பிபிசி விக்கிப்பீடியா ஹேக்கத்தான் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
நூற்றுக்கணக்கான மாணவர்கள், விக்கிப்பிடியா தளத்தில் சென்று, இந்திய விளையாட்டு வீராங்கனையின் தகவல்களை சேர்ப்பார்கள்.
பிபிசியின் 'இந்தியன் ஸ்போர்ட்ஸ் உமன் ஆஃப் தி இயர்' திட்டத்தின் மூலமாக நடக்கும் இந்த நிகழ்வில், விக்கீப்பிடியாவில் 50 இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் தகவல்கள் சேர்க்கப்படும்.
மக்கள் பலருக்கும் தகவல்கள் கிடைக்க ஒரு பொதுவான தளமாக விக்கிப்பீடியா இருக்கிறது. ஆனால், அதில் 17% கட்டுரைகள் மட்டுமே பெண்களைப் பற்றி உள்ளது.
அதனால், விக்கீபிடியாவுடன் இணைந்து, பிபிசி, விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள் குறித்த தகவல்களை சேர்க்கிறது.
பிபிசியின் ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், மூத்த ஊடகவியலாளர்களின் கலந்தாலோசனையின் அடிப்படையில் இந்த 50 வீராங்கனைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பான்மையான வீராங்கனைகளுக்கு, இந்திய மொழிகளில் பக்கங்கள் இல்லை. சிலருக்கு ஆங்கிலப் பக்கங்கள் கூட இல்லை.
பிபிசி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி ஆகிய மொழிகளில் இயங்குகிறது. இந்த முயற்சியின் மூலமாக, இந்த ஏழு மொழிகளிலும் வீராங்கனைகள் குறித்த தகவல்கள் விக்கிப்பீடியாவில் பக்கங்களாக இருப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
வீராங்கனைகளின் கூறப்படாத கதைகள்
இந்த 50 வீராங்கனைகள் குறித்து இணையதளத்தில் தேடிய போது, அவர்கள் குறித்து மிகக்குறைவான தகவல்களே கிடைத்தன என்பதை பிபிசி புரிந்துகொண்டது. இந்த தகவலின்மை சூழலை சரிசெய்ய உதவும் விதமாக, 50 வீராங்கனைகளில் 26 வீராங்கனைகளை பிபிசி நேர்காணல் செய்து கட்டுரையாக வெளியிட்டது.
உட்கட்டுமான வசதி இல்லாமை, தனிப்பட்ட முறையில் இருந்த பொருளாதார நெருக்கடி, பெண் என்ற பாலின பாகுபாடு போன்ற பல பிரச்னைகளை அவர்கள் சந்தித்தை, அவர்களின் நேர்காணல் விளக்கியது.
எத்தனை தடைகள் வந்தபோதிலும், தொடர்ந்து இந்த பெண்கள் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளனர். நலம் விரும்பிகளும், சில அமைப்புகளும் செய்த உதவியின் மூலமாக இவர்களால் பல நேரங்களில் தங்களின் பயிற்சியை தொடர்ந்துள்ளனர். பெண் வீராங்கனைகளுக்கென சரியான பயிற்சி மையங்கள் மற்றும் கட்டுமான வசதிகள் உடனடியாக தேவை என்பதை பல வீராங்கனைகள் வலியுறுத்திய அதே நேராத்தில், அவர்களின் விளையாட்டுப்பயணத்தில் குடும்பத்தாரின் உதவி மற்றும் கவனிப்பு எவ்வளவு உதவியாக இருந்தது என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஊடகவியல் துறை மாணவர்களுடன் சேர்ந்து ஒரு முயற்சி
நாட்டில் உள்ள 13 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 300 மாணவர்களுடன் இணைந்து இந்த திட்டத்தை பிபிசி செயல்படுத்தியுள்ளது.
தெற்கே, கோவை அவிநாசிலிங்கம் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் புதுவை பல்கலைக்கழகம்; செகட்ராபாத்தில் உள்ள பவன்'ஸ் விவேகானந்தா காலேஜ் ஆஃப் சைன்ஸ், ஹ்யூமானிட்டீஸ் மற்றும் காமர்ஸ் கல்லூரி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகம் ஆகியவை இதில் பங்கேற்கின்றன.
வடக்கில் டெல்லி ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம், டெல்லி பல்கலைக்கழகம்; மத்திய பல்கலைக்கழகம், ராஜஸ்தான், அஜ்மீர்; தோவாபா கல்லூரி, ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸில் உள்ள குருநாநக் தேவ் பல்கலைக்கழகம் ஆகியவை பங்கேற்கின்றன.
மேற்கில், ஆமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகம், சூரத்தில் உள்ள வீர் நர்மத் செளத் குஜராத் பல்கலைக்கழகம்; மும்பையில் உள்ள பர்லே திலக் வித்தியாலைய அசோசியேஷனின் சத்தயே கல்லூரி, நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரசந்த் துகாதோஜி மகாராஹ் நாக்பூர் பல்கலைக்கழகம் ஆகியவை பங்கேற்கின்றன.
தங்களின் தளத்தில் வீராங்கனைக்ள் குறித்த பக்கங்களை உருவாக்கி ஆவணப்படுத்த மாணவர்களுக்கான பயிற்சியை விக்கீப்பிடியா தந்துள்ளது.
இன்று நடைபெறும் பிபிசியின் ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான் நிகழ்ச்சியை பிபிசியின் இந்திய மொழிச்சேவைகளின் சமூக வலைதள பக்கங்களில் நேரலையில் காணலாம்.

பிற செய்திகள்:
- ஐபிஎல் 2021: எப்படி நடக்கிறது வீரர்களின் ஏலம்? யாருக்கு எவ்வளவு விலை?
- பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது?
- "என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்": ராகுல் காந்தி உருக்கம்
- எம்.ஜே. அக்பரின் அவதூறு வழக்கு: பாலியல் புகார் சுமத்திய பிரியா ரமணியை விடுவித்தது நீதிமன்றம்
- #MeToo பிரியா ரமணி: தீர்ப்பை கொண்டாடும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













