வெளிமாநிலத் தொழிலாளர்கள்: "என்னுடைய ரயில் எப்போது வரும்?" - சென்னை சென்ட்ரலில் கூடும் கூட்டம்

பிஹார் மாநில தொழிலாளர்கள்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

வெளிமாநில தொழிலாளர்கள் ரயில்களுக்காக பதிவுசெய்து, டிக்கெட் கிடைத்தவுடன்தான் வரவேண்டுமெனக் கூறப்பட்டிருந்தாலும் ஊர் செல்லும் பரிதவிப்போடு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொழிலாளர்கள் வருவது தொடர்ந்தபடியே இருக்கிறது.

தென்னக ரயில்வேயின் தலைமையகத்திற்கு வெளியில் ஒரு அழுக்குப் பையோடு 40 டிகிரி வெயிலில் உட்கார்ந்திருக்கிறார் 26 வயது தீபக் பந்திர். பிஹார் மாநிலம் பட்னாவிலிருந்து சிறிது தூரத்திலிருக்கிறது இவரது கிராமம். திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

அத்திப்பட்டு புதுநகரில் கட்டட வேலை பார்த்துக்கொண்டிருந்தார் தீபக். ஊரடங்கினால் வேலை போன பிறகு, இத்தனை நாட்களாக ஏதோ கையில் இருந்த காசை வைத்து சமாளித்திருக்கிறார். பிறகு பிஹாருக்கு ரயில் செல்வதாகத் தெரிந்தததும் இதற்காகப் பதிவும் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை.

இருந்தபோதும் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டார். ஆனால், தற்போது ரயில்கள் ஏதும் இல்லாத நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், ரயில் நிலையத்திற்கு அடுத்து உள்ள தென்னக ரயில்வேயின் பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருக்கிறார் தீபக்.

தீபக் மட்டுமல்ல, பிஹார், ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் இதுபோல சொந்த ஊர் செல்ல ரயில் கிடைக்குமா என்ற நம்பிக்கையில் தினமும் காலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி வருவதும் பிறகு காவலர்களால் அங்கிருந்து அகற்றப்படுவதும் தொடர்கதையாகிவருகிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

தீபக் வேலைபார்க்கும் அத்திப்பட்டு புதுநகர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 22 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ரயில் இருக்கும் என்ற நம்பிக்கையில் காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு நடந்தே இங்கு வந்துவிட்டார். இப்போது என்ன செய்வதெனத் தெரியவில்லை.

"என்ன செய்வதென்றே தெரியவில்லை. திரும்பிப் போனாலும் சாப்பிட காசில்லை. வீட்டிலிருந்து மனைவியும் குழந்தையும் கூப்பிட்டுக்கொண்டியிருக்கிறார்கள். எப்படியாவது ஊர் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென நினைக்கிறேன். என்னுடைய வண்டி எப்போது வரும்?" என்று கேட்கிறார் தீபக்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

மாநகராட்சி நடத்தும் காப்பிடங்களில் போய் தங்கியிருக்கவும் அவருக்குப் பிடிக்கவில்லை. ஊர் திரும்பவுதே அவரின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

சற்று தூரத்தில் உட்கார்ந்திருக்கும் உர்ஃபானுக்கு சொந்த ஊர் பிஹாரின் சிடாமர்ஹி. ஊரடங்கிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டுக்கு வந்தவர், புரசைவாக்கத்தில் ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டவுடன் ஹோட்டலை மூடிவிட்டார்கள். வேலையும் போய்விட்டது. பிறகு ஆங்காங்கே தங்கியிருந்தவர் ரயில் செல்வதாகக் கேள்விப்பட்டு சென்ட்ரலுக்கு நடந்து வந்திருக்கிறார்.

சென்னையிலிருந்து பிஹார் செல்லும் ரயில்கள் பட்னாவுக்குத்தானே செல்லும்; அங்கிருந்து சிடாமர்ஹி எப்படிச் செல்வீர்கள் என்று கேட்டால், "அதெல்லாம் நடந்துபோய்விடுவேன்" என்கிறார்.

காலையிலிருந்து சாப்பிடாமல் இவர்கள் கிடப்பதைப் பார்த்த சிலர், மதிய உணவை அளித்திருக்கிறார்கள். சொந்த ஊர் செல்லும் ரயிலைப் பிடிக்கும்வரை, இங்கிருந்து புறப்படுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் உர்ஃபான்.

இவர்களது முக்கியமான பிரச்சனை, இவர்களுக்கான காப்பிடத்தில், ரயில் வசதி குறித்த சரியான தகவல்கள் சென்று சேர்வதில்லை என்பதுதான். சென்னை மாநகராட்சியின் தங்குமிடத்திற்குச் செல்லவேண்டியதுதானே என்றால், அதைப் பற்றிய குழப்பமே அவர்களிடம் இருக்கிறது.

சென்ட்ரல்

ஒதிஷாவைச் சேர்ந்த ஜிக்னேஷ் மனைவி, குழந்தை, பெற்றொருடன் தமிழ்நாட்டில் ஏதேதோ வேலைகளைச் செய்து பிழைத்துவருகிறார். மற்றவர்களைப் போலவே இவரும் ரயில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 8 பேர் கொண்ட குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ட்ரலை அடைந்திருக்கிறார்கள்.

ரயில் ஏதும் இல்லை என்றதும் ஜிக்னேஷ் அழவே ஆரம்பித்துவிட்டார். அங்கிருந்த காவலர்கள் அவரையும் குடும்பத்தினரையும் மாநகராட்சியின் காப்பகத்திற்கு செல்ல அறிவுறுத்தினாலும் அவர்கள் சமாதானமாகவில்லை.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல விரும்பினால், இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற குறுஞ்செய்தி வந்தவுடனேயே அதனை ரயில் டிக்கெட்டாகக் கருதி சென்ட்ரலை நோக்கி வர ஆரம்பித்துவிடுகிறார்கள். காப்பகங்களில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு முறையான அறிவுறுத்தல் இருந்தாலும் இப்படித் தனித்தனியாக வசிப்பவர்கள், எப்படி ஊர்செல்வது என்பது குறித்த விவரமே தெரியாமல் சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 9 ஆயிரம் தொழிலாளர்கள் 8 ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு வார காலத்திற்குள், மீதமுள்ள தொழிலாளர்களும் அவரவர் மாநிலங்களுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதுவரை அந்தத் தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், இதுபோன்ற தகவல்கள் அவர்களைச் சென்றே சேர்வதில்லை என்பதுதான் சோகம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: