கார்கில் போர்: "இந்தியாவின் முதுகில் குத்தியது பாகிஸ்தான்" - நரேந்திர மோதி பேச்சு

பட மூலாதாரம், Getty Images
நாடு முழுவதும் கொரோனா மீட்பு விகிதம் மற்ற நாடுகளைவிட சிறப்பாக உள்ளது. லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது. ஆனால், அதே நேரம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
மோதி 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார்.
'மன் கி பாத்'
அவர், "கொரோனா வைரஸ் தொடக்க நிலையில் இருந்ததைப்போலவே தற்போதும் ஆபத்தானதாகவே உள்ளது." என கூறியுள்ளார்.
"தற்போது கொரோனா ஆரம்ப நிலையில் இருந்ததைப்போலவே தற்போதும் உள்ளது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்," என மோதி குறிப்பிட்டார்.
இந்தியா கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நிலவரப்படி 13,85,635 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 32,060 பேர் பலியாகி உள்ளனர் என்கிறது ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம்.
முகக்கவசம்

பட மூலாதாரம், Getty Images
"முகக்கவசத்தை அகற்ற தோன்றினால், நமது மருத்துவர்கள், செவிலியர்கள் நினைத்துப் பாருங்கள். நம்மைக் காப்பாற்றச் சுகாதார பணியாளர்கள் பல மணிநேரம் முகக் கவசம் அணிந்து பணியாற்றுகின்றனர்," என்றார்.
முகக் கவசம் அணிவது, 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் அவர், "கார்கில் போர் வெற்றி தினம் இன்று - பாகிஸ்தானோடு நட்புறவையே இந்தியா விரும்பியது. ஆனால் பாகிஸ்தான் இயற்கையான குணத்தின் காரணமாக இந்தியாவை முதுகில் குத்தியது. ஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமையையும் வீரத்தையும் பார்த்தது." என்றார்.
ட்விட்டரில் வாழ்த்து
இதனிடையே, கார்கில் போரின் 21ஆவது ஆண்டையொட்டி பிரதமர் மோதி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அதில் " நம்முடைய கார்கில் வெற்றி நாள் , இந்த நாளில் நமது படை வீரர்களின் துணிச்சலையும், விடாமுயற்சி, மன உறுதியையும் கடந்த 1999-ம் ஆண்டில் துரிதமாகச் செயல்பட்டு நமது நாட்டை பாதுகாத்ததை நினைவுகூர வேண்டும். நமது ராணுவ வீரர்களின் வீரம் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- அமெரிக்காவை தாக்கும் மற்றொரு அபாயம்: 32 பகுதிகளுக்கு ஆபத்து - விரிவான தகவல்கள்
- புதுச்சேரி எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு; திறந்தவெளியில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர்
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயம்
- கொரோனா தாக்கிய கர்ப்பிணி பெண்களுக்கு தனிக்கவனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












