பாஜக தேர்தல் அறிக்கை: 'இறைச்சிக்காக பசுக்கள் கடத்தப்படுவது தடுக்கப்படும்' - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

எல். முருகன்

வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பாரதீய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 'தொலைநோக்கு பத்திரம் சட்டமன்றத் தேர்தல் 2021' என்ற பெயரில் இந்த ஆவணம் இன்று பாஜகவால் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை ஹெச். ராஜா, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, வி.பி.துரைசாமி, சசிகலா புஷ்பா உள்ளிட்டவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய தகவல்கள்:

விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கான திட்டம்

விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்க் கடனும், விவசாயக் கருவிகள் வாங்க குறைந்த வட்டியில் தவணை முறைக் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கீழ் நீர் மேலாண்மைக்கென "விவசாய நீர்ப் பாசனத் துறை" உருவாக்கப்படும்.

அனைத்து ஊராட்சிகளிலும் வேளாண் பணிகளுக்கான பயிற்சியளிக்கவும், நவீன உபகரணங்கள் பயன்படுத்துவதற்காகவும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

ஒவ்வொரு கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திலும் உழவர் சேவை மையம் அமைக்கப்படும். இயற்கை விவசாயத்திற்கு என தனிக் கொள்கை வகுக்கப்படும். பெட்ரோலுக்கு நிகரான எரி பொருளான எத்தனால் தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகள் உடனடியாக தளர்த்தப்படும்.

மீனவர்களுக்கான திட்டம்

விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல மீனவர்களுக்கு 6000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் மீன் பிடிக்கப்படும் இடங்களில் நவீன வசதியுடன் கூடிய மீன் சந்தைகள் அமைக்கப்படும். மீனவ மக்களை கடல்சார் பழங்குடிகளாக அறிவித்து இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி உரிமைகள் வழங்கப்படும். 60 வயது நிரம்பிய முதிய மீனவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக 3000 ரூபாய் வழங்கப்படும்.

மகளிர் நலன்

வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதி ஏற்படுத்தப்படும்.

தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு செல்ல வசதியில்லாத ஏழை மற்றும் நடுத்தரப் பெண்களுக்கு உதவும் விதமாக மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் துவங்கப்படும்.

பூரண மதுவிலக்கு

மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை இழக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அரசின் வேறு பிற துறைகளில் பணியமர்த்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தொடர்பான திட்டம்

எச். ராஜா

பட மூலாதாரம், H.RAJA BJP

தேசிய கல்வி கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியில் மருத்துவக் கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படும்.

NEET, JEE, CLAT மற்றும் இதுபோன்ற அகில இந்திய அறிவுத் திறன் போட்டித் தேர்வுகளில் கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு முறையான, பயிற்சி அளிப்பதற்கு பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

வளர்ச்சி திட்டங்கள்

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலைகள் அமைக்கத் திட்டமிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 30% மானியத்துடன் வீடுகளில் சூரிய ஒளி மின்சாரத் திட்டம் அமலாக்கப்படும்.

50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற திட்டங்கள்

சென்னை உயர் நீதிமன்றக் கிளை கோயம்புத்தூரில் அமைக்கப்படும் என்றும் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப புதிய காவல் நிலையங்கள் துவக்கப்படும்.

மேலும் பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் பசுப் பாதுகாப்பிற்கான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பசுவதை தடைச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைச்சிக்காக கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பசுக்கள் கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும் மீட்கப்படும் பசுக்களை தமிழக கோவில்களில் கோசாலைகள் அமைத்து பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: