கொரோன வைரஸ் பாதிப்பு: தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 8718 ஆனது

தமிழகத்தில் கொரோனா

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் இன்று புதிதாக 716 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மே4ம் தேதி முதல் தினமும் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பவர்கள் 500க்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.

குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் சென்னை நகரத்தில் உள்ளனர் என்பதை சுகாதாரத்துறையின் அறிக்கை உணர்த்துகிறது.

இன்று ஒரே நாளில் எட்டு நபர்கள் இறந்துள்ளதால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.

இன்று இறந்தவர்கள் அனைவருமே 40வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் நான்கு நபர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 83 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2134ஆக உயர்ந்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

மாவட்ட வாரியான பட்டியலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக தொடர்ந்து சென்னை இடம்பெற்று வருகிறது. இன்று புதிதாக தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 716 நபர்களில் சென்னையில் 510நபர்களுக்கு தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, நாகை, மதுரை, கிருஷ்ணகிரி, நீலகிரி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்ததாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 35 நபர்களுக்கும், அரியலூரில் 36 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் 30க்கும் குறைவான நபர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ்

நோய் தொற்று அதிகமுள்ள சென்னை நகரத்தில் தடுப்பு பணிகளில் ஒருபகுதியாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் 24 மணிநேரம் இயங்கும் தொலைபேசி எண்ணுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

அதோடு கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் 100 தொலைபேசி அழைப்புகளுடன் கூடிய தொலைபேசி ஆலோசனை மையம் (Tele Counseling) செயல்பட்டு வருகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதோடு, கொரோனா கண்காணிப்பு செயலியின் (Corona Monitoring App) மூலம் காய்ச்சல் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு இந்த தொலைபேசி ஆலோசனை மையத்திலிருந்து தொடர்பு கொண்டு தேவைக்கேற்ப மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.

தொற்று பரவுதலை தடுக்கசென்னை மாநகராட்சியின் சார்பில் தனுஷ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலியை அதிகாரிகள் இன்று அறிமுகப்படுத்தினார்.

இச்செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிகிச்சையை அதற்குரிய மருத்துவர்களிடம் காணொலி மூலம் (Video Call) 24 மணிநேரமும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: