அதிமுக பொதுக்குழு: தொண்டர்களுக்குப் புரியாத ஒரு நாடகமா?

அதிமுக பொதுக்குழு: தொண்டர்களுக்குப் புரியாத ஒரு நாடகமா?

பட மூலாதாரம், DIPR

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், தேர்தல் வியூகங்களை வகுக்க நடத்தப்பட்ட அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் எந்தவித பரபரப்பும் இன்றி நடந்தது போல தெரிந்தாலும், அந்த கூட்டம் கட்சியில் நிலவும் பூசல்களை வெளிப்படுத்துவதாக இருந்தது என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கூட்டணி கட்சிகளிடம் தங்கள் கட்சி பலமானது என்றும், தங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறது என்பதையும் காட்டுவதற்காக, பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் மூத்த தலைவர்கள் ஒரே கருத்தை பலவிதமாக பேசினார்கள் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்றும் கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு அமைப்பது பற்றியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தவிர, பிற தீர்மானங்கள் அதிமுகவினர் தங்களை தாங்களே தட்டிக்கொடுக்கும் தீர்மானங்கள்தான்.

அதிமுகவின் கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்களுக்கும் தற்போது கட்சியில் நிலவும் சூழலுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

''இதுவரை அதிமுக சார்பில் வெளியாகியுள்ள தேர்தல் விளம்பரங்களில் ஓ. பன்னீர்செல்வம் காணப்படவில்லை. முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்றுக்கொண்டாலும் 11 நபர்கள் கொண்ட குழு தேவை என பன்னீர்செல்வம் வலியுறுத்தி பெற்றுவிட்டார். ஆனால் இருவரும் மிகுந்த பக்குவம் கொண்ட நபர்களாக காட்டிகொண்டார்கள். அதிமுகவின் கட்சி விதிகளில் இதுவரை வழிகாட்டுதல் குழு போன்றவற்றுக்கு இடம் இருந்ததில்லை. தற்போது அந்த குழு, அமைக்கப்பட்டாலும் அதிலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தங்களது பலத்தை காட்டுவதற்கான நபர்களைதான் சேர்ப்பார்கள் என்பதால் அந்த குழுவால் கட்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது,'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.

அதிமுக பொதுக்குழு: தொண்டர்களுக்குப் புரியாத ஒரு நாடகமா?

பட மூலாதாரம், AIDMK

சசிகலா விடுதலையாகும் நேரத்தில் எந்த பிளவும் இருக்கக்கூடாது என்பதற்காக கட்சியில் ஒற்றுமை உள்ளது போல காட்டிக்கொள்வதற்காக கோஷ்டி பூசல் கட்சியில் இல்லை என ஓபிஎஸ் குறிப்பிட்டார் என்கிறார் அவர். ''கட்சியில் கோஷ்டி இல்லை என வலியுறுத்தி சொல்வதற்கான தேவை என்ன? சசிகலா அல்லது டிடிவி தினகரன் ஆகியோருக்கு கொடுக்கப்படும் சமிக்ஞைதான் அது. எந்த விதத்திலும் அவர்களுடன் சமரசம் இல்லை என எடுத்துரைக்கும் வகையில் ஓபிஎஸ் பேசியுள்ளார். அதோடு கட்சியில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக அல்லது மூன்றாவது சக்தியாக யாரும் உருவெடுக்க கூடாது என்பதற்காகத்தான் 11 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதுவரை அதிமுகவில் தலைமை பொறுப்புக்கான போட்டி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்பதை இந்தக் கூட்டம் உணர்த்துகிறது,'' என்கிறார் ராதாகிருஷ்ணன்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலுள்ள சமூகவிலக்கம் மற்றும் சேர்த்தல் கோட்பாடு ஆய்வு மையத்தில் தமிழக சமூக அரசியல் பிரச்சனைகளை ஆய்வுகளுக்கு உட்படுத்துபவர் பேராசிரியர் ராமஜெயம். அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்களை கூர்ந்து நோக்கிய அவர், ''கூட்டணி கட்சிகளிடம் சீட் ஒதுக்கும் போது அந்த கட்சிகள் பேரம் பேசக்கூடாது என்பதற்காக சில கருத்துக்களை அந்த கூட்டத்தில் பேசினார்கள். தங்களது பலத்தை காட்டி, தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் நிரூபிக்க முயன்றிருக்கிறார்கள். இதன்மூலம் கூட்டணி கட்சிகள் தாங்கள் கொடுக்கும் சீட்டை மட்டுமே பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை மறைமுகமாக சொல்கிறார்கள். பாமக தவிர பிற கட்சிகள் அதிமுகவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள் என்பதால் அந்தக் கட்சிகளுக்கு சொல்லும் செய்தியாக இந்த கூட்டம் நடந்தது,'' என்கிறார் ராமஜெயம்.

அதிமுக பொதுக்குழு: தொண்டர்களுக்குப் புரியாத ஒரு நாடகமா?

ஓ.பி.எஸ் உரையில், அதிமுகவில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை என பேசியது பற்றி கேட்டபோது, ''கட்சியில் தனக்கு செல்வாக்கு இருக்கிறது என்று ஈ.பி.எஸிடம் காட்டுவதற்காக ஓ.பி.எஸ் சொல்லியிருக்கிறார். தான் அடிபணிய மாட்டேன் என்றும் கட்சி செயல்பாடுகளில் ஈ.பி.எஸ் காட்டும் அதிகாரங்களுக்கு இணையான அதிகாரம் தனக்கும் உள்ளது என்பதை சொல்வதற்காக ஓ.பி.எஸ் பேசியிருக்கிறார்,'' என்கிறார்.

மேலும், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் நேரடியாக பேசுவதற்கு பதிலாக தங்களது கருத்துக்களை 11 பேர் கொண்ட குழு வழியாக பேசிக்கொள்வதற்கான ஏற்பாடுதான் வழிகாட்டுதல் குழு என்கிறார் ராமஜெயம்.

''எல்லா முடிவுகளையும் இவர்கள் இருவர்தான் எடுக்கிறார்கள். இவர்களுக்கு வழிகாட்டுவதற்கு தனி குழு ஏற்படுத்தவேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டுள்ளது? இருவரும் தங்களது செல்வாக்கை வைத்து குழுவை வேண்டுமானால் வழிநடத்தலாம். ஆனால் இந்த குழுவால் எந்த பயனும் இல்லை,'' என்கிறார் அவர்.

அதிமுக கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பேசிய வசனங்கள் பலவும் நடிப்புதான் என்ற கோணத்தை வைக்கிறார் அரசியல் விமர்சகர் மற்றும் எழுத்தாளர் மார்க்ஸ். ''அதிமுகவில் ஓ.பி.எஸ் மட்டுமல்ல, பல மூத்த அமைச்சர்கள், தற்போதைய முதல்வர் பழனிசாமி உள்பட எல்லோரும் ஜெயலலிதா மற்றும் சசிகலா காலில் விழுந்தவர்கள்தான். தற்போது யாருக்கும் யாரும் அடிமை இல்லை என பேசுவது வெறும் நடிப்பு. பாஜகவோடு நெருங்கிய உறவில் இருப்பதாக அதிமுக காட்டிக்கொள்கிறது. அதேநேரம், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் பாஜகவுக்கு எதிராக பேசுகிறார்கள். கே.பி. முனுசாமி முதலில் தேசிய கட்சிகள் மாநில கட்சிகளைதான் நம்பியிருக்கிறார்கள் என்கிறார். அதோடு, அதிமுகவின் தீர்மானங்களை ஏற்பவர்கள்தான் கூட்டணியில் இருப்பார்கள், தங்களது கட்சி யாரையும் நம்பி இல்லை என்கிறார். இதெல்லாம் தங்களை பலமானவர்கள் என கூட்டணிக் கட்சிகளிடம் சொல்வதற்கான ஏற்பாடுதான்,'' என்கிறார் மார்க்ஸ்.

அதிமுக பொதுக்குழு: தொண்டர்களுக்குப் புரியாத ஒரு நாடகமா?

பட மூலாதாரம், AIDMK

அதிமுகவில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையில் நிலவும் மோதலை நேரடியாக கூட்டத்தில் பார்க்க முடிந்தது என்கிறார் மார்க்ஸ். ''ஓ.பி.எஸ் பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். ஈ.பி.எஸ் அதிமுகவில் தனது செல்வாக்கை சமீபத்தில் நிலைநிறுத்தியவர். பாஜகவோடு கூட்டணி என்பதோடு பிரச்சனை முடியவில்லை. ஒருவேளை ஆட்சிக்கு வந்தாலும், பாஜகவுக்கு ஏற்றாற்போல் செயல்படவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் என்பதை இருவரும் உணர்ந்தும் இருக்கிறார்கள். அந்த ஏற்பாட்டை ஓ.பி.எஸ் ஏற்கிறார். ஈ.பி.எஸ் அதற்கு உடன்படமாட்டார் என்பதற்காகத்தான் ஈ.பி.எஸின் குரலாக முனுசாமி பேசுகிறார். அந்த பேச்சை ஆதரிக்க ஈ.பி.எஸ் நேரடியாக பேசவில்லை. ஆனால் எதிர்க்கவில்லை. ஓ.பி.எஸ் எந்த கருத்தும் சொல்லவில்லை,'' என்கிறார் மார்க்ஸ்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு சம்பிரதாயமான கூட்டமாகக் கருதப்பட்ட இந்தக் கூட்டத்தில், சலசலப்புக்கள் ஜாக்கிரதையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தரப்பையும் ஏதோ ஒரு நிர்பந்தம் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. அவை, எந்த நேரத்திலும் எப்படியும் திசை மாற வாய்ப்பு இருக்கிறது. மொத்தத்தில், தங்களையும் அறியாமல், தொண்டர்களுக்குப் புரியாத ஒரு நாடகத்தை தலைவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது அரசியல் விமர்சகர்களின் பார்வையாக இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: