கொரோனா ஊரடங்கில் பணியாளர்களுக்கு முழுசம்பளம் கொடுத்த முருங்கை விவசாயி

அழகர்சாமி
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு தலைதூக்கியுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில், திண்டுக்கலைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தடைகளை கடந்து தனது பணியாளர்களுக்கு முழு சம்பளம் அளிப்பதோடு, பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாதவாறு பணியிடத்தை பாதுகாப்பாக வைத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் ஒட்டு ரகம் முருங்கை செடிகளை விற்பனை செய்துவருகிறார் திண்டுக்கல் பள்ளபட்டியைச் சேர்ந்த முருங்கை விவசாயி அழகர்சாமி. குறைந்தது 50,000 முதல் ஒரு லட்சம் செடிகள் ஒவ்வொரு மாதமும் விற்றுவிடும் என்ற நம்பிக்கையில் பல்லாயிரம் செடிகளை தயாராக வைத்திருந்தார் அழகர்சாமி.

அழகர்சாமி

கொரோனா ஊரடங்கு காலத்தில், முருங்கை செடிகளை விற்பதில் சரிவு இருந்தாலும், தனது பணியாளர்களின் சம்பளத்தை அவர் குறைக்கவில்லை. மாறாக, அவர்கள் உடல்நலன் மீது அக்கறை எடுத்துக்கொண்டதாக சொல்கிறார். ''தினமும் முருங்கை இலை சூப், கபசுரக்குடிநீர் மற்றும் இஞ்சி தேநீர் குடிக்கிறோம். கொரோனாவால் முருங்கை செடிகளை விற்பதில் சரிவு ஏற்பட்டது. ஆனால் என்னுடன் வேலை செய்பவர்களுக்கு முழு சம்பளம் தருகிறேன். 50 பெண்கள்,20 ஆண்கள் என 70 பேர் வேலை செய்கிறார்கள். தினக்கூலியாக ரூ.300 முதல் ரூ.400 வரை பெறுகிறார்கள். சுமார் 20 ஆண்டுகளாக என்னிடம் வேலை செய்கிறார்கள். இவர்கள் என் குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள். நான் எப்படி சம்பளத்தை குறைப்பேன்?,''என்கிறார் அழகர்சாமி.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அழகர்சாமி, சுமார் ஏழு ஆண்டுகள் முயற்சி செய்து புதிய முருங்கை வகை ஒன்றை உருவாக்கி, அதில் ஒட்டு செடிகளைத் தயாரித்து, முருங்கை பயிர் செய்பவர்களுக்கு செடிகளை விற்பனை செய்கிறார். அவர் உருவாக்கிய முருங்கை ரகத்தின் பெயர் -பிஏவிஎம்(PAVM-பள்ளப்பட்டி அழகர்சாமி வெள்ளிமலை முருகன்) ஆகும். இயற்கை வேளாண்மையை அதிகம் ஊக்குவித்த நம்மாழ்வார் தான் பிஏவிஎம் ரகத்தை பிரபலப்படுத்தினார் என்கிறார் அழகர்சாமி.

Banner image reading 'more about coronavirus'
Banner

தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநில விவசாயிகளும் இவரது முருங்கை ரகத்தை வாங்கிச் செல்வதாக கூறுகிறார். சமீபமாக நைஜீரியாவுக்கும் முருங்கை செடிகளை அனுப்புயிருக்கிறார்.

அழகர்சாமி

''செப்டம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை முருங்கை காய் விற்பனை அபரிமிதமாக இருக்கும். அதிகபட்சமாக ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.500 வரை விற்பனை ஆகும். 2019ல் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ ரூ.1,500 வரை விற்பனை ஆனது. விளைச்சல் எடுக்கும் விவசாயிக்கு இழப்பு இல்லாமல் நம்பிக்கை தரும் பயிர் முருங்கை. கொரோனா காலத்தில் பலரும் முருங்கையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அறிந்து அதிகளவில் எடுத்துக்கொள்கிறார்கள் என நினைக்கிறேன். . ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட சரிவு விரைவில் சரியாகும் என நம்பிக்கையோடு இருக்கிறேன்,''என்கிறார் அழகர்சாமி.

முருங்கை செடிகளுக்கு இயற்கை உரம், கரைசல் போன்றவற்றை தெளிப்பது, ஒட்டு செடி உருவாக்குவது, பைகளில் அடுக்குவது, தண்ணீர் பாய்ச்சுவது, விளைந்த மரங்களில் இருந்து காய் பறிப்பது என ஊரடங்கு காலத்திலும் பணியாளர்கள் மும்மரமாக வேலை பார்த்தார்கள் என்கிறார் அழகர்சாமி.

''எல்லோரும் முகக்கவசம் அணிந்துகொண்டார்கள். சோப்பு போட்டு கைகழுவுவது கட்டாயம். வேலை செய்யும் போது இடைவெளி விட வேண்டும் என வலியுறுத்தினேன். முதல் இரண்டு வாரங்கள் சிலருக்கு அச்சம் இருந்தது. ஆனால் பாதுகாப்புடன் வேலை செய்யலாம் என்ற உறுதி ஏற்பட்டதால், வேலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களுக்காக நானும் வேலை செய்வதில் கவனமாக இருந்தேன்,''என்கிறார் அவர்.

அழகர்சாமி

அழகர்சாமியின் முருங்கை செடி பண்ணையில் 15 ஆண்டுகளாக வேலைசெய்யும் காமாட்சி கொரோனா காலத்தில் எந்த இழப்பையும் சந்திக்கவில்லை என்கிறார். ''விவசாயத்தில் வேலை இல்லாத நாள் என்பது இல்லை. நாங்கள் ஏழு நாளும் வேலை செய்கிறோம். முழு சம்பளம் பெறுகிறோம். சத்தான உணவு சாப்பிடுகிறோம். தினமும் வீட்டுக்கு போகும்போது, முருங்கை இலை எடுத்துசசெல்கிறோம். முருங்கை கீரை பொரியல், காய் என சாப்பிடுகிறோம். மனநிறைவோடு வாழ்கிறோம்,''என்கிறார் காமாட்சி.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

கொரோனாவால் முருங்கை விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கும் அழகர்சாமி, ஊரடங்கு முடிந்ததும் ஆந்திராவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழாவுக்கு செல்லவிருப்பதாகக் கூறுகிறார். ''ஆந்திராவில் பலரும் பிஏவிஎம் ரகத்தில் நல்ல லாபத்தை ஈட்டியுள்ளார்கள். ஒரு ஏக்கரில் சுமார் 200 செடிகளை வைக்கலாம். நான்கு மாதத்தில் முருங்கை காய்த்துவிடும். வருமானம் தாமதம் இல்லாமல் வந்துவிடுவதால், பலருக்கு உதவியாக இருந்தது. இதனால் அங்குள்ள விவசாயிகள் விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். ஊரடங்கு காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்தாகியிருந்தது. தற்போது ஆந்திராவிலிருந்து, இ-பாஸ் எடுத்து, செடிகள் வாங்க வரும் விவசாயிகள் நேரில் வாழ்த்துகிறார்கள்,''என்கிறார் நெகிழ்வுடன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: