புதுச்சேரியில் திமுகவுக்கு அதிக இடம்: அழுத்தத்தில் உள்ளதா காங்கிரஸ்?

திமுக

பட மூலாதாரம், DMK

    • எழுதியவர், நடராஜ் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மதசார்பற்ற காங்கிரஸ் - திமுக கூட்டணியில், கடந்த முறையை விட இம்முறை திமுகவிற்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி அரசியலில் குறிப்பாக கடந்த தேர்தல் காலங்களில், காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், 20க்கும் மேற்பட்ட தொகுதிகளிலேயே போட்டியிட்டு வந்தது. 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது, காங்கிரஸ் போட்டியிட்ட 21 தொகுதிகளில் 15 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது 15 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி போட்டியிட ஒப்புக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இதன் பின்னணி குறித்து அக்கட்சியின் அனைத்து மட்டங்களிலும் பிபிசி தமிழ் அலசியது.

புதுச்சேரியில் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைத்தது. அதில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், திமுக 9 இடங்களிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் 15 மற்றும் திமுக 2 இடங்களிலும் வென்றதையடுத்து கூட்டணி ஆட்சி அங்கு அமைந்தது.

இதைத்தொடர்ந்து நாராயணசாமி தலைமையில் உருவான புதிய அமைச்சரவையில், திமுகவிற்கு இடம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுகவுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. இது திமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரியில் ஆளும் கூட்டணி அரசில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து கூட்டணிக் கட்சியில் உள்ள திமுக மாநில அமைப்பாளர்களைக் கலந்தாலோசிக்காமல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக தலைவர் ஸ்டாலினுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவதும் உள்ளூர் கட்சி நிர்வாகிகளுக்கு அதிருப்தியை தந்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்த இடைவெளி நாளுக்கு நாள் அதிகமான நிலையில், புதுச்சேரியில் நாராயணசாமி அரசுக்கு அப்போது துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலால் மாநில வளர்ச்சி மற்றும் தொகுதி மேம்பாட்டிற்கு உதவ முடியாத சூழல் ஏற்படுவதாக புதுச்சேரியில் உள்ள திமுகவினர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினர்.

உள்ளூரில் திமுகவினரை முதல்வராக இருந்த நாராயணசாமி கண்டுகொள்ளாமல் இருந்தால், அது கூட்டணியில் கசப்பான உணர்வை தீவிரமாக்கும் என்று மு.க. ஸ்டாலினிடமும் திமுகவினர் முறையிட்டு தங்களுடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர். இதன்பிறகு கட்சி கூட்டத்திலும், சட்டப்பேரவையிலும் திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விமர்சனங்களை பகிரங்கமாகவே பதிவு செய்தனர். இதுதான் சில வாரங்களுக்கு முன்பு கிரண் பேடிக்கு எதிராக நாராயணசாமி தனது அமைச்சரவை சகாக்களுடன் வீதியில் இறங்கி போராடியபோது, அதில் பங்கேற்காமல் திமுகவினர் ஒதுங்கிக் கொண்டதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ்

பட மூலாதாரம், NARAYANASAMY

இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரியில் ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நேரடியாகவே சுமத்தினார். சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையில் கூட்டணி அமையும் என்று ஜெகத்ரட்சகன் பேசியபோது, அங்கு ஜெகத்ரட்சகன் தலைமையில் திமுக தனித்துப் போட்டியிட முடிவெடுத்திருப்பதாகவே பார்க்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைமை, ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசத்தில் ஈடுபட்டது.

இத்தகைய சூழலில்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்த்த நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸிலிருந்து விலகி திமுகவுக்கு சென்றனர். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடையத் தொடங்கியதை உணர்ந்த திமுக தரப்பு, அந்த சூழலை தனக்கு சாதமாக்கிக் கொண்டு சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட காங்கிரஸ் மேலிடத்தை இணங்கச் செய்தது.

இதையடுத்து அங்கு காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அடங்கிய மத சார்பற்ற கூட்டணி 30 தொகுதிகளில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் 15, திமுக 13, விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 1 இடங்களில் வரும் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்றன.

தற்போதைய நிலையில், கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தலைமை தங்கினாலும் யார் தலைமையில் ஆட்சி அமைப்பது என்பது இதுவரை இறுதி செய்யப்படவில்லை. அது, தேர்தலுக்குப் பிறகு எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ அதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்று திமுக, காங்கிரஸ் கட்சியிடம் பேசியிருக்கிறது.

முன்னதாக திமுகவுக்கு வழக்கத்தை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் மாநில மேலிட தலைவர்களிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியத்திடம் பிபிசி தமிழுக்காக பேசியபோது, "காங்கிரஸ் கட்சியிலிருந்த அமைச்சர்கள், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 8 பேர் வேறு கட்சிகளுக்குச் சென்று விட்டனர். கடந்த முறை யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கில் பல தரப்பினரை கட்சியில் சேர்த்தோம். ஆனால், கடைசி நேரத்தில் பல கட்சிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள், தேர்தல் வெற்றிக்குப் பிறகு அமைச்சர் பதவியை பெற்று அதிகாரத்தை அனுபவித்து விட்டு தற்போது வேறு கட்சிகளுக்கு சென்று விட்டனர்" என்று தெரிவித்தார்.

இழப்பை ஈடு செய்ய அவகாசமில்லை

காங்கிரஸ்

பட மூலாதாரம், AVS

படக்குறிப்பு, ஏ.வி. சுப்பிரமணியம்

அவர்களின் விலகல் ஒரு வகையில் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பு என்றாலும், அவர்களின் இடத்தில் வேறு 10 பேரை உடனடியாக நிரப்ப இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் எங்களது கூட்டணி கட்சியான திமுகவிற்குக் கூடுதலாக இடம் கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் தரப்பிலும் அதிக இடங்களைக் கேட்டதால் அதை வழங்கினோம்," என்று ஏ.வி. சுப்பிரமணியம் கூறினார்.

தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பற்றி பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், "எந்தவொரு கட்சியிலும் தொகுதி ஒதுக்கீடு செய்யும்போது அதிருப்தியாளர்கள் இருப்பதுண்டு, இது வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது," என்றார்.

இதே சமயம், புதுச்சேரி மக்களிடையே திமுகவிற்கு அதிக வரவேற்பு காணப்படுவதால்தான் இம்முறை திமுக அதிக இடங்களில் போட்டியிடுவதாக கூறினார், திமுக வடக்கு மண்டல அமைப்பாளர் எஸ்.பி.சிவகுமார்.

திமுக

பட மூலாதாரம், SIVAKUMAR

படக்குறிப்பு, சிவகுமார்

"தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மிகப்பெரிய பெரிய அலையாக உருப்பெற்றுள்ளார். அதன் தாக்கம் புதுச்சேரியிலும் இருக்கிறது. அவரின் தலைமையில் நாங்கள் செயல்படுகிறோம். மேலும், திமுகவில் களப்பணி அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகவே திமுக அதிக தொகுதிகளில் வெல்ல வாய்ப்பிருக்கின்ற காரணத்தினாலேயே அதிக இடங்களில் போட்டியிடுகிறோம்," என சிவகுமார் கூறினார்.

குறைத்து மதிப்பிடுகிறதா திமுக?

இந்த நிலையில், புதுச்சேரியில் இருக்கும் திமுக, காங்கிரசை ஒரு சிறிய கட்சியாகவே பார்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து புதுச்சேரி அரசியல் விவகாரங்களை மிக நெருக்கவமாக கவனித்து வரும் மூத்த அரசியல் அரசியல் ஆய்வாளர்கள், "பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே நாராயணசாமி அரசை வழிநடத்தினார். கடந்த முறையை விட காங்கிரஸ் கட்சி, தனது ஆறு இடங்கள் குறைத்து திமுகவிற்குக் கூடுதல் தொகுதிகளைக் கொடுத்துள்ளது. திமுகவிற்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு இருக்கிறது. ஆனால் புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி மட்டுமே அனைத்து கட்சிகளை விட அதிக செல்வாக்குடன் உள்ளது. கூட்டணி சித்தாந்தம் உள்ளே வருவதாலேயே இவர்களுக்குள் தவறான புரிதல் வருகிறது," என்றார்.

"ஒரு சில தொகுதிகளில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக எதிர்ப்புகள் இருக்கிறது. ஆனால், இந்த எதிர்ப்பு அனைத்து தொகுதிகளிலும் உள்ளது. திமுகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும் விஷயத்தில் காங்கிரஸின் அனைத்து மட்டத்திலும் கருத்து கேட்கப்பட்டதா என்பது சந்தேகமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை திமுக குறைத்து மதிப்பீடு செய்ததே காங்கிரஸ் குறைந்த இடங்களில் போட்டியிடுவதற்கு காரணம்," என்று கூறுகின்றனர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :