நரேந்திர மோதி - நாராயணசாமி மோதல்: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை?

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஜம்மு காஷ்மீரில் சனிக்கிழமை நடந்த விழாவில் காணொளி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என விமர்சனம் செய்தார்.
இந்தியாவில் உண்மையில் ஜனநாயகம் இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு பதிலடி தரும் வகையில், காங்கிரஸ் ஆளும் புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத விவகாரத்தை கையில் எடுத்தார் பிரதமர்.
ஜனநாயகத்தைப் பற்றிப் பாடம் நடத்துகிறவர்கள் ஆளும் யூனியன் பிரதேசம்தான் புதுச்சேரி என்றும் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலடி தந்த புதுவை முதல்வர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தேர்தல் ஆணையரை நியமிக்கும் உரிமையை ஆளுநர் மூலம் பறிப்பதாகவும் அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதாகவும் கூறி, தேர்தல் நடக்காததற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்பாக மத்திய அரசு கடைபிடிக்கும் அணுகுமுறைதான் இதற்குக் காரணம் என்று வாதிட்டார்.
உண்மையில் புதுச்சேரியில் என்னதான் நடக்கிறது? புதுவையில் ஏன் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை?
புதுச்சேரி யூனியன் பிரதேச வரலாற்ரில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது.
1968 டிசம்பரில் முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதன் பிறகு 38 ஆண்டுகள் கழித்து 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
2011ஆம் ஆண்டு அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கானபதவிக் காலம் முடிந்ததில் இருந்து தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
இதனிடையே புதுச்சேரியில் வார்டுகளை 4 வார காலத்துக்குள் சீரமைத்து, 8 வார காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2018 மே மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் வார்டுகளை மறுசீரமைத்து புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டது. இதனால் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது.

பட மூலாதாரம், ANI
இந்த சூழலில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அரசுக்கும் இடையே தேர்தல் ஆணையரை நியமனம் செய்வதில் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு தரப்பு நியமிக்கும் ஆணையரை மறு தரப்பு ஏற்காமல் முட்டுக்கட்டை நிலவியது.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் என்பவரை நியமிக்க புதுச்சேரி அமைச்சரவை கடந்த ஆண்டு முடிவு செய்து, துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியது.
பின்னர் தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.
அகில இந்திய அளவில் விண்ணப்பம்
இதன்பிறகு மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மேலும் பாலகிருஷ்ணன் நியமனத்தை ரத்து செய்து ஆளுநர் கிரண்பேடி உத்தவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது.
இந்த சூழலில், புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேர்தல் ஆணையராக கடந்த அக்டோபர் மாதம் கேரளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரியான ராய் பி தாமஸ் என்பவரை ஆளுநர் கிரண்பேடி நியமித்தார்.
தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ராய் பி தாமஸ் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து தகவல்களைக் கூறினார். அப்போது அவர், "புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டன. இந்த தேர்தலை எவ்வளவு காலத்துக்குள் நடத்த முடியும் என்பது பற்றி தற்போது உறுதியாக கூற இயலாது. அதற்கு அவகாசம் தேவைப்படும்," என்று கூறினார்.

இந்நிலையில் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள் கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தன. தேர்தல் தேதி இதுவரை குறிப்பிடப்படாத நிலையில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான் பிரதமர் - புதுவை முதல்வர் வார்த்தை மோதல் நேற்று நடந்தது.
"உள்ளாட்சித் தேர்தல் நடக்காததற்கு மாநில அரசாங்கத்தை குற்றம் கூறுவது சரியில்லை. முழுமையாக மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து கொண்டு துணைநிலை ஆளுநர் இந்த தேர்தலை நடத்தவில்லை," என பிபிசி தமிழிடம் நாராயணசாமி கருத்து தெரிவித்தார்.
புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயக்கம் ஏன்?
புதுச்சேரி சிறிய ஒன்றியப் பிரதேசம் என்பதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் நகராட்சி உறுப்பினர்களால் சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரம் பறிக்கப்படும் என்று அரசியல் கட்சிகள் இதில் ஆர்வம் காட்டத் தயங்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் கூறுகையில், "புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பிரதமர் பேசியிருப்பது அரசியல் செய்வதை காட்டுகிறது. ஜனநாயகத்தை பற்றிய அக்கறை பாஜக-விற்கு எப்பொழுதும் இல்லை. காஷ்மீரில் எப்படி தேர்தல் நடத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆளும் கட்சிகள் மட்டுமின்றி மற்ற கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால், அவர்களுடைய அதிகாரம் குறைக்கப்படும், பாதிக்கப்படும் என்று பெரும்பாலானோர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. இத்தனை காலமாக மாநில அரசாங்கம் உள்ளாட்சி தேர்தல் நடந்தாமல் இருப்பது தவறு, அதை கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்," என்றார் அவர்.
"ஆளும் அரசு தேர்தல் ஆணையர் ஒருவரை நியமித்தால், அதற்கு மாற்றாக ஆளுநர் வேறொரு ஆணையரை நியமிக்கிறார். இந்த இருவரும் இணைந்து மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபடுகின்றனர்.
2006ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மீண்டும் தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை ஏற்கனவே இருந்த என்.ஆர்.காங்கிரஸ் அரசாங்கமும் நடத்தவில்லை. இப்போது இருக்கும் காங்கிரஸ் அரசாங்கமும் நடத்தவில்லை," என்கிறார் ராஜாங்கம் .
கட்சிகள் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து உரத்துக் குரல் எழுப்ப மறுக்கின்றன. தொடர்ந்து இந்த உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தில் அமைதிக்காத்து வருகின்றன என்று கூறுகிறார் அவர்.
"உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். அதில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அமலாக வேண்டும். கேரள மாநிலத்தில் 21 வயது இளம் பெண்திருவனந்தபுரம் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு புதுச்சேரி தேர்தலிலும் இருக்க வேண்டும்.
அதற்கான நிதியை ஒதுக்கி விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதில் மாநில அரசாங்கம் மற்றும் துணைநிலை ஆளுநர் இரு தரப்பும் ஒரே நேர்க்கோட்டில் இருந்து தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் குறை சொல்வது மக்களை குழப்பும் செயல்," என்று தெரிவித்தார் ராஜாங்கம்.
பிற செய்திகள்:
- ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்: மருத்துவர்கள் விதித்த கட்டுப்பாடுகள்
- பேனசீர் பூட்டோ தன்னை கொல்லும் திட்டம் முன்பே தெரிந்தும் சாவைத் தழுவினாரா?
- விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி: விண்வெளியில் ஓராண்டு தாக்குபிடிப்பது எப்படி?
- உலக நாடுகளில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா - எங்கெல்லாம் பாதிப்பு?
- 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால 'ஃபாஸ்ட் ஃபுட்' கடை கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












