதிக்கு மத்திய அரசாங்கத்தால் கிடைத்த திட்டங்கள் ஏராளம்.

மாநில அரசு சார்பிலும் ஏராளமான மேம்பாலங்கள், குளங்கள் புனரமைப்பு, அத்திக்கடவு அவிநாசி திட்டம் போன்ற நீண்டகால திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அம்மன் அர்ஜுனன் ஆகியோர் இங்கு சிறப்பாக வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இது எனக்கு கூடுதல் பலம் என நான் கருதுகிறேன்.

வான

நீட் தேர்வை அதிமுக அரசு எதிர்க்கிறது, பாஜக ஆதரிக்கிறது. இப்படி கொள்கை முரண் கொண்ட கட்சிகள் அமைத்த கூட்டணியை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

மக்கள் இதையெல்லாம் புரிந்து கொள்வார்கள் என கருதுகிறேன். ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி தேர்தல் அறிக்கை, சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகள் உண்டு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்திற்காக மட்டுமே அமைக்கப்படுவது. ஆட்சி அமைப்பதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு புரிந்துணர்வு தானே தவிர, அந்தந்த கட்சிகளும் அவற்றின் கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றவே செய்கின்றன. அவை தான் ஒவ்வொரு கட்சிக்குமான தனித்துவ அடையாளம். எனவே இரு வேறு கொள்கை இருந்தாலும் அது எங்கள் அணி வெற்றியை பாதிக்கும் என நான் கருதவில்லை.

மதரீதியில் பதற்றமான பகுதியாக கருதப்படும் கோவையில், பாஜகவினர் எம்எல்ஏ ஆனால், இங்கு பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்ற பார்வைக்கு உங்களின் பதில் என்ன?

பாஜக தான் நாட்டையே ஆட்சி செய்கிறது. இந்தியாவில் இப்போது என்ன பிரச்னை வந்தது? பெரிய அளவிலான மத கலவரங்களோ, பிரச்னைகளோ இருக்கிறதா? சிறுபான்மை மதத்தினரை ஒதுக்கி வைத்து அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறதா?

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மத வேற்றுமையின்றி அனைவரையும் சென்றடைகின்றன. குறிப்பாக, முத்ரா திட்டத்தில் பெருமளவு பலனடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், சிறுபான்மையினர் தான். எங்களின் செயல் திட்டத்தில் எந்த வேறுபாட்டையும் நாங்கள் காட்டவில்லை. ஆனால், எங்களை வெறுப்பவர்கள், பாஜக அரசியல் ரீதியாக வளரக் கூடாது என நினைப்பவர்கள், சிறுபான்மை மக்களை தேசிய நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கிறார்கள். சிறுபான்மையினர் மற்ற மதத்தினரோடு கலந்து பழகுவதை வேறுபடுத்திக் காட்டி, வாக்கு அரசியல் செய்கின்றனர்.

ஆனால், இன்று நிலைமை மாறியுள்ளது. முத்தலாக் சட்டத்தின் மூலமாக இஸ்லாமியர்களின் ஆதரவு பாஜகவுக்கு அதிக அளவில் கிடைத்துள்ளது. இந்த விழிப்புணர்வு பெருகும்போது, எதிர்கட்சிகளின் இந்தப் பிரசாரம் செல்லுபடியாகாது.

வானதி

திண்டுக்கல் லியோனியின் பெண்கள் குறித்த பேச்சை, ஒரு பெண் அரசியல்வாதியாக எப்படி பார்க்கிறீர்கள்?

பாஜக மகளிர் அணியின் அகில இந்திய தலைவராக நான் இருக்கிறேன். பெண்கள் அரசியலில் வருவதற்கு பயப்படுவதற்கும், தயங்குவதற்கும் முக்கியமான காரணம் பொதுவெளியில் அவர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தான். இது போன்ற விமர்சனங்கள் பெண்களை ஒருவித அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது. எனக்கு அரசியல் ஆர்வம் இருந்தும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனநிலை இருந்தாலும் இதுபோன்ற கருத்துக்கள் தயக்கத்தை உருவாக்குகிறது.

குறிப்பாக, திமுகவினர் பெண்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். அதன் வெளிப்பாடாகத்தான் திண்டுக்கல் லியோனியின் இந்த கருத்தை நான் பார்க்கிறேன். கடுமையான கண்டனத்திற்குரிய கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இதனால், பெண்களின் இடுப்பைத் தாண்டி வேறு எதையும் திமுக யோசிப்பதில்லை என தெரிகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் குறிக்கோள் - வாக்கு வங்கியை அதிகரிப்பதா, தொகுதிகளை கைப்பற்றுவதா அல்லது ஆட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பதா?

இப்போது எங்களுடைய நோக்கம், பாஜக போட்டியிடும் இருபது தொகுதிகளிலும் ஜெயிப்பது, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது மட்டுமே. ஆட்சியில் பங்கு பெறுவது பற்றியோ பெறாமல் இருப்பது பற்றியோ நான் எதுவும் சொல்ல முடியாது, அதை எங்களின் தலைமை தான் முடிவு செய்யும்.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என நினைக்கிறீர்கள்?

நாங்கள் தான் மீண்டும் ஆட்சி அமைப்போம் என உறுதியாக நம்புகிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: