இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்: தமிழர்களுக்கான பரிந்துரைகளை நிறைவேற்றாவிட்டால் என்ன ஆகும்?

இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்: தமிழ் மக்களுக்கு உண்மையில் நன்மை தருமா?

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது, உடனடியாக தமிழ் மக்களுக்கு பலன் அளிக்குமா என்பது குறித்தும் போர்க் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்க வைக்குமா என்பது குறித்தும் கலவையான கருத்துகளே நிலவுகின்றன.

இந்த விவகாரத்தில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை, அடிப்படையற்ற, அநீதியான விடயங்கள் மற்றும் தவறான கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இலங்கை தமிழ் தரப்பு மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் கருத்துகளை பிபிசி தமிழ் கேட்டறிந்தது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இதனூடாக தாம் முழுமையாக திருப்தி கொள்ள முடியவில்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கூறுகிறது.

ஆதரவளித்த நாடுகள் - ஈழத் தமிழர்கள் மீது அக்கறை

அந்த சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜனிடம், ஜெனீவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து கேட்டபோது, "இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சி மட்டுமே கொள்ள முடியும்," என குறிப்பிட்டார்.

ஈழத் தமிழர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யாத தீர்மானமாகவே இந்த தீர்மானம் காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர்.

பட மூலாதாரம், Getty Images

இந்த தீர்மானத்தின் ஊடாக உடனடி நீதிப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

LEELADEVI ANNANTHA NADARAJA
படக்குறிப்பு, லீலாதேவி ஆனந்தநடராஜன்

அதேபோன்று, ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட போதிலும், தமக்கான நீதி கிடைக்கவில்லை என அவர் கூறுகிறார்.

எனினும், இலங்கையில் எதிர்வரும் காலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படுமாக இருந்தால், அனைத்து விடயங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு விடும் என்பதனால், இந்த தீர்மானத்தை எண்ணி மகிழ்ச்சி கொள்ள முடியாது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜன் தெரிவித்தார்.

'தமிழ் மக்களுக்கு முழுமையாக நன்மை தருவதாக இல்லை' - சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களுக்கு முழுமையாக நன்மை தருவதாக இல்லை என்றாலும், இலங்கையை பொறுப்புக்கூறலுக்காக ஐநா உள்ளீர்த்துக்கொண்டிருப்பது, தமிழர்களுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த தீர்மானத்திலிருந்து தாம் பிழையான வழியில் சென்று கொண்டிருப்பதை இலங்கை அரசாங்கம் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என அவர் கூறுகின்றார்.

மேலும், பக்கச்சார்பின்றி இருந்தாலும் கூட, தமிழ் மக்களின் பிரச்னைகளை கரிசனையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்பதை இந்தியா கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

C.V.Wigneswaran

பட மூலாதாரம், C.V.Wigneswaran Facebook

படக்குறிப்பு, சி.வி.விக்னேஸ்வரன்

இந்த தீர்மானமானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மக்களுக்கு முழுமையாக நன்மையை ஏற்படுத்தாத போதிலும், அரசாங்கம் பொறுப்புக் கூறலில் இருந்து தப்ப முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

'தமிழ் மக்களுக்கு மன நிறைவு' - எம்.கே.சிவாஜிலிங்கம்

ஐநாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்ட போதிலும், அதில் தோல்வியடைந்துள்ளமையானது, தமிழ் மக்களுக்கு மன நிறைவை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார்.

எனினும், மகிழ்ச்சி அடையக்கூடிய மிகப் பெரிய வெற்றியாக தம்மால் இதனை கருத முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.

ஈழத் தமிழர் பிரச்னை, யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும், சாட்சியங்களை திரட்டுவதற்கான நடவடிக்கைகள் ஐநாவின் பொது சபையில் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறாத நிலையிலும், சாட்சியங்களை சேகரிப்பதற்கான அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருப்பதும் தமக்கான ஒரு பரிசு கிடைத்ததை போன்ற உணர்வு ஏற்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த தீர்மானத்தின் பின்னர், இலங்கை அரசாங்கம் சர்வதேச நெருக்கடிகளை சந்திப்பதற்கான பல கள முனைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

ஐநாவின் தீர்மானத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றாத பட்சத்தில், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார்.

எம்.கே.சிவாஜிலிங்கம்

ஆட்சியிலுள்ள தலைவர்களும், படைத் தளபதிகளும் பிரச்னைகளை எதிர்நோக்கி, பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலைமையை எதிர்கொள்வார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.

'இலங்கைக்கு காலக்கெடு வழங்கப்படும்'

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மூத்த சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவாவிடம், பிபிசி தமிழ் வினவியது.

இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் காணப்படுகின்ற பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு காலக்கெடு வழங்கப்படும் என அவர் கூறுகிறார்.

இவ்வாறு வழங்கப்படும் கால எல்லைக்குள், இலங்கை அரசாங்கம் அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத பட்சத்திலேயே, குறித்த தீர்மானம் பாதுகாப்பு சபை வரை செல்லும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த தீர்மானம் பாதுகாப்பு சபைக்கு செல்லுமாக இருந்தால், அதன் பின்னர் இலங்கைக்கு பாரிய பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என பிரதீபா மஹனாமஹேவா கூறுகின்றார்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையானது, எதிர்காலத்தில் இலங்கைக்கு இருள் சூழ்ந்த நிலைமையை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று, எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கம் குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றாத பட்சத்தில், நாட்டிற்கு எதிராக பாதுகாப்பு சபையின் ஊடாக பொருளாதார தடைகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

பிரதீபா மஹனாமஹேவா

பட மூலாதாரம், Prathiba Mahanamahewa

படக்குறிப்பு, பிரதீபா மஹனாமஹேவா

தற்போது காணப்படுகின்ற நிலைமையில், எதிர்வரும் ஆண்டு கூட இலங்கைக்கு சார்பாக தீர்மானமொன்றை கொண்டு வர முடியாத நிலைமையே காணப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த தீர்மானத்தின் ஊடாக உடனடி தாக்கங்கள் எதுவும் இலங்கைக்கு ஏற்படாது எனவும், சுமார் ஒரு வருட காலத்தின் பின்னரே பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

இந்த தீர்மானத்தில் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பிலிருந்து தவிர்த்துக்கொண்டமை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

தமிழ் நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ளமையினாலேயே, இந்தியா வாக்களிப்பதிலிருந்து தவிர்த்துக்கொண்டதாகவும் அவர் கூறுகின்றார்.

பூகோள அரசியலை அடிப்படையாகக் கொண்டே இந்தியா இந்த விடயத்தில் செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியா இந்த தீர்மானத்திற்கு வாக்களித்திருக்கும் பட்சத்தில், அது தமிழக தேர்தலை பெரிதும் பாதிக்கும் சாத்தியம் காணப்படுவதனாலேயே, இந்தியா வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டதாகவும் பிரதீபா மஹனாமஹேவா குறிப்பிடுகின்றார்.

இலங்கை அரசின் நிலைப்பாடு

இலங்கை அமைச்சர்

பட மூலாதாரம், @MFA_SriLanka

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரத்தில் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை செவ்வாய்க்கிழமை மாலையில் ஏற்பாடு செய்து, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு மாறாக, மனித உரிமைகள் பேரவை செயல்பட முடியாது. குறிப்பிட்ட நாட்டை இலக்கு வைத்து அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டன், மலாவி, ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து கொண்டு வந்த தீர்மான ம்மீதான வாக்கெடுப்பில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாகவும், காலனித்துவத்திலிருந்து விடுப்பட்ட நாடுகளை ஆட்சி செய்வதற்காக சிந்திக்கும் எண்ணத்தை நிராகரிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இதை கருத முடிகிறது என்றும் தினேஷ் குணவர்த்தன கூறினார்.

இலங்கையின் இறையாண்மை, சுதந்திரத்தை பாதுகாத்து, அரச தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஊடாக, நீதியரசர் ஒருவரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இலங்கையின் வடக்கு முதல் தெற்கு வரை தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து மக்களுக்கும் சுதந்திரமான சென்று வாழக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கீழ் அடிபணியாத மக்களின் சுதந்திரத்தை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது என்றும், இந்த விடயங்களை நிராகரித்து, பிரிட்டன் தலைமையில் பல நாடுகள் ஒன்றிணைந்து கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

47 உறுப்பு நாடுகளை கொண்ட மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக 22 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எஞ்சியுள்ள 25 நாடுகளில் 11 நாடுகள், பிரிட்டன் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்துள்ளதை பார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதேபோல, பிரிட்டனின் தீர்மானம் மீது வாக்களிக்காமல் சுயாதீனமாக 14 நாடுகள் செயல்பட்டுள்ளதையும் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார். வல்லரசு நாடுகள் என கூறப்படும் இந்த நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, 25 நாடுகளின் ஆதரவை பெற முடியவில்லை. அப்படியென்றால் பெரும்பான்மை நாடுகள், பிரிட்டனின் தீர்மானத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை. இதன் மூலம், பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவே உள்ளது என்றே கருத முடிவதாக இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, இலங்கைக்கு எதிரான தீர்மானம்: வாக்கெடுப்பை தவிர்த்த இந்தியா, தமிழர்களுக்கு பயன் தருமா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: