கேரளாவில் பாஜக வளர முடியாதது ஏன்? 90 சதவீதம் கல்வியறிவு இருப்பது ஒரு காரணம் - பாஜக எம்.எல்.ஏ. ராஜகோபால்

BJP RAJAGOPAL

பட மூலாதாரம், @BJPRAJAGOPAL twitter page

இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணைய தளங்கள் ஆகியவற்றில் வெளியாகியுள்ள சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

'கேரளாவில் 90% கல்வியறிவு இருப்பதால் எங்களால் வளர முடியவில்லை' - பாஜக எம்.எல்.ஏ ராஜகோபால்

கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியால் வேரூன்ற முடியாமல் போனதற்கு அந்த மாநிலத்தில் 90 சதவீதம் கல்வியறிவு இருப்பதும் ஒரு காரணம் என்று கேரள பாஜகவின் மூத்த தலைவரும், அந்த மாநில சட்டமன்றத்தில் பாஜகவுக்கு இருக்கும் ஒரே உறுப்பினருமான ஓ. ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

இவர் முன்னாள் மத்திய அமைச்சரும்கூட.

ஹரியாணா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சியடைந்த பாஜகவால் கேரளாவில் வளர முடியாமல் போனது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின்போது இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ. ராஜகோபால் இவ்வாறு கூறியுள்ளார்.

"கேரளா ஒரு வேறுபட்ட மாநிலம். இங்கு பாஜக வளராமல் இருப்பதற்கு 2,3 தனித்துவமான காரணங்கள் உள்ளன.

கேரளாவில் 90 சதவிகித கல்வியறிவு உள்ளது. அவர்கள் சிந்திக்கிறார்கள் விவாதபூர்வமாக இருக்கிறார்கள். இவை படித்த மக்களின் பண்புகள். இது ஒரு பிரச்னை. கேரளாவில் 55 சதவிகிதம் இந்துக்களும் 45 சதவிகிதம் சிறுபான்மையினரும் இருப்பது இந்த மாநிலத்திற்கு உரிய சிறப்பம்சம்.

இது இன்னொரு பிரச்னை. ஒவ்வோர் அரசியல் கணக்கிலும் இந்த அம்சம் உள்ளே வருகிறது. இதனால்தான் பிற மாநிலங்களுடன் கேரளாவை ஒப்பிட முடியாது. இங்கு சூழ்நிலையே வேறு. ஆனால் இங்கு நாங்கள் மெதுவாகவும் நிலையாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.

க்ருனால் பாண்டியா - இங்கிலாந்துக்கு எதிராக அதிவேக அரை சதம்

க்ருனால் பாண்ட்யா - அதிவேக அரை சதம்; அப்பாவை எண்ணி கண்ணீர்

பட மூலாதாரம், Surjeet Yadav / getty images

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் பரோடாவை சேர்ந்த 'ஆல்-ரவுண்டர்' க்ருனால் பாண்ட்யா அறிமுகமானார் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

அபாரமாக ஆடிய இவர், 26 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் அறிமுக போட்டியில் அதிவேகமாக அரை சதமடித்த வீரரானார். இதற்கு முன் 1990ல் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் ஜான் மோரிஸ் 35 பந்தில் அரை சதமடித்தததே சாதனையாக இருந்தது.

நேற்றைய போட்டிக்கான தொப்பியை க்ருனால் பாண்டியாவுக்கு அவரது தம்பி ஹர்திக் பாண்ட்யா வழங்கினார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட க்ருனால், சமீபத்தில் மறைந்த தனது தந்தையை நினைத்து கண்கலங்கினார். தொப்பியை வானத்தை நோக்கி காண்பித்தார். முதல் பாதி போட்டி முடிந்த பின், அரை சதமடித்த இவரிடம் பேட்டி எடுத்த போதும் தந்தையை நினைத்து அழுதார்.

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக், க்ருனால் பாண்டியா சகோதரர்கள் விளையாடினர். இதன்மூலம் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் அண்ணன் - தம்பி இணை ஒன்றாக விளையாடும் நிகழ்வு நடந்துள்ளது.

கடைசியாக 2012ல் இர்ஃபான், யூசுஃப் பதான் விளையாடினர். இங்கிலாந்து அணியில் சாம், டாம் கர்ரான் சகோதரர்கள் விளையாடினர்.

இதுபோல சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் பல்வேறு அணிகளுக்காக அண்ணன் - தம்பி இணைந்து விளையாடும் நிகழ்வுகள் நடந்துள்ளன என்கிறது அந்தச் செய்தி.

அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு - கமல் ஹாசன்

அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு - கமல் ஹாசன்

நடிப்புத் தொழிலை விட்டு விட்டு அரசியலுக்கு வந்ததால் தனக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறினார் என்கிறது தினத்தந்தி செய்தி.

நடிப்புத் தொழிலை விட்டு விட்டு அரசியலுக்கு வந்ததால் தனக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், கமல்ஹாசன் கூறினார்.

நான் காசுக்கு ஆசைப்பட மாட்டேன். காந்தியை போன்று எளிமையாக வாழவேண்டும் என்று நினைக்கக்கூடியவன். மக்களுக்கு சேவை செய்வதற்காக கோவணம் கட்டிக்கொண்டு வருவேன் என்று கமல் பேசியுள்ளார்.

மீண்டும் டிராக்டர் பேரணி - விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகைத்

ராகேஷ் திகைத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகேஷ் திகைத்

இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மீண்டும் டெல்லியில் அணிவகுப்பு நடத்துவோம் என்று பாரதிய கிசான் யூனியன் என்ற வேளாண் அமைப்பின் மூத்த தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார் என்று தி ஹிண்டு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அணிவகுப்பு நடத்தப்படும் போது, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"குடியரசு நாளன்று 3.50 லட்சம் டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழைந்தன. அதை நாங்கள் மீண்டும் செய்வோம்," என்று அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: