ஆல்பா கொரோனா வைரஸை அழிக்கும் திறன் மஞ்சளுக்கு உள்ளது: வெளிச்சம் பாய்ச்சும் ஆராய்ச்சி

மஞ்சள்

பட மூலாதாரம், Getty Images

மஞ்சளில் காணப்படும் குர்குமின் வைரஸை அழிக்க உதவுகிறது என ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

பன்றிகளைத் தாக்கும் டிரான்ஸ்மிசிபிள் காஸ்ட்ரோஎன்டிரிடிஸ் வைரஸ் (டிஜிஇவி) என்ற ஆல்பா குழு கொரோனா வைரஸை அழிக்கும் திறன் மஞ்சளுக்கு உள்ளது என ஜர்னல் ஆஃப் ஜெனரல் வைராலஜி இதழில் வெளியான ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

டிஜிஇவி வைரஸ் பன்றிக்குட்டிகளுக்குப் பரவக்கூடிய காஸ்ட்ரோஎன்டிரிடிஸ் நோயை ஏற்படுத்துகிறது. இந்த நோயால் பன்றிகளுக்கு வயிற்றுப்போக்கு, கடுமையான நீரிழப்பு ஆகிய பாதிப்புகளுடன் சில சந்தர்ப்பங்களில் மரணத்திற்கும் வழிவகுக்கிறது.

இந்த மோசமான தொற்றுநோயால், இரண்டு வாரங்களுக்கும் குறைவான பன்றிக்குட்டிகளில் உயிருக்கு கடும் ஆபத்து உள்ளது. இந்த நோய் உலகளாவிய பன்றித் தொழிலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த வகை ஆல்பா-கொரோனா வைரஸ்களுக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. மேலும், காஸ்ட்ரோஎன்டிரிடிஸ் பாதிப்புக்குத் தடுப்பூசி இருந்தாலும், வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் தற்போது இது பயனுள்ளதாக இல்லை.

பன்றிக்குட்டி

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில் மஞ்சளில் காணப்படும் குர்குமினை வைத்து ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், செல் கல்சரில் காஸ்ட்ரோஎன்டிரிடிஸ் வைரஸ் துகள்களின் எண்ணிக்கையை குர்குமின் குறைப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

மேலும், ஒரு செல்லுக்குள் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு கொல்லுதல், வைரஸை செயலற்றதாக்குதல், வைரஸ் நுழைவதைத் தடுக்க செல்களின் வளர் சிதையில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற பல வழிகளில் குர்குமின் செயல்படுகிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சீனாவிலுள்ள வூஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோ இன்ஜினீயரிங் கல்லூரியில் இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய டாக்டர் லிலன் ஜி,``டிஜிஇவி வைரஸை செயலிழக்க வைப்பதில் குர்குமின் நன்கு செயலாற்றுகிறது`` என தெரிவித்துள்ளார்.

டெங்கு வைரஸ், ஹெபடைட்டிஸ் பி, ஜிகா வைரஸ் போன்ற வைரஸ்களின் நகலெடுப்புகளையும் இந்த குர்குமின் தடுக்கிறது. அத்துடன் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்படப் பல குறிப்பிடத்தக்க உயிரியல் விளைவுகளை குர்குமின் செய்கிறது எனவும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

மஞ்சள்

பட மூலாதாரம், Getty Images

மஞ்சளில் பக்க விளைவுகள் குறைவாக இருப்பதால் இதை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டதாக டாக்டர் லிலன் ஜி கூறுகிறார்.

``தடுப்பூசிகள் இல்லாத நிலையில், தொற்றுநோயைத் தடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். ஆன்டிவைரல் மருந்துகளுக்கான தேடலின் போது, பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் அதன் பொருட்களையும் ஆராய்ச்சியில் உட்படுத்துகிறோம். ஏனெனில் அதில் குறைந்த அளவிலான பக்க விளைவுகளே உள்ளன`` என்கிறார் அவர்.

``டிஜிஇவிக்கு எதிரான குர்குமினின் செயல்பாடுகள் குறித்து இன்னும் அதிகளவிலான ஆய்வுகள் தேவைப்படுகிறது. இந்த ஆராய்ச்சி வைரஸ் தடுப்பு மற்றும் குர்குமின் பயன்பாடு பற்றிய விரிவான புரிதலுக்கு வழிவகுக்கும் `` என்கிறார் டாக்டர் லிலன் ஜி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :