மெட்ரோமேன் ஸ்ரீதரன், வயது 88 - யார் இவர், அரசியலுக்கு வர ஆசைப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இ. ஸ்ரீதரன், 1932ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி பிறந்தார். தற்போதைய கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திரித்தலா என அழைக்கப்படும் கருகாபுத்தூர் பகுதியில் கீழ்வீடில் நீலகண்டன் மோசாத் மற்றும் அம்மாலுஅம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார்.
பாலக்காட்டில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், ஆந்திர பிரதேசத்தின் அரசு பொறியியல் கல்லூரியில் சிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார்.
இந்திய தேர்தல் நடவடிக்கையில் சீர்திருத்தங்களை புகுத்தி அதன் தன்னாட்சி அந்தஸ்தை உலகுக்கு உணர்த்திய டி.என். சேஷனும் ஸ்ரீதரனும் பள்ளிப்பருவத்து பால்ய நண்பர்கள். கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர இருவருக்கும் ஆந்திராவில் அனுமதி கிடைத்தபோது, ஸ்ரீதரன் மட்டும் அங்கு சேர்ந்தார். சேஷன், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் சேர முடிவெடுத்து சென்னைக்குச் சென்றார்.
கல்லூரிப் படிப்பை முடித்ததும் கோழிக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சில மாதங்கள் விரிவுரையாளராக இருந்த அவர் பின்னர் பம்பாய் துறைமுகத்தில் பயிற்சியாளராக சேர்ந்தார். அதைத்தொடர்ந்து இந்திய ரயில்வே பொறியாளர் பணித்தேர்வெழுதி ஐஆர்எஸ்இ அதிகாரியாக 1954இல் ரயில்வே பணியைத் தொடங்கினார் ஸ்ரீதரன். அவரது முதல் பணி பயிற்சி உதவியாளர். அப்போது அவருக்கு தென்னக ரயில்வேயில் பயிற்சிப் பணி வழங்கப்பட்டது.
1963ஆம் ஆண்டில் அப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் காரணமாக பாம்பன் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அந்த பாலத்தை பழுதுபார்த்து மீளுருவாக்கும் பணியை ஆறு மாதங்களில முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஸ்ரீதரனின் தலைமை அதிகாரி வசம் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் செயலாக்கப் பணி ஸ்ரீதரன் வசம் வழங்கப்பட்டது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மாதத்தை விட 46 மாதங்களிலேயே அந்த பாலத்தை கட்டி முடிக்க மூல காரணமாக இருந்தார் ஸ்ரீதரன். இதற்கான அங்கீகார சான்றிதழும் பதக்கமும் அப்போது ஸ்ரீதரனுக்கு வழங்கப்பட்டது.
1970களில் இந்தியாவிலேயே முதலாவது முயற்சியாக கல்கத்தா மெட்ரோ ரயில் திட்டத்துக்கான வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் பொறுப்பு, துணை தலைமை பொறியாளரான ஸ்ரீதரன் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்கிய மெட்ரோ ரயில் சேவைக்கான நவீன பொறியியல் உள்கட்டமைப்பை அந்த காலத்திலேயே உருவாக்கி அடித்தளமிட்டார் ஸ்ரீதரன். பிறகு 5 ஆண்டுகள் கழித்து அந்தப் பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
1979ஆம் ஆண்டில் கொச்சி துறைமுகத்தில் சேர்ந்த ஸ்ரீதரன் வசம், கட்டுமான தாமதத்தால் பணிகள் சரிவர இயங்காமல் இருந்த எம்.வி. ராணி பத்மினி கப்பல் கட்டுமான தயாரிப்புப் பணி ஒப்படைக்கப்பட்டது. அந்த கப்பல் மட்டுமின்றி அந்த கட்டுமான தளத்தின் அடையாளத்தையே அவர் மாற்றினார். தனது பதவிக்காலத்திலேயே திட்டமிட்டபடி எம்.வி. ராணி பத்மினி கப்பல் கடலில் பயணிக்க ஸ்ரீதரனின் திட்டமிடல் நடவடிக்கை உதவியது.
இதன் பின்னர் கொங்கன் ரயில்வேயின் பொது மேலாளராக நியமிக்கப்பட்ட அவர், ரயில்வே பொறியியல் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்ரீதரன் பணியில் இருந்து ஓய்வு பெற்றபோதும், அவரது சேவையின் தேவை கருதி, ஒப்பந்த அடிப்படையில் கொங்கன் ரயில்வேயின் தலைவர் மற்றுமே நிர்வாக இயக்குநராக அவரை அப்போதைய ரயில்வே அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் நியமித்தார்.

பட மூலாதாரம், Getty Images
1997ஆம் ஆண்டில் அப்போதைய டெல்லி முதல்வராக இருந்த சாஹிப் சிங் வெர்மா, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டு அதன் தலைவராக ஸ்ரீதரனை நியமித்தார். இலக்கு நிர்ணயித்த காலத்துக்கு முன்பாகவே திட்டங்களை செயல்படுத்துவதில் சாதுர்யமாக விளங்கிய ஸ்ரீதரன், டெல்லியின் கடுமையான பேருந்து போக்குவரத்து நெரிசலை எளிதாக்க மெட்ரோ ரயில் சேவையை உருவாக்கியது, அவரது புகழை இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பரவச் செய்தது. இதன் பிறகு, கொச்சி மெட்ரோ, பெங்களூரு மெட்ரோ, சென்னை மெட்ரோ, விசாகப்பட்டினம், விஜயாவாடா, ஜெய்பூர் மெட்ரோ என பல நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது அவற்றுக்கு ஸ்ரீதரன் வழங்கிய அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் இன்றும் அவரது திறமைக்கும் கட்டுமான உத்திகளுக்கும் சான்று கூறுகின்றன.
முழு நேர அரசுப் பணியில் இல்லாதபோதும், அரசின் ரயில்வே மற்றும் கட்டுமான திட்டங்கள் என வந்தபோது அதில் ஸ்ரீதரனின் அறிவுரைகளை, கட்சி வேறுபாடின்றி ஆட்சியில் இருந்த அரசுகள் வரவேற்றன. இருந்தபோதும், 2014ஆம் ஆண்டில் இந்திய மக்களவைக்கு தேர்தல் நடந்தபோது, அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதியை பாஜக தலைமை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடிவெடுத்தபோது, அதை வெளிப்படையாகவே ஆதரித்து மோதிக்கு புகழாரம் சூட்டினார் ஸ்ரீதரன். அதுவே, அவர் வெளிப்படுத்திய முதலாவது அரசியல் ஆதரவு கருத்தாக பார்க்கப்பட்டது.
டெல்லியில் ஆளும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு, மெட்ரோ ரயில் சேவையில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்க பரிசீலித்தபோது, அந்த யோசனைக்கு ஆட்சேபம் தெரிவித்து பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதினார் ஸ்ரீதரன்.
கல்வி நிறுவனங்களில் அரசியல் இயக்க மாணவர் அணி செயல்பாடுகள் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் அம்மாநில அரசு சட்டம் கொண்டு வர முற்பட்டபோது அந்த நடவடிக்கையை எதிர்த்தார் ஸ்ரீதரன். மாணவர்களின் வகுப்புகளுக்கும் கல்விக்கும் கல்லூரி வளாகங்களில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் இடையூறாக அமையும் என்றும் அது கட்சி சார்ந்த மாணவர்களின் மோதலை ஊக்குவிக்கும் என்றும் ஸ்ரீதரன் கருத்து தெரிவித்தார்.
இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை சில மாநிலங்கள் முன்வைத்தபோது, அது கடும் செலவினத்துக்கு வழிவகுக்கும் திட்டம் என்றும் ஸ்ரீதரன் கடுமையாக எதிர்த்தார். மனதில் பட்டதை வெளிப்படையாகவும் நேர்படவும் பேசக்கூடியவராக அறியப்படும் ஸ்ரீதரனுக்கு 2001இல் பத்மஸ்ரீ, 2012இல் பத்மவிபூஷண் ஆகிய உயரிய விருதுகளை இந்திய அரசு வழங்கி கெளரவித்திருக்கிறது.
ஸ்ரீதரன் தற்போது தனது மனைவி ராதாவுடன் மலப்புரத்தில் வசித்து வருகிறார். அவரது மகள் ஷாந்தி மேனன், பெங்களூருவில் ஒரு தனியார் பள்ளியை நடத்தி வருகிறார்.

பிற செய்திகள்:
- பிபிசி ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான் என்றால் என்ன?
- இளவரசி லத்தீஃபா: மாயமாகிப் போன துபாய் ஆட்சியாளரின் மகள்
- தமிழக தேர்தல்: 1957இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது எப்படி?
- வீடுகட்ட வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை கரையான் தின்ற சோகம்
- ஆஸ்திரேலியாவில் செய்திகளை முடக்கும் ஃபேஸ்புக்: அதிகரிக்கும் முரண்- என்ன நடக்கிறது?
- புதுச்சேரியில் ராகுல் காந்திக்கு தவறாக மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி தரும் காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













