கொரோனா வைரஸ்: இன்று முதல் 7ஆம் கட்ட சமூக முடக்கம்: தமிழகத்தில் எதற்கெல்லாம் கட்டுப்பாடு? என்னென்ன தளர்வுகள்?’

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை: "7ஆம் கட்ட ஊரடங்கு: எதற்கெல்லாம் தடை? என்னென்ன தளர்வுகள்?'
தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு காலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர், இறுதிச்சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப் படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று முதல் 7-ம் கட்ட ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31 வரை சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள், வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுப் பகுதிகள், மாநிலத்தில் உள்ள அனைத்து பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்குத் தடை தொடர்கிறது. சுற்றுலாத் தலங்கள், ஷாப்பிங் மால்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத விளையாட்டு அரங்கங் கள் திறக்க அனுமதி அளிக்கப் படுகிறது. ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் (2, 9, 16, 23, 30 தேதிகள்) தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப் படும். அன்று, பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவமனை வாகனங் கள், அவசர ஊர்திகள் அனுமதிக்கப்படும். மருத்துவ அவசரங்களுக்காக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
திருமணம், திருமணம் தொடர் பான நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம். இறுதிச் சடங்கு, இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி உண்டு. மாநிலம் முழுவதும் தனியார், அரசுப் பேருந்துகள் இயக்கம் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கெனவே இணை நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டுக்குள் இருக்க வேண்டும். மருத்துவச் சிகிச்சைக்காக அவர்கள் வெளியில் வர அனுமதியுண்டு. ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
அனைவரும் பொது இடத்துக்கு வரும்போதும், பணிபுரியும் இடத்திலும், பயணத்தின்போதும் முகக் கவசம் அணிய வேண்டும். 6 அடி இடைவெளியை பொது இடத்தில் பின்பற்ற வேண்டும். பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக, பொது இடத்தில் மது அருந்துதல், பான், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துதல் தடை செய்யப் படுகிறது.
முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக அமல்படுத்தப்படும். தொடர்ந்து கை கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவை கண்டிப்பாக அமல் படுத்தப்படுகிறது. யாராவது இவற்றை மீறி நடந்தால், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த முறை, ஊடரங்கு நீட்டிப்பின்போது திருமணம், இறுதிச் சடங்குகளில் 50 பேர் பங்கேற்கலாம் என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திருமணத்துக்கு 50 பேர், இறுதிச் சடங்கில் 20 பேர் பங்கேற்கலாம் என அரசாணையில் கூறப்பட்டிருந்தது.
இந்த முறை முதல்வரின் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் திருமணம், இறுதிச்சடங்கு அனுமதி குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. அதே நேரம், திருமணத்துக்கு 50 பேர் வரை, இறுதிச்சடங்கில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம் என்பது விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணை: தமிழக அரசால் தலைவர்கள், அறிஞர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கரோனா தொற்று உள்ள நிலையில், தலைவர்களின் சிலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் மட்டும் மாலை அணிவிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் உடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் 5 பேருக்கு மிகாமல், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பதிவுபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் 5 பேருக்கு மிகாமல் சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்துக்கான அனுமதியைப் பெற்று அரசு அறிவித்த வழிமுறைகளின்படி சமூக இடைவெளியைப் பின்பற்றி மாலை அணிவித்து மரியாதை செய்யலாம்.

தினத்தந்தி:'இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்தில் திருட்டு'

பட மூலாதாரம், Facebook
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போய் விட்டதாக, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"நான் 1,300 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளேன். பல்வேறு மொழிகளில் 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எனது இசை அமைப்பில் உருவாகி பிரபலம் அடைந்துள்ளது.
சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் தெருவில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் எனக்கென்று பிரத்யேகமாக ஒரு 'ரெக்கார்டிங் தியேட்டர்' உள்ளது. அதை இளையராஜா 'ரெக்கார்டிங் தியேட்டர்' என்றே அழைப்பார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதை நான் பயன்படுத்தி வந்தேன்.
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நான் பயன்படுத்தி வந்த 'ரெக்கார்டிங் தியேட்டரை' காலி செய்ய வற்புறுத்தினார்கள். மின் இணைப்பு, தண்ணீர் வசதி போன்றவை துண்டிக்கப்பட்டது. எனக்கு பலவகைகளிலும் மிரட்டல் விடுக்கப்பட்டது. நான் காலி செய்ய மறுத்ததோடு, காலி செய்வதற்கு நிரந்தர தடை கேட்டு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்தநிலையில் நான் பயன்படுத்தி வந்த 'ரெக்கார்டிங் தியேட்டரை' சட்டவிரோதமாக உடைத்து திறந்து அதற்குள் இருந்த மிக முக்கியமான வாத்திய கருவிகள், இசை சம்பந்தப்பட்ட குறிப்புகள் மற்றும் பொருட்களை திருடிச்சென்று விட்டனர். நான் பயன்படுத்திய அறை சூறையாடப்பட்டு உள்ளது. திருடப்பட்ட பொருட்கள் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து திருட்டு போன பொருட்களை மீட்டு தரும்படி வேண்டுகிறேன்," என்று அவர் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளித செய்தி.

தினமணி: ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து தீபா மனு

பட மூலாதாரம், Getty Images
ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து, அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்ப்பதாகவும், கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்தியுள்ள தொகையில் வருமானவரி நிலுவையை வசூலிக்கவும் தடை விதிக்கவும்' கோரிக்கை வைத்துள்ளார்.
அத்துடன் வேதா இல்லத்தின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் ஜெ.தீபா கோரியுள்ளார்," என்கிறது அந்நாளிதழ்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












