மு.க.ஸ்டாலின் மீது ஆதாரம் இருந்தால் வழக்கு போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஆ.ராசா சவால்

திமுக

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு, ஆ. ராசா

திமுக மீது ஆதாரமில்லாமல் புகார் சொல்வதை நிறுத்தாவிட்டால் வழக்கு தொடரப்படும் என திமுக துணை பொதுச் செயலாளர் ஆ ராசா தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் திமுக அளித்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில்சொல்ல முதுகெலும்பற்ற நிலையில் அதிமுக இருக்கிறது என்றும் தொடர்ந்து ஆதாரமில்லாமல் புகார் சொல்வதை அதிமுக தொடர்ந்தால் சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும் என ஆ.ராசா காட்டமாக விமர்சித்துள்ளார்.

தேர்தல் பிரசார மேடைகளில் தொடர்ந்து திமுக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி, ஊழல் பற்றிய விவாதத்திற்கு தயாரா என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுகிறார் இதைப் பற்றி ஏற்கனவே அவருக்கு எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை என்றார் ராசா.

''உச்ச நீதிமன்றத்தால் ஊழல்வாதி என்று தண்டிக்கப்பட்ட முதல்வரை அதிமுக மட்டுமே பெற்றுள்ளது. வேறு எந்த கட்சியும் இல்லை என பலமுறை சொல்லியிருக்கிறேன். அந்த கட்சியின் தலைவி செய்த செயல்கள் அரசியல் சட்டத்தை கொலை செய்த, ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல் செயல்கள் என நீதிமன்ற தீர்ப்பில் உள்ளது.

இந்த வாசகங்கள் தீர்ப்பில் இல்லை என்றோ அவர்கள் ஊழல்வாதிகள் இல்லை அவர்களால் இதுவரை சொல்லமுடியவில்லை. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் திமுக மீது புகார் சொல்லிவருகிறார்,'' என்றார் ஆ.ராசா.

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின், விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு ஏன் ஊழல் பற்றிய விவாதத்திற்கு வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினர். அதோடு, நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றும் அது பற்றி பழனிசாமி இதுவரை பதில் தரவில்லை என்றும் கூறினார்.

அதிமுக
படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி

''அதிமுகவில் பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுவரை விசாரணை செய்ய முடிவுகள் எடுக்கப்படவில்ல,''என்கிறார் அவர்.

2ஜி வழக்கு பற்றி பழனிசாமி பேசுவதில் எந்த உண்மையும் இல்லை என்று கூறும் ஆ ராசா, ''2ஜி வழக்கில் கலைஞர் டிவிக்கு பணம் சென்றதாக பழனிசாமி பேசுகிறார். முதலில் அவர் அந்த வழக்கைப் பற்றி படிக்கவில்லை என தெரிகிறது. அந்த வழக்கின் தீர்ப்பில், எந்தவித ஆதாரமும் இல்லை என தெளிவாக 400 பக்கங்களில் சொல்லியிருக்கிறார். அவரால் இந்த தீர்ப்பை படிக்கமுடியவில்லை என்றால் யாரிடமாவது கேட்டு படித்துவிட்டுப் பேசட்டும்,''என்று கூறினார் ராசா.

திமுக மீது புகார் கூறும் முதல்வர் பழனிசாமி, ஆதாரங்கள் இருந்தால், ஸ்டாலின் மீது முதல் தகவல் அறிக்கை பதியட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: