புதுச்சேரி எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு; திறந்தவெளியில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர்

புதுச்சேரியில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று நாட்கள் பங்கேற்றுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுவது இதுவே முதல்முறை.
இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை அரங்கம் முற்றிலுமாக மூடப்பட்டு, இன்றைய (சனிக்கிழமை) நிகழ்வு தற்காலிகமாக அமைக்கப்பட்ட திறந்தவெளி பந்தலில் நடைபெற்றது.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆறாவது நாளான இன்று நிதி நிலை அறிக்கை மீதான பொதுவிவாதம் நடைபெற்றது. இந்த திறந்த பேரவையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

கொரோனா காரணமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும், மூன்று தினங்களுக்குப் பின்னர் சட்டமன்றத்தை நடத்த அதிமுக கோரிக்கை வைத்த நிலையில், தற்போது கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேரவையில் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து பேசிய முதல்வர் நாராயணசாமி, "சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற வளாக ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று திறந்தவெளி சட்டப்பேரவை கூட்டத்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திறந்தவெளி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் நாராயணசாமி, "கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் பேரவை நிகழ்வில் கலந்துகொண்டபோது நான் உட்பட, சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளோம். எனவே குறைந்தபட்சம் 7 நாட்கள் தங்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்," என நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்
இதையடுத்து நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக் கேட்கப்பட்டு நிதி மசோதாக்கள் ஏகமனதாகத் நிறைவேற்றப்பட்டு பேரவையைச் சபாநாயகர் சிவக்கொழுந்து காலவரையின்றி ஒத்திவைத்தார்..
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












