மாலி அரசியல் கிளர்ச்சி: ராணுவத்தின் பிடியில் அதிபர், பிரதமர் - நாடாளுமன்றம், ஆட்சி கலைப்பு

தடுப்பு காவலில் அதிபர், பிரதமர்; ஆட்சி கலைப்பு - மாலியில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

மாலி நாட்டின் அதிபர், பிரதமர் ஆகியோர் ராணுவத்தின் பிடியில் இருக்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமை தாம் கைது செய்யப்பட்டதை அடுத்து அதிபர் இப்ராஹிம் பூபாகர் கெய்ட்டா தமது பதவியை துறந்ததுடன், ஆட்சியையும், நாடாளுமன்றத்தையும் அவர் கலைத்துவிட்டார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

''எனது அதிகார பதிவியை காப்பதற்காக யாரும் இரத்தம் சிந்துவதை நான் விரும்பவில்லை'' என்றும் இப்ராஹிம் பூபாகர் குறிப்பிட்டார்.

தலைநகர் பமாகோவில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்கு பிரதமர் பௌபௌ சிசே அழைத்துச் செல்லப்பட்ட சில மணி நேரங்களில் அதிபர் கைதும், பதவி விலகலும் நடந்துள்ளது. இதனை பிரான்சும், பிராந்திய சக்திகளும் கண்டித்துள்ளன.

தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் ஆட்சி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அறிவித்தார். "நமது பாதுகாப்புப் படையின் சில சக்திகள் தலையிட்டு இதையெல்லாம் முடிப்பதென முடிவு செய்த பிறகு எனக்கு வேறு ஏதும் தேர்வு இருக்கிறதா?" என்று கேட்ட அவர், "எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. நாட்டின் மீதான என் அன்பு அப்படி வெறுப்பு கொள்ளவிடாது. கடவுள் நம்மைக் காக்கட்டும்" என்று தெரிவித்தார் அவர்.

2018ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற கைட்டா இரண்டாவது முறையாக மாலியின் அதிபராக பதிவியேற்றார். ஊழல் மற்றும் பொருளாதார நிர்வாகத்தில் குறைபாடு என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைட்டாவிற்கு எதிரான சூழல் மாலியில் நிலவியது. சமீபத்தில் மிக பெரிய போராட்டங்கள் நடந்தன.

ஊதியம், தொடர்ந்து ஜிகாதிகளுக்கு எதிராகப் போராடவேண்டியிருந்தது ஆகியவை ஆயுதப் படையினர் மத்தியில் புகாராக இருந்தது.

Banner image reading 'more about coronavirus'
Banner
தடுப்பு காவலில் அதிபர், பிரதமர்; ஆட்சி கலைப்பு - மாலியில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, ஈப்பிராஹிம் பூபாகர் கைட்டா

தலைநகர் பமாகோவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டி முகாமில் அதிபர் கைட்டாவிற்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. காட்டி முகாமின் துணை தலைவர் கோள் மாலிக் டியாவ் போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.

செவ்வாய் கிழமை மதியம் அதிபர் மற்றும் பிரதமரின் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, இருவரும் கைது செய்யப்பட்டனர். அதிபரின் மகனும் மற்ற அரசு அதிகாரிகளுடன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

இந்த கிளர்ச்சியில் எத்தனை ஆயுதப்படையினர் கலந்துக்கொண்டனர் என்ற விவரம் கிடைக்கவில்லை.

2012ம் ஆண்டு ஜிகாதிகளை கட்டுபடுத்த மூத்த அதிகாரிகள் தவறிய காரணத்தால் இதே ஆயுதப்படையினர் வட மாலியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மற்றும் அதிபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி வெளியில் வந்தபோது ஐக்கிய நாடுகளும் ஆஃபிரிக்க யூனியனும், முதலில் இருவரையும் விடுவிக்குமாறு அழைப்பு விடுத்தன.

விரைவில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு காவுன்சில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: