சீனா - இந்தியா மோதல்: நேரு செய்த அதே தவறை நரேந்திர மோதியும் செய்கிறாரா?

பட மூலாதாரம், PIB
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி
1949 ஆம் ஆண்டில், மாவ் ஸே துங், சீன மக்கள் குடியரசை உருவாக்கினார். 1950 ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா அதை அங்கீகரித்து அரசியல் உறவுகளை ஏற்படுத்தியது.
இந்த வழியில் சீனா மீது கவனம் செலுத்திய முதல் கம்யூனிஸ்ட் அல்லாத நாடாக இந்தியா ஆனது. 1954 ஆம் ஆண்டில், திபெத்தின் மீதான சீன இறையாண்மையையும், இந்தியா ஏற்றுக்கொண்டது. அதாவது திபெத் சீனாவின் ஒரு பகுதி என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டது.
'இந்தியர் - சீனர், சகோதரர்-சகோதரர்' ( இந்தி-சீனி பாய் பாய்) என்ற முழக்கமும் எழுப்பப்பட்டது.
1954 ஜூன் மற்றும் 1957 ஜனவரிக்கு இடையில், சீனாவின் முதல் பிரதமரான செள என் லாய் நான்கு முறை இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். 1954 அக்டோபரில் நேருவும் சீனா சென்றார்.
'சீன மக்கள் குடியரசாக மாறிய பின்னர் கம்யூனிஸ்ட் அல்லாத நாட்டின் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது' என்று. நேருவின் சீனப்பயணம் குறித்து அமெரிக்க செய்தித்தாள் 'நியூயார்க் டைம்ஸ்' எழுதியது.
"விமான நிலையத்திலிருந்து நகரத்திற்கு செல்லும் சுமார் 10 கிலோமீட்டர் நீள சாலை நெடுகிலும் நின்றுகொண்டிருந்த சீன மக்கள் கைதட்டி நேருவை வரவேற்றனர் ’ என்றும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, நேரு பிரதம மந்திரியை மட்டுமல்ல, சீன மக்கள் குடியரசின் தலைவரான மாவோவையும் சந்தித்தார்.
மறுபுறம், திபெத்தின் நிலை தொடர்ந்து மோசமடைந்து, சீனாவின் படையெடுப்பு அதிகரித்து வந்தது.
1950 ஆம் ஆண்டில், சீனா திபெத்தை தாக்கத் தொடங்கி அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. திபெத் மீதான சீனத் தாக்குதல் முழு பிராந்தியத்தின், நிலவியல் சார்ந்த அரசியலையும் (ஜியோ பாலிடிக்ஸ்) மாற்றியது.
சீன தாக்குதலுக்கு முன்னால் திபெத், சீனாவை காட்டிலும் இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தது. இறுதியாக திபெத் ஒரு சுதந்திர நாடு என்ற அந்தஸ்தை இழந்தது.
"நேரு அரசில் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல், திபெத்தில் இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட சில தலைவர்களில் ஒருவர்," என்று ஸ்வீடன் பத்திரிகையாளர் பெர்டில் லிண்ட்னர் தனது 'சைனா இந்தியா வார் ' என்ற புத்தகத்தில் எழுதினார். 1950 டிசம்பரில் தான் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு படேல் நேருவுக்கு ஒரு கடிதம் கூட எழுதியிருந்தார்.
கொள்கைவாதி நேரு

பட மூலாதாரம், BETTMANN
"திபெத் சீனாவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அது நமது நாட்டின் வாயிற்கதவை எட்டிவிட்டது. அதன் விளைவை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்றில் வடகிழக்கு எல்லையைப் பற்றி நாம் அரிதாகவே கவலைப்படுகிறோம். வடக்கில் எல்லா ஆபத்துகளுக்கும் முன்னால் இமயமலை நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக நின்று கொண்டிருக்கிறது. திபெத் நமது அண்டை நாடாக இருந்தது, அப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. முன்பு சீனர்கள் பிளவுபட்டிருந்தனர், அவர்களுக்கு சொந்த உள்நாட்டு பிரச்சினைகள் இருந்தன, அவர்கள் ஒருபோதும் நம்மை தொந்தரவு செய்யவில்லை, ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது ,”என்று படேல் எழுதினார்.
"கொள்கைவாதி நேரு, கம்யூனிச ஆட்சியின் கீழான புதிய சீனாவைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே நட்புதான் ஒரே சிறந்த வழி என்று அவர் நினைத்தார். இந்தியாவும் சீனாவும் அடக்குமுறைக்கு எதிராக போராடி வெற்றி பெற்றன என்றும் ஆசியா- ஆப்பிரிக்காவில் புதிதாக சுதந்திரம் அடைந்த நாடுகளுடன், இந்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நேரு விரும்பினார்,” என்று இந்த புத்தகத்தில் பெர்டில் லிண்ட்னர் குறிப்பிட்டுள்ளார்.
1950 களின் நடுவே இந்தியப் பகுதிகளில் சீனா ஊடுருவலை ஆரம்பித்தது. 1957 ஆம் ஆண்டில், சீனா, அக்சாய் சின் வழியாக, மேற்கே 179 கி.மீ சாலை அமைத்தது.
எல்லையில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையிலான முதல் மோதல், 1959 ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஏற்பட்டது. சீன ரோந்து படை, நெஃபா( வடகிழக்கு ஃப்ராண்டியர் ஏஜென்சி) எல்லையில், லாங்ஜுவை தாக்கியது. அந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, லடாக்கின் கொங்காவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 17 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று சீனா விவரித்தது.
ஆனால் இந்தியா 'தனது வீரர்கள் திடீரென தாக்கப்பட்டனர்' என்று கூறியது.
1938 நவம்பரில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் மாவோ பேசியபோது, "துப்பாக்கியின் குழாயிலிருந்து ஆட்சி அதிகாரம் வெளிப்படுகிறது" என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து இந்த முழக்கம், சீன கம்யூனிஸ்ட் புரட்சியின் அடிப்படை மந்திரமாக மாறியது. இது கார்ல் மார்க்சின் முழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது . 'உலகத் தொழிலாளர்கள் ஒன்றாக இருக்க வேண்டும்' என்பதே அவருடைய முழக்கமாக இருந்தது.
’சீனாவின் நோக்கங்களை புரிந்துகொள்ள முடியாத நேரு’

பட மூலாதாரம், KEYSTONE-FRANCE
1962 ல் சீனா இந்தியாவைத் தாக்கியபோது, அது இமயமலையின் எந்தப் பகுதியையும் கட்டுப்படுத்தவோ, எல்லையை மாற்றவோ நடந்த போர் அல்ல, அது ஒரு கலாசாரப்போர் என்று சிலர் கருதினர்.
தென்கிழக்கு ஆசியாவைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்ட இஸ்ரேலிய நிபுணரான யாகோவ் வர்ட்ஃஜபர்ஜர் தனது 'சைனா சவுத்வெஸ்டர்ன் ஸ்டாடெர்ஜி’ என்ற புத்தகத்தில் "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாசார மற்றும் வரலாற்று வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள நேரு தவறிவிட்டார்" என்று எழுதினார்.
சீனாவின் நோக்கத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியா மற்றும் சீனாவின் எல்லைகளை முழு உலகமும் சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டதாக நேரு நினைத்தார். இந்தியா சட்டப்பூர்வமாக சரியானது என்பதால் ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் அது முன்வைத்தால், சீனா கடைசியாக அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று அவர் கருதினார். ஆனால் சீனா ஒருபோதும் சர்வதேச சட்டங்களை மதிக்கவில்லை.
"இந்தியாவும் சீனாவும் தங்கள் சுதந்திரத்தை வேறு வேறு விதமாக அடைந்தன என்ற அடிப்படை வேறுபாட்டைக் கூட நேரு புரிந்து கொள்ளவில்லை" என்று யாகோவ் வர்ட்ஃஜபர்ஜர் எழுதினார்.
இந்தியா ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்திய சுதந்திரப் போராட்டமும், சீனா , ஜப்பானிய காலனிகளுக்கும் உள்நாட்டு சக்திகளுக்கும் எதிராக நடத்திய போராட்டமும் வேறுபட்டவை. இந்தியா சுதந்திரப் போரை பெருமளவில் ஒத்துழையாமை மூலம் வென்றது மற்றும் வன்முறை தீயதாக கருதப்பட்டது.
மறுபுறம், மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை முற்றிலும் வேறுபட்டது.
நேருவின் திட்டமிடல், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான தொடர்பைக் கொண்டிருந்ததால் அவர், பிரிட்டிஷ் புவிசார்மயமாக்கல் கருத்தை ஏற்றுக்கொண்டார். மறுபுறம், மாவோவின் ராஜதந்திரம், கடந்த காலத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
1949 ல் கம்யூனிஸ்டுகளின் வெற்றிக்கு முன்னர் மாவோ, சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தையும் ஒரு தரப்பானது என்று குற்றம் சாட்டி நிராகரித்துவிட்டார் .
வரலாற்று அடிப்படையில் சீனாவுடனான எல்லையை நியாயப்படுத்த இந்தியா முயன்று வந்தது. அதே நேரம் சீனா போருக்கு தயாராகி வந்தது. மக்மோஹன் கோடு காலனித்துவமானது என்று கூறி அதை ஏற்க மாவோ மறுத்துவிட்டார். சீனா, முழு அருணாச்சல் பிரதேசம் மீதும் உரிமை கோரத் தொடங்கியது.
'பிரதமர் மோதி எந்தப் பாடமும் கற்கவில்லை'

பட மூலாதாரம், Getty Images
பெர்டில் லிண்ட்னர் தனது புத்தகத்தில் "சீன கம்யூனிஸ்டுகள் நேருவை முதலாளித்துவ தேசியவாத தலைவராக கருதினர்" என்று எழுதினார்.
நேருவை ஒரு இடைநிலை சோசலிச தலைவராகக்கூட அவர்கள் கருதவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நேரு மீதான ஆரம்ப தாக்குதல் , 1949 அக்டோபர் 1 ஆம் தேதி சீன மக்கள் குடியரசு அறிவிப்பிற்கு முன்பே தொடங்கிவிட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சாரக் குழு இதழான ,ஷிஜி ஜிஷி (உலக அறிவு) 1949 ஆகஸ்ட் 19 இதழில், நேருவை ஏகாதிபத்தியவாதிகளின் உதவியாளர் என்று அழைத்தது. இந்தியர் சீனர் சகோதரர்-சகோதரர் என்ற முழக்கத்தின் பின்னால் என்ன நடக்கிறது என்று கூட நேருவுக்குத் தெரியவில்லை.
சிஐஏ அறிக்கையின்படி, மியான்மரின் முன்னாள் பிரதமர் பா ஸ்வே, 1958இல் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
"1962 மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் நேரு செய்த தவறுகளிலிருந்து பிரதமர் மோதி எந்தப் படிப்பினையும் பெறவில்லை" என்று பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடி கூறுகிறார்.
"லடாக்கில் சீனா ஏதோ நிறைய செய்து வருகிறது, செய்யப் போகிறது என்று மோதி அரசிடம் உளவுத்துறை தகவல் இருந்தது. ஆனால் அது கைகட்டி அமர்ந்திருந்தது. இந்த கேள்வி மிக முக்கியமானது. சீன வீரர்கள் நமது பகுதிக்குள் எப்படி நுழைந்தார்கள்? மோதி பிரதமரானவுடன், அவர் சீனாவை மிகச் சிறந்த மற்றும் நம்பகமான நண்பர் என்று கூறினார். பிரதமரான பின்னர் மோதி, சீன அதிபர் ஷி-ஜின்பிங்கை 18 முறை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகள் எதைக் குறிக்கின்றன? '' என்று பேடி கேட்கிறார்.
”2017 ஜூன் 2 ஆம் தேதி, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மன்றத்தின் குழு விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோதி, "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே எல்லை தாவாக்கள் உள்ளன, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில், கடந்த 40 ஆண்டுகளில் ஒரு துப்பாக்கி தோட்டா கூட சுடப்படவில்லை” என்று கூறினார். பிரதமர் மோதியின் இந்த அறிக்கையை சீனா வரவேற்று அதை ஏற்றுக்கொண்டது. மோதி அப்படிச் சொல்லி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன, இப்போது அவர் அதை மீண்டும் சொல்லும் நிலையில் இருக்க மாட்டார், " என்கிறார் அவர்.
'இந்தியாவின்எல்லாஅரசுகளும்செய்யும்நேருவின்அதேதவறு'
'இது இந்தியத் தலைவர்களிடையே தொலைநோக்குப்பார்வை குறைபாட்டைக் காட்டுகிறது' என்று ராகுல் பேடி கூறுகிறார்.
"இந்தியாவைப் போல சீனா, ஐந்து ஆண்டுகளில் வரும் தேர்தலை மனதில் வைத்து செயல்படாது என்பதை பிரதமர் மோதி தெரிந்து கொள்ள வேண்டும். சீனா அடுத்த 50 ஆண்டுகளுக்கான திட்டம் மற்றும் ராஜதந்திரத்துடன் பணியாற்றி அதை செயல்படுத்துகிறது. சீனா இந்தியாவின் எல்லை அல்ல என்று மோதி கூறுகிறார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து சந்திப்புகள் நடந்து வருகின்றன. அரசு முதலில் அதன் சொந்த முரண்பாடுகளிலிருந்து விடுபட வேண்டும்.” என்று அவர் கூறுகிறார்.
"சிபிஇசி( சீனா பாகிஸ்தான் பொருளாதார பகுதி) சீனாவுக்கு மிகவும் முக்கியமானது. அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. சியாச்சின் பனிப்பாறை மீதும் சீனாவின் பார்வை உள்ளது. எவ்வாறாயினும், சிபிஇசி-ஐ யாரும் கண்காணிப்பதை சீனா விரும்பவில்லை. அது லடாக்கிலிருந்து பின்வாங்கும் என்று நான் நினைக்கவில்லை. அது தொடர்ந்து இதே நிலையில் இருக்கும். ஏனென்றால் இதை திடீரென்று அந்த நாடு செய்யவில்லை, முழு திட்டமிடலுடன் செயல்பட்டுள்ளது. நிலைமை மோசமடையக்கூடும். இரு நாடுகளும் மோதக்கூடும். ஆனால் இந்தமுறை இந்தியாவுக்கு மிகவும் எளிதானதாக இருக்காது “ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
'இந்தியாவின் ஒவ்வொரு அரசும், நேரு செய்த அதே தவறை செய்கிறது' என்று ராகுல் பேடி கூறுகிறார்.
"நாம் சீனாவின் எல்லையில் அமைதியை வாங்குகிறோம். தீர்வுகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடவில்லை" என்று அவர் கூறுகிறார்.
"1993 இல் பி.வி. நரசிம்மராவ் காலத்தில், இரு நாடுகளுக்கிடையில் எல்.ஏ.சி (மெய்யான கட்டுப்பாடு கோடு) முடிவு செய்யப்பட்டது. ஆனால் எல்.ஏ.சி மணலில் வரையப்பட்டது போல வலிமையற்றதாக உள்ளது.
சீன வீரர்கள் சிறிது ஊதும்போதே கோடு மறைந்துவிடுகிறது. நாம் தொடர்ந்து அதை தேடுகிறோம். நாம் கல்லில் வரைவதுபோல, உறுதியாக இதை வரைந்திருக்கவேண்டும், ஆனால் எந்த அரசும் இதைச் செய்யவில்லை. எல்லையில் நிரந்தரத் தீர்வை சீனா ஒருபோதும் விரும்பவில்லை. அது இந்தியாவுடனான அனைத்து வகையான உறவுகளையும் ஊக்குவித்து வருகிறது, ஆனால் எல்லைப் பிரச்சனை குறித்து பேச விரும்பவில்லை. 1962 போருக்குப் பிறகு, 58 ஆண்டுகள் கடந்துவிட்டன, அடுத்த 50 ஆண்டுகளுக்கான சீனாவின் திட்டத்தில், இந்தியா குறிவைக்கப்பட்டாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை, “என்று தெரிவிக்கிறார் அவர்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மீது தொடர்ந்து அதிகரித்துவரும் ஆபத்து

பட மூலாதாரம், ANI
எல்லையில் பதற்றத்தை குறைப்பது தொடர்பான பேச்சுக்களை நடத்த, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், வியாழக்கிழமையன்று ரஷ்யாவில் சந்தித்தனர்.
இரு அமைச்சர்களுக்கிடையில் சில பிரச்சனைகள் குறித்து புரிந்துணர்வு ஏற்பட்டது. ஆனால் சீன ராணுவம், இந்தியா ஆட்சேபம் தெரிவிக்கும் பகுதியிலிருந்து பின்வாங்கும் என்று வெளிப்படையாக கூறவில்லை..
“சீனா மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டறிக்கையில், எல்லையில் முன்பிருந்த நிலை பராமரிக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை காணப்படவில்லை ” என்று இரு அமைச்சர்களுக்கிடையில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்து குறித்து இந்தியாவின் பிரபல ஆய்வாளர் பிரம்மா செல்லானி, ட்வீட் செய்துள்ளார்.
ஏப்ரல் முதல் இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஜூன் 15 அன்று ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதன் பின்னர், சீன ராணுவம் லடாக்கில் பல இந்திய பகுதிகளில் ஊடுருவி இருப்பதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இருந்த நிலைமைக்கு திரும்ப சீனா அனுமதிக்குமா அல்லது எல்லையை மீண்டும் மாற்றுமா என்பது மிகப்பெரிய கேள்வி. சீனா பேச்சுவார்த்தை நடத்துகிறது, ஆனால் அது இந்தியாவை அச்சுறுத்தவும் செய்கிறது. முழு அருணாச்சல பிரதேசமும் தனக்கு சொந்தமானது என்றும், அதை ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கவில்லை என்றும் சீனா கூறுகிறது.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர் நிருபமா ராவ் ’தி வயர் சைனா’ வுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தானில் குவாதர், இலங்கையில் ஹம்பன்டோட்டா, ஜிபூத்தி மற்றும் பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகம் ஆகியவற்றை எந்த நேரத்திலும் ராஜதந்திர பயன்பாடுகளாக சீனா மாற்ற முடியும். சீனா தனது விருப்பத்திற்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்தும். இந்த பகுதிகளில் சீனா பெருமளவு முதலீடுகளை செய்துள்ளது. இந்த சீன முதலீடுகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்துவதாக நான் நம்புகிறேன்'' என அவர் தனது நேர்காணலில் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ,சீன பாதுகாப்பு அமைச்சரை ரஷ்யாவில் சந்தித்தார். இது தவிர, சீன பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனும் பேசினார்.
ராணுவ மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் கிழக்கு லடாக்கின் எல்லையில், ஏப்ரல் மாதத்திற்கு முன்பிருந்த நிலைமை மீண்டும் ஏற்படுத்தப்படும் என்று கூற சீனா தயாராக இல்லை.
சீனா குறித்து அரசின் உறுதியற்ற கொள்கை

பட மூலாதாரம், Getty Images
எஸ்.ஜெய்சங்கருக்கும் வாங் யிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் எதுவும் தெளிவாக இல்லை என்று பாதுகாப்பு ஆய்வாளர் சுஷாந்த் சரீன் கூறுகிறார்.
"இரண்டு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டு அறிக்கையில் எதுவும் தெளிவாக இல்லை. பதற்றம் குறையும் என்று நான் நினைக்கவில்லை, சீனா பின்வாங்கும் என்று நான் கருதவில்லை, இத்தகைய பேச்சுவார்த்தை முன்பும் நடந்துள்ளது, “ என்று அவர் கூறுகிறார்.
சீனாவை மனதில் வைத்து ஒரு அரசு பணியாற்றியது என்று பார்த்தால் அது மோதி அரசு மட்டும்தான், மற்ற அனைத்து அரசுகளும் கைகளை பிசைந்துகொண்டு வெறுமனே இருந்தன என்று சுஷாந்த் சரீன் நம்புகிறார்.
"இந்த அரசு, அந்த பகுதியில் உள்கட்டமைப்பு தொடர்பாக நிறைய பணிகளை செய்துள்ளது. இன்னும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன . சீனா நம் பகுதிக்குள் நுழைந்ததும் இந்த அரசு, ராணுவம் மற்றும் போர் விமானங்களை நிறுத்தியது. மோதி அரசு நேருவைப் போல எதுவும் செய்யாமல் இருக்கவில்லை, தயார் செய்வதில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் இரு பாதுகாப்பு அமைச்சர்கள், சீனா விஷயத்தில் நாட்டிற்கு மிகவும் தீங்கு செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒருவர் நேருவின் பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன், மற்றவர் மன்மோகன் சிங்கின் ஏ.கே. ஆண்டனி, '' என்று அவர் சொல்கிறார்.
எல்லா எதிர்கட்சிகளும், சீனா விஷயத்தில் அரசை வன்மையாக தாக்கி வருகின்றன., ஆனால் இதற்கு முன்பும், எந்தவொரு அரசின் சீனா பற்றிய கொள்கையும் மிகவும் தீர்க்கமானதாக இருக்கவில்லை.
நாட்டில் ஒவ்வொரு நாளும் கோவிட் 19 காரணமாக சுமார் ஒரு லட்சம் புதிய தொற்றுகள் வந்து கொண்டிருக்கின்றன, எல்லையில் சீனா, தாக்கும் மனப்போக்கில் இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் பூஜ்யத்திற்கும் குறைவாக மைனஸ் 24 க்கும் கீழே சென்றுவிட்டது. இவை அனைத்தையும் பார்க்கும்போது இந்தியா, ஒரே நேரத்தில் மூன்று பக்கங்களில் இருந்தும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பதை காணமுடிகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












