கோவையில் கமல்ஹாசன் போட்டியிடுவது ஏன்? ம.நீ.ம துணை தலைவர் மகேந்திரன் பேட்டி

பட மூலாதாரம், MNM
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழ்
ஊழல் கறைபடிந்த திமுக, அதிமுக, ஆகிய கட்சிகளுடன் சேர விரும்பாதவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வாய்ப்பளிக்கும் என்று தெரிவித்திருக்கிறார், அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர். மகேந்திரன்.
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுகிறார் டாக்டர்.ஆர்.மகேந்திரன், பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் தான் இங்கு போட்டியிடுகிறீர்களா?
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்ட எனக்கு மக்கள் அதிக அளவில் ஆதரவு அளித்தனர். கோவை தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் கோவை வடக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் எங்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. கட்சி தொடங்கி சுமார் 15 மாதங்கள் மட்டுமே ஆன சூழலில் கோவை மக்கள் எங்களுக்கு தந்த ஆதரவு பெரும் நம்பிக்கையை கொடுத்தது. அந்த அடிப்படையில்தான் கோவை தெற்கு தொகுதியில் தலைவர் கமல்ஹாசனும், சிங்காநல்லூர் பகுதியில் நானும் போட்டியிட முடிவு செய்தோம்.
சிங்காநல்லூர் தொகுதி மக்கள் மத்தியில் உங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
சிங்காநல்லூர் மட்டுமல்ல தெற்கு தொகுதி உட்பட கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் வெற்றி பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அளித்த 26 வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. அதேபோல் சிங்காநல்லூர் தொகுதியில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திமுகவைச் சேர்ந்த கார்த்திக்கும் மக்களுக்காக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. இவர்கள் மட்டுமின்றி, தற்போது சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளரும் இதுவரை என்ன சாதனை செய்தார் என தெரியவில்லை. இவர்களைப் போல் இல்லாமல், எது சாத்தியமோ, எது தேவையோ அதை கண்டிப்பாக செய்வோம் என உறுதி அளித்து பிரசாரம் செய்து வருகிறோம்.

பட மூலாதாரம், MaKKAL NEETHI MAIYAM
தொழிற்சாலைகள் நிறைந்த சிங்காநல்லூர் தொகுதியில் தொழில்துறை வளர்ச்சிக்காக நீங்கள் முன்வைக்கும் திட்டங்கள் என்னென்ன?
தொழிற்துறையினருடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதில், அவர்கள் பல கோரிக்கைகளை எங்களிடம் முன்வைத்தனர். மற்ற அரசியல்வாதிகளை போல் 'அனைத்தையும் நான் முடித்துத் தருகிறேன்' என அவர்களிடம் உறுதி அளிக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கோரிக்கை பட்டியலில், உடனடியாக நிறைவேற்ற சாத்தியமுள்ளவை அல்லது நிறைவேற்றுவதற்கு நீண்ட காலம் தேவைப்படுபவை என கோரிக்கைகளின் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளேன்.
மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன, இவையெல்லாம் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தி மக்களுடன் ஆலோசனைகள் பெறப்படும்.
ஊழல் செய்த கட்சி என எந்த கட்சியை குறிப்பிடுகிறீர்கள்?
அதிமுக, திமுக என இரு கட்சிகளையுமே ஊழல் கட்சிகள் என கூறுகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருப்பதால் அவர்கள் மீது அதிக அளவிலான விமர்சனங்களை வைக்கிறோம். அதே நேரத்தில் அதற்கு முந்தைய ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களையும் நாங்கள் மறக்கவில்லை.
அந்த வகையில் ஊழல் செய்யும் கட்சிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுவதை தான் எங்களின் முதல் குறிக்கோளாக கருதுகிறோம். மேலும், கொள்கை அடிப்படையில் உறுதி இல்லாத கட்சி என மக்கள் நீதி மய்யம் கட்சியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் நடந்த அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் எங்களின் தலைவர் குரல் கொடுத்துள்ளார். செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் அவை பெரிய அளவிற்கு வெளியாகவில்லை என நான் கருதுகிறேன். அதனால் தான் எங்கள் மீது இந்த விமர்சனமும் வைக்கப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் கட்சிகளோடு கூட்டணியில் இருந்த கட்சிகளை உங்கள் கூட்டணியில் இணைத்து, அதிக தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளீர்களே?
இதற்கு முன்னர் நாங்கள் வேறு வழியில்லாமல் ஊழல் செய்த கட்சியோடு கூட்டணியில் இருந்தோம், மேடையை பகிர்ந்து கொண்டோம். ஆனால், அவர்களின் ஊழல் கறை எந்தவிதத்திலும் எங்களின் மீது இல்லை. அவர்கள் செய்த ஊழலால் நாங்கள் பலன் அடையவும் இல்லை. ஊழல் இல்லாத கட்சியின் தலைமையில் சேர்ந்து ஊழலற்ற ஆட்சியை தர ஆசைப்படுகிறோம் என விரும்பி எங்களோடு இணைபவர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். அவர்கள் மட்டுமல்ல திமுக மற்றும் அதிமுக ஆட்சியிலும் ஏராளமான நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக நினைக்கிறீர்கள்?
20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக ஒரு தொகுதியை கூட கைப்பற்றாது என நான் கருதுகிறேன். காரணம், மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் பல்வேறு மதத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்து மதத்திலேயே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பெரியாரை பின்பற்றுபவர்கள் என பல்வேறு தரப்பினர் இருக்கின்றனர். மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்பவர்களுக்கு தமிழக மக்கள் வாய்ப்பளிக்க மாட்டார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
இதனால் தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை. திமுகவிற்கு தான் வாக்களிக்க வேண்டும் எனவும் யாரும் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. பாஜக வெற்றி பெற்றுவிடக் கூடாது எனவும், வேறு வழியில்லாமலும் தான் அப்போது திமுகவிற்கு மக்கள் வாக்களித்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நகர்ப்புறங்களில் அதிக ஆதரவும், ஊரகப் பகுதிகளில் ஆதரவு குறைவான ஆதரவும் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அது உண்மையா?
அது உண்மையா இல்லையா என்பது இந்தத் தேர்தலின் முடிவுகள் வந்ததும் தெரிந்துவிடும். தகவல்களை எளிதாகப் பெறும் இடத்தில் உள்ள நகரப் பகுதி மக்கள் எங்களுக்கு அதிக ஆதரவு அளித்து வந்தனர். தற்போது, ஊரகப் பகுதிகளிலும் எங்களது கட்சியினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதன் பலனாக இந்த தேர்தலில், ஊரகப் பகுதிகள் உட்பட பெரும்பாலான தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கைப்பற்றும்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி திட்டம் கோவிட்-19 பரவல் அதிகரிப்பதை ஏன் தடுக்கவில்லை?
- கோவிட்19 தொற்று புரளிக்குப் பின் இறந்த தான்சானியா அதிபர்
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












