விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி: விண்வெளியில் ஓராண்டு தாக்குபிடிப்பது எப்படி?

ஸ்காட் கெல்லி

பட மூலாதாரம், NASA

    • எழுதியவர், பால் ரின்சென்
    • பதவி, அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் வலைத்தளம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஓராண்டு காலம் எப்படி தாக்குபிடித்தார் என்பதை விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி பிபிசியிடம் விளக்கினார். நாசாவில் இருந்து ஓய்வுபெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், யாராவது கேட்டுக் கொண்டால் மீண்டும் செல்வேன் என அறிவித்திருப்பது ஏன் என்றும் விளக்குகிறார்.

2015 ஜூலை 16 ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த 3 பேரும், ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்திற்குள் சென்றனர். அவசர காலத்தில் உயிர் தப்புவதற்கான கலனாக சோயுஸ் இருந்தது.

செயல்பாடு முடிந்த ஒரு பெரிய செயற்கைக்கோள் விநாடிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் தாறுமாறாக சுழன்று கொண்டு இறங்கிக் கொண்டிருந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மிக அருகில் அது வரும் என்பதை, கட்டுப்பாட்டாளர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அது விலகிய நிலையில் கடந்துவிடுமா அல்லது விண்வெளி நிலையத்தில் மோதிவிடுமா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, ரஷ்ய விண்வெளி வீரர்கள் கென்னடி படல்க்கா, மிகையீல் ``மிஷா'' கோர்னியெக்கோ ஆகியோர் குறைந்த இடவசதி உள்ள உயிர்காக்கும் கலனுக்குள் நுழைந்து கொண்டனர். கீழே விழுந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோள் கடந்து செல்லும் வரையில், இதுபோன்ற நெருக்கடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளின்படி மூவரும் தனி கலனில் இருந்தனர். தேவையைப் பொருத்து, நொடி நேரத்தில் தரப்படும் அறிவிப்பை ஏற்று, விண்வெளி நிலையத்தில் இருந்து இந்தக் கலனைப் பிரித்துக் கொண்டு அவர்கள் பூமிக்கு வந்துவிட வேண்டும் என்பது திட்டமிடப்பட்ட நடைமுறையாக இருந்தது.

விண்வெளி

பட மூலாதாரம், NASA

முன்னாள் ராணுவ பைலட்டான கெல்லி, உயிருக்கு ஆபத்தான நிலையை எதிர்கொண்டது அநேகமாக அதுதான் முதல் முறை. ஆனால் கூட்டாக இருந்தாலும், எந்த செயலிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. ஒருவேளை செயற்கைக்கோள் மோதினால், அவர்கள் விடுவித்து பயணிப்பதற்கு அவகாசம் இல்லாமல் போயிருக்கலாம்.

``சோயுஸ் பல மில்லியன் துண்டுகளாக வெடித்துச் சிதறும்போது மிஷா, கென்னடி மற்றும் நானும் ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டே இருந்திருப்போம்'' என்று Endurance என்ற தனது நினைவுப் புத்தகத்தில் ஸ்காட் எழுதியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில், பூமியில் உள்ளதைப் போன்ற வாழ்க்கைச் சூழல்கள் இடம் பெற்றுள்ளன. வீடியோ கால்கள், வேலை சூழல், சுத்தம் செய்தல் போன்றவை இருக்கும். ஆனால், விண்வெளி நிலையத்தின் கடினமான சுவர்களுக்கு வெளியில், ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் இருப்பது பற்றி அவ்வப்போது விண்வெளி வீரர்கள் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும்.

2007 ஆம் ஆண்டில் இருந்து 3 முறை கெல்லி அந்த விண்வெளி நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். ஆனால் கடைசியாக 2015 மற்றும் 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் சென்றபோது தான் உலகளாவிய கவனத்தைப் பெற முடிந்தது.

மிஷா கோர்னியென்கோவுடன் இணைந்து விண்வெளி நிலையத்தில் ஓராண்டு காலம் தங்கியிருக்க வேண்டும் என அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. வழக்கமான தங்கியிருப்புக்கான காலத்தைவிட இரு மடங்கு அதிகமானதாக அது இருந்தது. அவ்வாறு செய்வதன் மூலம், அமெரிக்க விண்வெளி வீரர் அதிக காலம் தங்கியிருந்த முந்தைய சாதனையை கெல்லி முறியடிக்க முடியும். அதற்கு முன்னர் அமெரிக்க விண்வெளி வீரர் லோபஸ் அலெக்ரியா நூறு நாட்களுக்கும் மேலாக விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தார்.

கெல்லியின் இரட்டை சகோதரரான மார்க் கூட நாசா விண்வெளி வீரராகத்தான் இருக்கிறார். ஆறு நிமிடங்கள் மூத்தவரான அவர், 2020 அமெரிக்க தேர்தலில் அரிசோனா மாகாணத்தில் செனட்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்காட் மற்றும் அவரின் சகோதரர்

பட மூலாதாரம், NASA

கொலரோடாவில் இருந்து வீடியோ கால் மூலம் என்னுடன் பேசிய ஸ்காட், முன்கூட்டியே வீட்டுக்குத் திரும்புவது பற்றி எந்தத் தருணத்திலும் தாம் நினைத்துப் பார்த்தது கிடையாது என்று தெரிவித்தார். ``தெரிவிக்கப்பட்ட காலத்தை முழுமையாக முடிக்க வேண்டும், தொடக்கத்தில் இருந்த அதே உற்சாகம், ஆர்வத்துடன் கடைசி நாள் வரை இருக்க வேண்டும் என்பது தான் எனது இலக்காக இருந்தது. அனேகமாக அதைச் செய்துவிட்டதாக நினைக்கிறேன்'' என்று அவர் கூறினார்.

``நல்ல ஒரு காரணம் இருந்திருந்தால், கூடுதல் காலம் நான் அங்கே தங்கியிருந்திருக்க முடியும். எனவே, என்னால் அங்கே தங்கி இருக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்குள் ஒருபோதும் ஏற்படவே இல்லை'' என்றார் அவர்.

சூழ்நிலைகளைத் தாக்குபிடிப்பார்களா என்பது குறித்து விண்வெளி வீரர்களுக்கு உளவியல் பரிசோதனைகள் நடத்தப்படும் என்றாலும், ``பலருக்கு அதில் பிரச்சினைகள் இருக்கும். நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அதுபோன்ற தனிமையில் இருப்பது சிலருக்கு சவாலானதாக இருக்கும். ஆனால் உங்களால் முடியாமல் போகும் என்று சொல்லும் அளவுக்கு கஷ்டமானதாக இருக்காது'' என்று அவர் தெரிவித்தார்.

``அது கட்டாயமாக உள்மன ஆய்வு அல்லது வெளிமன ஆய்வாக இருக்க வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உங்களுக்குப் பிடித்தமானதைச் செய்வதில் சௌகரியமாக உணர வேண்டும்'' என்றார் அவர். ``எல்லோருக்கும் அது அப்படி அமையாது'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளியே சென்று இயற்கையை ரசிக்க முடியாது என்பது மிகக் கடினமான விஷயம். விண்வெளி நிலையத்தில் ஆற்ற வேண்டிய தினசரி பணிகளும் தவிர்க்க முடியாதவை. ஓரளவுக்கு, சிறிய இட வசதியை அதே நபர்களுடன் மிக நீண்ட காலத்துக்குப் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதும் கூட மற்றொரு சவால் என்கிறார் அவர். ``அனைவருமே பெரிய திறமையாளர்கள் என்றாலும், இடத்தைப் பகிர்ந்து கொள்வது சிரமமானது'' என்று குறிப்பிடுகிறார்.

வெற்றிகரமாக அந்த சவாலை எதிர்கொண்டார்கள். நெருக்கமாக குறுகிய இடத்தில் இருந்ததால், நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கும் நட்பு உருவாகியுள்ளது. ``(நாசாவின்) கியெல் லிங்ன்டிகிரேன் உடன் நான் இமெயில் தொடர்புகள் வைத்திருக்கிறேன். என் மனைவியும், நானும் அன்றொரு நாள் (இத்தாலிய ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர்) சமந்தா கிரிஸ்ட்டோ போரெட்டி உடன் வீடியோ காலில் பேசினோம். மிஷா கோர்னியென்கோ, கென்னடி படல்க்கா ஆகியோருடன் நான் பேசுகிறேன்'' என்று அவர் விவரித்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேலும் 4 ஆண்டுகளுக்கு நிதி அளிக்க அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. ஆனால், அதன் பிறகு சுற்றுப் பாதையில் அந்த விண்கலன் சுற்றிக் கொண்டிருக்குமா என்பதில் நிச்சயமற்ற நிலை இருக்கிறது. அந்த விண்வெளி நிலையம் 1990களில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் அரசியல் வேறுபாடுகள் இருந்த காலக்கட்டம் அது'' என்று அவர் விளக்கினார்.

``அமைதி வழி சர்வதேச ஒத்துழைப்புக்கான மிகப் பெரிய உதாரணமாக இந்த விண்வெளி நிலையத் திட்டம் உள்ளது'' என்று என்னிடம் அவர் கூறினார். ``விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பரஸ்பரம் மரியாதை, நம்பிக்கையுடன் தொழில்முறை அணுகுமுறையில் செயல்பட்டனர்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்காட்

பட மூலாதாரம், NASA

விண்வெளி சுற்றுப்பாதையில் அந்த ஓராண்டு காலம் முழுவதும் கெல்லி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கவில்லை. கேளிக்கை மற்றும் விளையாட்டுகளுக்கு அவருக்கு நேரம் இருந்தது. கொரில்லா போல உடை அணிந்து கொண்டு, விண்வெளி நிலையத்தில் பிரிட்டிஷ் விண்வெளி வீரர் டிம் பீக் என்பவரை விரட்டிச் செல்லும் வீடியோ வைரலாக பகிரப்பட்டது. பீக் அப்போது நல்ல நடிப்பை வெளிக்காட்டி விளையாடினார்.

வெற்றிட இடைவெளியால் நிரப்பப்பட்ட அந்த சூட், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்டது. பிறந்த நாள் பரிசாக மார்க் அதை அனுப்பி இருந்தார். சகோதரர்களுக்கு இடையில் ஜோக் மாதிரியான விஷயமாக அது இருக்கிறதா என ஸ்காட்டிடம் நான் கேட்டேன்.

``என் சகோதரர் கூறியது: `ஏய் உனக்கு நான் கொரில்லா சூட் அனுப்புகிறேன்' என்றார். நான் கூறினேன்: ``எனக்கு எதற்கு கொரில்லா சூட் அனுப்புகிறாய்' என்றேன். ``ஏன் அனுப்பக் கூடாது'' என சிரித்துக் கொண்டே அவர் பதில் அளித்தார். ``அந்த எண்ணத்துடன் அதை நான் அணிந்து கொண்டேன்'' என்று கெல்லி தெரிவித்தார்.

ஸ்காட் மிகெய்ல்

பட மூலாதாரம், NASA

அவர்களது பெற்றோர் இருவரும் காவல் துறையில் பணிபுரிந்தவர்கள். இருவரும் நியூஜெர்சியின் புறநகரில் வளர்ந்தவர்கள். மேற்கு ஆரஞ்சு நகரில் முதலாவது பெண் காவல் அதிகாரியாக அவர்களின் தாயார் இருந்தார். தனது தொழிலில் தாயார் காட்டிய உறுதியான செயல்பாடு தான், பிற்காலத்தில் விண்வெளி வீரர் ஆக வேண்டும் என்ற உந்துதலை தனக்குத் தந்ததாக ஸ்காட் கூறினார்.

சிறுவயதில் மார்க், ஸ்காட் ஆகிய இருவருமே ஒரே மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டிருந்தனர். ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபட்டு அடிக்கடி காயப்படுத்திக் கொள்வார்கள். சில நேரம் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பள்ளிப்படிப்பில் மார்க் நல்ல மதிப்பெண்கள் பெற்றார். ஸ்காட்டுக்கு படிப்பில் பெரிய ஆர்வம் ஏற்படவில்லை.

கல்லூரியில் நண்பர்களுடன் பார்ட்டிகளில் பங்கேற்பது ஸ்காட்டுக்கு பிடித்தமானதாக இருந்தது. குழுவாக சேர்ந்து திரிவதைக் கைவிட்டு, கல்வியில் கவனம் செலுத்துமாறு தொலைபேசியில் மார்க் கூறியதை ஸ்காட் நினைவுகூர்கிறார்.

கடற்படை விமான பைலட் பயிற்சி முடித்த பிறகு உலகின் புகழ்பெற்ற Pukin' Dogs என்ற ஸ்குவாட்ரனை தாக்கும் பணி அளிக்கப்பட்டது. 1990-களில் உயர் ரக ஆயுதம் ஏந்திய எப்-14 ரக டாம்கேட் விமானத்தை அவர் ஓட்டிச் சென்றார். முதலாவது வளைகுடா போரின்போது தாக்குதல் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இருந்தாலும், இன்னும் மதிப்புக்குரிய குழுவில் இடம் பெற வேண்டும் என்பதில் கெல்லி ஆர்வம் காட்டினார். அதாவது விண்வெளி நிலையத்துக்குப் பயணம் செல்லும் குழுவில் இடம் பெற விரும்பினார். நாசாவில் 1996ம் ஆண்டின் அணிக்கு மார்க் உடன் சேர்ந்து தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு விண்வெளி பயணத்தில் பைலட்டாக இருந்தார். 2007-ல் இன்னொரு பயணத்துக்கு கமாண்டிங் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார்.

விண்வெளிப் பயணத்தில், கமாண்டர்தான் வாகனத்தைச் செலுத்த வேண்டும். கலனை தரையிறக்குவது சிக்கல் நிறைந்த நுட்பமான வேலையாக இருக்கும், அந்தத் திறமை தானாக அமைய வேண்டும்.

``ஒரு முறை மட்டுமே நான் அதை இயக்கி இருக்கிறேன். இதற்கு பைலட்டாக இருப்பதற்கு எவ்வளவு நேரத்தையும், முயற்சிகளையும் செலவிட வேண்டும் என்று பார்த்தால் அது மிகவும் வியப்புக்குரியதாக, சிக்கலானதாக இருக்கும். பிறகு ஓரிரு முறை என அதைத் தொடரலாம்'' என்றார் கெல்லி.

``விண்கலனை தரையிறக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் சரியாகச் செய்யாமல் போனால், திறமையை அதிகரித்துக்கொண்டு மறுபடி வரலாம் என்பதற்கு இடம் கிடையாது. உங்களுடன் இருக்கும் சகாக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமே உங்களை கவனித்துக் கொண்டிருக்கும்'' என்றும் அவர் கூறினார்.

விண்கலன் மிகப் பெரியது. 2003ல் பூமிக்குத் திரும்பி வரும் நிலையில் கொலம்பியா விண்கலன் வெடித்துச் சிதறி ஏழு விண்வெளி வீரர்கள் மரணம் அடைந்தபோது, விண்வெளிப் பயணத்தில் உள்ள மிகப் பெரிய ஆபத்துகள் பற்றி உலகம் அறிந்து கொண்டது.

சேலஞ்சர் மற்றும் கொலம்பியா பேரழிவுகளுக்குப் பிறகு, நாசாவின் பாதுகாப்பு கலாச்சாரம் குறித்து புலனாய்வாளர்கள் விமர்சனங்கள் செய்தனர். கொலம்பியா சம்பவத்தில் தன் நண்பர்களை கெல்லி இழந்தார். நான் அவரிடம் பேட்டி எடுத்தபோது, பாதுகாப்பு கலாச்சார உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்ற கெல்லி தயாராகிக் கொண்டிருந்தார். அதில் தாக்குதலுக்கு ஆளான அமெரிக்க விமானப்படை விமானத்தை ஹட்சன் ஆற்றில் தரையிறக்கிய ``சல்லி'' சல்லென்பெர்க்கர், சுற்றுச்சூழலியலாளர் எரின் புரோக்கோவிக் ஆகியோரும் உரையாற்றினர்.

``எங்கள் செயல்பாடுகள் அசாதாரணமான ஆபத்துகள் நிறைந்தவை'' என்று அவர் என்னிடம் கூறினார். ``எல்லோருடைய பொறுப்பும் கொண்டதாக பாதுகாப்பு அம்சம் உள்ளது. ஏதாவது குறைபாடுகள் தெரிந்தால், அதை வெளிப்படுத்த எல்லோருக்கும் அதிகாரம் உள்ளது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்'' என்றார் அவர்.

ஒரே மாதிரியான இரட்டையர்களை ஓராண்டு காலத்திற்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவது என்று தான் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், விண்வெளி நிலையத்தில் கூடுதல் காலம் தங்கியிருக்கும் போது மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்யும் தனித்துவமான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என சில விஞ்ஞானிகள் கருதினர்.

விண்வெளி

பட மூலாதாரம், SCOTT KELLY / NASA

பூமியில் இருக்கும் மார்க் மரபணு ரீதியில் ஒரே மாதிரியான ``கட்டுப்பாடாக'' இருக்கும் நிலையில், விண்வெளி சூழல் ஸ்காட் உடலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் பெரிதும் நம்பினர். இரு சகோதரர்களுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை, உளவியல் மாறுபாடு, சிந்தனைத் திறன்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறித்து பல வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டன.

விண்வெளி கதிர்வீச்சு மூலமாக ஸ்காட்டின் டி.என்.ஏ. தன்னைத் தானே சரி செய்து கொள்ளக்கூடிய தன்மையைப் பெற்றிருக்கிறது என்ற மரபணு மாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் இதில் கண்டறியப்பட்டன.

ஸ்காட்டின் குரோமசோம்களின் உச்சியில் ``தொப்பி'' போல உள்ள பகுதிகள் மாறுபட்டிருந்தன. ரத்தத்தின் ரசாயனத் தன்மை, உடலின் நிறை, குடல் அமைப்புகளில் மாற்றங்கள் கண்டறியப்பட்டன. ஆனால் அவர் பூமிக்கு வந்ததும், இவற்றில் பெரும்பாலான அம்சங்கள் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டன.

நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன. ``விண்வெளியில் இருந்த காலத்தில் ஏற்பட்ட மாற்றம் என எதையும் நான் குறிப்பிட்டுச் சொல்லும் நிலை இப்போது இல்லை. ஆனால் என் கண்களின் அமைப்பு மற்றும் இயற்கை அமைப்பகளில் மாறுபாடுகள் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றால் என் பார்வை பாதிக்கப்படவில்லை'' என்று கெல்லி கூறினார்.

விண்வெளியில் இருக்கும்போது சிலருக்கு கண்களில் மாற்றம் ஏற்படும் என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். இந்த மாறுபாடுகளுக்கான மரபணு காரணங்களைக் கண்டறியும் பணிகள் நடந்து வருகின்றன. விண்வெளி சூழலுக்கு மற்றவர்கள் எப்படி வித்தியாசமாக எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, விண்வெளி வீரர் தேர்வில் உயிரியல் ரீதியிலான அம்சங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவமாக இருந்தன, வழக்கமான தகுதிகளைவிட கூடுதலாக எவை தேவைப்பட்டன என்று அவரிடம் நான் கேட்டேன்.

``அது நாசாவின் பிரச்சினை. பொதுவாக எங்கள் துறையினரின் பிரச்சினை. காப்பீடு மற்றும் ஏற்கெனவே உள்ள உடல் ஆரோக்கியம் என ஆழமான விஷயங்கள் உள்ளன. மரபணு ரீதியில் எளிதில் மாற்றத்துக்கு ஆளாகும் நிலை இருப்பது, முந்தைய குறைபாடு சூழலாக அமையுமா என்பதும் அதில் அடங்கும். நிச்சயமாக அதுபற்றி கலந்தாடல் செய்வது நெறிசார்ந்த விஷயமாக இருக்கும்'' என்று அவர் கூறினார்.

இரட்டை சகோதரர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட விஷங்கள், செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் சென்று வருவதற்கான முயற்சியில் முக்கிய தகவல்களாக இருக்கும். 34 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள செவ்வாய் கிரகத்துக்கு செல்வதற்கு 9 மாதங்களும், திரும்பி வருவதற்கு 9 மாதங்களும் ஆகும். ஆனால் பூமியின் சுற்றுப் பாதையில் ஏற்படக் கூடியதைப் போல 10 மடங்கு அளவிற்கு கதிர்வீச்சு தாக்குதலுக்கு விண்வெளி வீரர்கள் ஆட்படுத்தப் படுவார்கள். நீண்டகால புற்றுநோய்கள் மற்றும் இதர நோய்களுக்கான ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

``நீங்கள் தற்காப்பைப் பெற வேண்டும் அல்லது செவ்வாய் கிரகத்துக்கு சீக்கிரம் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று கெல்லி கூறுகிறார்.

கெல்லி கூட மிக கவனமாக பரிசீலித்திருப்பார். நாசாவில் இருந்து 2016-ல் அவர் ஓய்வு பெற்றார். அப்போதிருந்து தனது அனுபவங்கள் பற்றி பேசியும், எழுதியும் வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாசாவின் ஹூஸ்டன் மையத்தில் இருந்து மனைவியுடன் டென்வெருக்கு கெல்லி சென்றுவிட்டார்.

அவர் சென்ற நான்கு ஆண்டுகளில் விண்வெளிக்குப் பயணம் செல்ல அவருக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அவரைப் போன்ற நுட்பங்களை அறிந்தவர்களுக்கு அதிக தேவை எழுந்துள்ளது. கெல்லி முறியடித்த சாதனைக்கு உரிய மைக்கேல் லோபஸ் அலெக்ரியா, தனியார் துறையின் விண்வெளிப்பயணத்தில் இடம் பெறவுள்ளார். ஈலான் மஸ்க்கின் க்ரூ ட்ராகன் வாகனத்தில் அவர் செல்லவிருக்கிறார்.

நிறைய சாதனைகள் செய்துவிட்டாலும், விண்கலன் பயணம் குறித்த கெல்லியின் விருப்பங்கள் குறையாமல் இருக்கின்றன. ``யாராவது என்னை அணுகி, `ஹே, விண்வெளிக்குப் பயணிக்க விரும்புகிறாயா' என்று கேட்டால், `நிச்சயமாக, உறுதியாக' என்று நான் பதில் அளிப்பேன். நான் எந்த வாகனத்தில் செல்வேன் என்பதைப் பொருத்து, பீரங்கியின் குழாயில் பொருத்தி செலுத்தப்படும் குண்டினை போல நான் பயணிப்பேன்'' என்று கெல்லி தெரிவித்தார்.

``அது பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதை நான் மறுக்கவில்லை.''

``பைலட் தேவைப்படும் ராக்கெட் நிறுவனத்தினர் யாரையாவது உங்களுக்குத் தெரியுமானால்...........'' என்று கெல்லி முடித்துக் கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :