கிரண் பேடி Vs நாராயணசாமி: ஆளும் கூட்டணி நடத்தும் தர்ணாவில் பங்கேற்ற முதல்வர்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி கட்சியினர் மீண்டும் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து புதுவையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற மத்திய அறசை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து 300 பேரை கொண்ட மூன்று கம்பனி துணை ராணுவ படையினர் ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடக்கும் பகுதியில் குவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று (ஜனவரி 8) முதல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் தொடர் தர்ணா நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடுப்பதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த போராட்டம் காரணமாக, மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் ஆளுநர் மாளிகை, சட்டமன்ற வளாகம், முதல்வர் அலுவலகம், தலைமை செயலகம், கொரோனா மருத்துவமனை வளாகம் மற்றும் பிற பகுதிகளில் 500 மீட்டர் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குள் போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டார்.
முதல்வர் குற்றச்சாட்டு
"புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை புதுச்சேரி மாநிலத்தை விட்டு வெளியேறு என்ற கோஷத்தோடு அமைதியான முறையில் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இந்த போராட்டத்திற்கு முக்கியமான காரணம் புதுச்சேரி மாநில மக்களுடைய உரிமைகளை பறிக்கின்ற வகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார்" என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தடுத்து நிறுத்துகிறார். மக்களுக்கு நிதி ஆதாரம் கொடுக்க முன்வந்தால் அதை தடுக்கிறார். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையில் முடிவு செய்து அதிகாரிகளை நியமித்தால் அதற்கு தடையாக இருக்கிறார், அதிகாரிகளை மாற்றுகிறார். காவிரி நதிநீர் பிரச்னையில் தலையிட்டு மத்திய அரசை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டாம் என்று கூறுகிறார். ஒப்புதலுக்கு அனுப்பப்படும் கோப்புகள் அனைத்தையும் டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் தலையிடுகிறார்," என முதல்வர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசின் அன்றாட செயல்பாடுகளில் கிரண்பேடி தலையிடுகிறார். புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற பிரதமர் நரேந்திர மோதியிடம் வற்புறுத்துவதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம்," என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இந்த போராட்டத்தின் எதிரொலியாக அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், பாதுகாப்புக்காக மூன்று கம்பனி துணை ராணுவ படையினர் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டனர். இந்தப் படையினர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து 500 மீட்டர் தொலைவு வரை மூன்று அடுக்கு பாதுகாப்பு அரணாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, துணைநிலை ஆளுநர் மாளிகை அருகே தர்ணா நடத்த தடை செய்யப்பட்டதால், அண்ணா சாலைக்கு போராட்டம் மாற்றப்பட்டது. மேலும் தொடர் போராட்டமாக நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இப்போது, வரும் 11ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டுமே இந்த போராட்டம் நடக்கும் என்று புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் எ.வி.சுப்பரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த தர்ணாவில் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி மற்றும் மத சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பங்கேற்கின்றன. காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கும் திமுக இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போராட்டம் நடக்கும் பகுதியில் புதுச்சேரி காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் என 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பிற்காக நிற்க வைக்கப்பட்டுள்ளன.
2019 பிப்ரவரி மாதம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து, முதல்வர் நாராயணசாமி தலைமையில் தொடர் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாகவும் கூறி 39 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
6 நாட்கள் நடந்த இந்த போராட்டத்தில் இறுதியாக, முக்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக கிரண்பேடி ஒப்புதல் அளித்ததால் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிடுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இப்போது இந்தப் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
பிற செய்திகள்:
- அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: நடந்தது என்ன? டிரம்பை பதவி நீக்க முடியுமா?
- விவசாயிகளின் போராட்ட திட்டம் என்ன? எப்படி முடியும் இந்த போராட்டம்?
- "திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி; 100% தேவையற்ற ஒன்று" - சுயநலத்துக்காக அரசியல் செய்கிறதா திரைத்துறை?
- தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன?
- "திரையரங்கில் 100% பார்வையாளர்கள் தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












