சூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர் நீதிமன்ற நீதிபதி

சூர்யா

பட மூலாதாரம், SURIYA SIVAKUMAR / FB

முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.

தி இந்து (ஆங்கிலம்): நீட் குறித்து அறிக்கை - சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி வலியுறுத்தல்

நீட் தேர்வு குறித்த அறிக்கையில் நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழின் இணையப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து வேதனை தெரிவித்து நடிகர் சூர்யா நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் " நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதுல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் நேர்மை மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதி அமைப்பை குறைமதிப்புக்குட்படுத்தியும், தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

தினத்தந்தி: "இன்று கூடுகிறது நாடாளுமன்றம்: 47 மசோதாக்கள் விவாதிக்க திட்டம்"

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், 47 மசோதாக்கள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் (செப்டம்பர் 14) முதல் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த முறை பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை, சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அனைத்து வழிகாட்டுதல்களும் அமர்வின் போது கண்டிப்பாக பின்பற்றப்படும், கொரோனா தொற்றுநோயை மனதில் கொண்டு, காகித பயன்பாட்டைக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை சீராக இயக்க எல்.இ.டி திரை நிறுவப்படும். முழு நாடாளுமன்ற வளாகமும் தொடர்ந்து சுத்திகரிக்கப்படும். பூஜ்ஜிய நேரங்களின் காலமும் அரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது, கேள்வி நேரம் இருக்காது. இருப்பினும் எழுதப்பட்ட கேள்விகளைக் கேட்கலாம், அவற்றுக்கு பதில் அளிக்கப்படும்

மேலும், தொற்று நோய் திருத்த மசோதா உள்பட 11 முன்வரைவுகள் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்பு"

இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுக்க எவ்வாறு விநியோகம் செய்யப்படும்?

பட மூலாதாரம், Getty Images

இதுதொடர்பாக சமூக ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது:

"இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்துவதற்கு மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பு மருந்தின் பாதுகாப்புத்தன்மை, விலை, குளிர்பதன வசதிகளுக்கான தேவை, உற்பத்திக்கான காலவரம்பு ஆகியவை குறித்தும் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் பல்வேறு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், எந்த தடுப்பு மருந்து நல்ல பலன் தரும் என்பதை தற்போது ஊகிக்க முடியாது. தடுப்பூசியின் திறனை பரிசோதித்துப் பார்ப்பதற்காக எனது உடலில் அதனை செலுத்திக்கொள்ள வேண்டுமானால், முதல் நபராக அதை மகிழ்ச்சியோடு செய்வேன்" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: