கொரோனா வைரஸுக்கு மத்தியில் இந்திய குழந்தைகளை நோய்வாய்ப்படுத்தும் மற்றொரு பிரச்சனை - ஈய அமிலம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நவீன் சிங் கட்கா,
- பதவி, சூழலியல் செய்தியாளர், பிபிசி உலக சேவை
சர்வதேச அளவில் ஈயத்தால் இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
உலகத்தில் மூன்றில் ஒரு குழந்தை ஈயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்றும் யுனிசெஃப் மற்றும் ப்யூர் எர்த் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
உலகளவில் 80 கோடி குழந்தைகள் ஈயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
உலகளவில் ஈயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சரிபாதியினர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் மட்டும் 27.5 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
"தொடர்ந்து வாந்தி எடுக்கும் என் மகன்"
2009ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. நான்கு வயதான சர்பஜீத் சிங் தொடர்ந்து வாந்தி எடுத்தார். அவர் ஏன் வாந்தி எடுக்கிறார் என்பதை அவர் தந்தை மஞ்சித் சிங்கால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Dr. Abbas Mahdi
உத்தர பிரதேசத்தை சேர்ந்த மஞ்சித் தன் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்குப் பரிசோதனையில் ரத்த சோகை இருப்பது தெரியவந்தது. இதற்கான காரணம் தெரியவில்லை.
ஆனால், அடுத்த சில மாதங்களுக்கு நிறுத்தாமல் வாந்தி எடுத்தார். மேற்கொண்டு பரிசோதனைகள் செய்யும் போதுதான், அவர் உடலில் இருக்க வேண்டியதை விட 40 மடங்கு ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உலகளவில் ஈயத்தால் பாதிக்கப்பட்டுள்ள 80 கோடி பேரில் சரப்ஜீத் சிங்கும் ஒருவர்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் புள்ளிவிவரங்களை இந்த அறிக்கை பகுப்பாய்வு செய்துள்ளது.
குழந்தைகளின் மூளை, நரம்பு மண்டலம், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தைக் குணப்படுத்த முடியாத அளவுக்கு ஈயம் மிக மோசமாகப் பாதிக்கிறது.
"ஈயம் மிக மோசமான நச்சு, நம் உடலில் சிறியளவில் கலந்தால் கூட, IQ (நுண்ணறிவுத் திறன்) அளவில் மிக அதிக அளவில் தாக்கத்தை உண்டாக்கும். நம் நடத்தையில் பெரிய அளவில் தாக்கம் செலுத்தும். எதிர்காலத்தில் வன்முறையாளராக மாறுவதற்குக் கூட வாய்ப்பு உள்ளது," என அந்த அறிக்கை கூறுகிறது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?


பட மூலாதாரம், Getty Images
"கருவில் உள்ள குழந்தைகள், ஐந்து வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய ஆபத்து. வாழ்நாள் முழுவதும் நரம்பு, அறிவாற்றல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்," என்று விவரிக்கிறது இந்த ஆய்வு.
ஈயத்தால் மிக மோசமாகப் பாதிப்புக்கு உள்ளான பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. இரண்டாவது இடத்தில் நைஜீரியாவும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும், நான்காவது இடத்தில் வங்கதேசமும் உள்ளன.
எங்கிருந்து பரவுகிறது?
பேட்டரிகளின் மறுசுழற்சி, விளையாட்டுப் பொருட்கள், மின்சார கழிவுகள், சுரங்கத் தொழில், கலப்படமான மசாலா பொருட்கள் மற்றும் பெயிண்ட் - இவைதான் ஈயத்தின் முக்கிய தோற்றுவாயாக இருக்கின்றன. இங்கிருந்துதான் மனிதர்களுக்குப் பரவுகிறது.
"ஏழை அல்லது குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் 2000திற்கு பின் வாகனங்கள் மூன்று மடங்கு அதிகரித்தன. இதன் காரணமாகப் பாதுகாப்பற்ற முறையில் ஈய அமிலத்தை மறுசுழற்சி செய்வது மிகவும் அதிகரித்தது," என்று பிபிசியிடம் தெரிவித்தார் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய நிக்கோலஸ் ரீஸ்.
"உலகளவில் பயன்படுத்தப்படும் ஈயத்தில் 85 சதவீதம், ஈய அமில பேட்டரிகள் தயாரிக்கத்தான் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலானவை மறுசுழற்சி செய்யப்பட்ட ஆட்டோமொபைல் பேட்டரிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, முறைப்படுத்தப்படாத பொருளாதாரத்தின் கீழ் இவை வருகின்றன," என்கிறது இந்த ஆய்வு.

பட மூலாதாரம், Pure Earth
"ஒழுங்குபடுத்தப்படாத, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் காரணமான ஈயம் கீழே சிந்துகின்றன. தரையில் சிந்தும் ஈயம் சுற்றுச்சூழலில் கலக்கிறது. இதுவே மாசுக்கு முக்கிய காரணமாக மாறுகிறது," என்கிறார் அவர்.
மறுசுழற்சி செய்யப்படும் பேட்டரிகள்
இது இந்தியாவில் மிக முக்கியமான பிரச்சனை என்கின்றனர் வல்லுநர்கள்.
"இந்தியாவில் ஈயத்தால் மாசுபட்ட 300 இடங்களை ஆய்வு செய்தோம். அவற்றில் பெரும்பாலானவை பேட்டரியை மறு சுழற்சி செய்யும் இடங்கள். பல தொழில்கள் கொண்ட தொழில்துறை மண்டலங்கள்," என்கிறார் 'ப்யூர் எர்த்' அமைப்பைச் சேர்ந்த ப்ரொமிளா ஷர்மா. இவர் இந்த ஆய்வறிக்கையை பதிப்பித்தவர்களில் ஒருவர்.
இந்த ஆய்வானது இவரது அமைப்பால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட்ட ஒன்று.

பட மூலாதாரம், Pure Earth
எங்களது ஆய்வானது மிகப்பெரிய ஒரு விஷயத்தின் ஒரு துளி மட்டுமே என்கிறார்.
குறிப்பாக மேற்கு வங்கம், பிகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் அதிகளவில் முறைப்படுத்தப்படாத ஈய அமில மறுசுழற்சிகள் நடப்பதாகக் கூறுகிறார்.
வங்க தேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பேட்டரிகள் இங்கு மறு சுழற்சி செய்யப்படுவதாக அவரது அறிக்கை கூறுகிறது.
மஞ்சித் சிங் பேட்டரிகளை மறு சுழற்சி செய்யும் பணியில்தான் பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கிறார். அவற்றைத் தனது வீட்டில் வைத்திருந்திருக்கிறார்.
"என் வேலையே என் குடும்பத்தைப் பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. இது தெரியவந்ததும் என் தொழிலை உடனே நிறுத்தினேன்," என்கிறார்.
சர்பஜீத்தின் கால் இதன் காரணமாகப் பாதிக்கப்பட்டது. அவருக்கு சிரப்பு காலணிகள் தேவைப்பட்டன. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டது.
சர்பஜீத்துக்கு இப்போது 16 வயது. மஞ்சித், "அவருக்கு இப்போது ரத்த சோகை இல்லை. ஆனால் வேறு சில உடல் நலக் கோளாறுகள் உள்ளன," என்கிறார்.
இன்வெர்டர் கசிவுகள்
ஈய கசிவு பரவலாக ஏற்படக் காரணமாக இருக்கும் இன்னொரு உபகரணம் இன்வெர்ட்டர். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பரவலாக இன்வெர்ட்டர் பயன்படுத்தப்படுகிறது.

பட மூலாதாரம், Pure Earth
லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின், பயோ கெமிஸ்ட்ரி துறையின் பேராசிரியர் அப்பாஸ் மஹ்தி, "இன்வெர்ட்டரில் ஏற்படும் ஈய கசிவு, குழந்தைகளின் உடல் நலக் கோளாறுக்கு காரணம் என்பதை கண்டுபிடித்தோம்," என்கிறார்
"இன்வெர்ட்டரிலிருந்து கசிந்த ஈய அமிலத்தின் ஆபத்தை அறியாமல், வீட்டின் பணியாள் துடைத்திருக்கிறார். இதன் காரணமாக வீட்டின் தரை முழுவதும் ஈயம் பரவி இருக்கிறது. இது குழந்தையின் உடலில் ஊடுருவி நோய்வாய்ப்படக் காரணமாக ஆகி இருக்கிறது," என்கிறார்.
மின்சார கழிவுகள், சுரங்கத் தொழில், மசாலா பொருட்கள், ஏன் சில மூலிகை மருந்துகளில் கூட ஈயம் இருக்கிறது.
ஏன் குழந்தைகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்?
உடல் எடையுடன் ஒப்பிடும்போது குழந்தைகள் உட்கொள்ளும் உணவு, நீர் மற்றும் காற்றின் அளவு அதிகம். இது அவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட முக்கிய காரணம் என்கிறார்கள்.
குழந்தைகள் ஈயத்தால் பாதிக்கப்படும் போது உடனே எந்த அறிகுறிகளும் தெரியாது. வயதாக வயதாகத்தான் பாதிப்புகள் தெரியும் என்கிறது இந்த அய்வு.
"இது தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது ஒரு முக்கிய பிரச்சனை. ஆனால் கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது, இப்போது நிலைமை பரவாயில்லை," என்கிறார் மருத்துவர் மஹ்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












