அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பாட திட்டம் தாமதமானதாக குற்றச்சாட்டு - உண்மை என்ன?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

மருத்துவ படிப்பிற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவு தேர்வுக்கு தயார் செய்வதற்கான பாடத் திட்டம், கல்வி ஆண்டின் தொடக்கத்தில் கிடைப்பதில்லை என்பதால், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவதில் சிரமங்கள் இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில், தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணிகளில் போதிய அக்கறை காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தயாராவதற்கான மாநில அரசின் பாட திட்டம் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

பிபிசி தமிழிடம் பேசிய அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், ''மாநில அரசின் ஆங்கில வழி பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பாடத்திட்டம் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள், ஒரு தனியார் நிறுவனம் வெளியிடும் புத்தகத்தை நம்பியே தேர்வு எழுதவேண்டியுள்ளது அல்லது காலாண்டு அல்லது அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர், மாணவர்களின் மதிப்பெண்ணை கொண்டுதான் அவர்களில் யாருக்கு பயிற்சி பாடத்திட்டத்தை கொடுக்கலாம் என முடிவு செய்து தரப்படுகிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் காலம் மிகவும் குறைவு,''என்கிறார்.

''ஆன்லைன் பயிற்சி நடத்துவதாக அரசாங்கம் கூறியது. ஆனால் 2020ஆம் ஆண்டுக்கான தேர்வு தாமதமானது. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தர தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே காலாவதியானது. அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து எந்த முடிவும் வெளியிடவில்லை. இதனால் மாணவர்களுக்கு இறுதி நாட்களில் பயிற்சி கிடைக்கவில்லை. ஏற்கனவே இருந்த பயிற்சி தாள்களை வைத்து, மாதிரி தேர்வுகள் நடத்தினோம்,'' என்கிறார் மற்றொரு ஆசிரியர்.

தனியார் பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களிடமும் பிபிசி பேசியது.

தமிழக அரசின் ஆங்கில வழி கல்வியில் பயின்ற கோவை மாவட்டம் காரமடை மாணவி பிஸ்டிஸ் ப்ரிஸ்டாவிடம் நீட் தேர்வை எதிர்கொண்டது குறித்து கேட்டபோது, ''கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் ஆசிரியர்களை சந்தித்து சந்தேகங்களை கேட்கமுடியவில்லை. ஆனால், குறைந்தபட்சம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எங்களுக்கு பாடத்திட்டத்தை விளக்கியிருந்தால், தேர்வுக்கு தயாராகுவதற்கு உதவியாக இருந்திருக்கும். தனியார் பயிற்சி மையத்தில் தரப்படும் பாடத்திட்டங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களுக்கு அளிக்கப்பட்ட ஆன்லைன் பயிற்சியில் மூன்று வகுப்புகள் மட்டுமே என்னால் கவனிக்க முடிந்தது. இணைய தொடர்பு மோசமாக இருந்ததால், எல்லா வகுப்புகளையும் கவனிக்க முடியவில்லை,''என்றார் அவர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

நீட் தேர்வை அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதுவதற்கு ஊக்கம் குறைவாக இருப்பதாக கூறுகிறார் மாணவர் சந்தோஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெறவில்லை என்பதால், மருத்துவ படிப்பு கனவை விடுத்தது பிற பட்டப்படிப்பை தேர்வுசெய்ய முடிவு செய்துள்ளார் சந்தோஷ்.

''நீட் தேர்வு பாடத்திட்டங்களை எங்களுக்கு டிசம்பர் மாதம்தான் கொடுக்கிறார்கள். தனியார் பயிற்சி மையத்தில் படிப்பவர்கள் ஒரு ஆண்டு முழுவதும் தேர்வுக்கு தயாராகிறார்கள். நாங்கள் 12ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகுவதற்கான காலத்தில் நீட் பாடத்திட்டம் கொடுக்கிறார்கள் என்பதால் சிரமத்தை சந்திக்கிறோம். அரசு பள்ளி மாணவர்களை பொறுத்தவரை, 12ம் வகுப்பு படிக்கும்போது தரப்படும் நீட் புத்தகங்கள் தேர்வு முடிந்தவுடன் பள்ளியில் ஒப்படைத்துவிடவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதாவது முதல் முயற்சியில் ஒரு மாணவர் தேர்வு பெறவில்லை என்றால், அந்த மாணவனுக்கு அடுத்த ஆண்டு படிப்பதற்கு புத்தகம் தரப்படாது. பள்ளி தேர்வை முடித்துவிட்ட மாணவன்,தனி தேர்வராக கருதப்படுவதால், புத்தகங்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர் என்பதால் சிலர் இந்த தேர்வை புறக்கணிக்கிறார்கள்,''என்கிறார் சந்தோஷ்.

நீட் பாடத்திட்டம் தாமதமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலாளரை தொடர்பு கொண்டு பேச பிபிசி தொடர்ச்சியாக முயன்றபோதும் அவர்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: