கொரோனா வைரஸ் மருந்து: சித்தர் திருத்தணிகாச்சலம் யார்?

திருத்தணிகாச்சலம்

பட மூலாதாரம், KA THIRUTHANIKASALAM/ FACEBOOK

படக்குறிப்பு, திருத்தணிகாச்சலம்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கோவிட்- 19 நோய்க்கு மருந்து இருப்பதாகச் சொன்னதால் தற்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சித்தர் திருத்தணிகாச்சலம். அவரது பின்னணி என்ன?

சென்னை கோயம்பேட்டின் ஜெய் நகர் பகுதியில் ரத்னா சித்தா ஹாஸ்பிடல் என்ற பெயரில் ஒரு மருத்துவமனையை நடத்திவருகிறார் திருத்தணிகாச்சலம். இந்த மருத்துவ மனையில் வேறு சில சித்த மருத்துவர்கள் பணியாற்றுவதாகக் கூறிவந்தாலும், முக்கியமான மருத்துவர் இவர்தான்.

ஆட்டிசம், ஆண்மைக் குறைபாடு, புற்றுநோய், டெங்கு, இப்போது கொரோனா என மனிதகுலம் அச்சமடையும் பல உடல்நலக் குறைபாடுகளுக்கும் நோய்களுக்கும் தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூறி பல தொலைக்காட்சிகளிலும் ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து பேசிவந்தவர் திருத்தணிகாச்சலம். தற்போது அவர் போலி மருத்துவர் எனக் குற்றம்சாட்டப்பட்டு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர் உண்மையிலேயே மருத்துவர்தானா, போலி என்றால் இவ்வளவு நாள் செயல்பட்டது எப்படி என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

திருத்தணிகாச்சலத்தின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி. ஆரம்பத்தில் பல்வேறு சிறிய சிறிய வேலைகளைச் செய்துவந்த அவர், 2000க்கு சற்று முன்பே தன்னை ஒரு பாரம்பரிய பச்சிலை வைத்தியராக அறிவித்துக்கொள்ளத் துவங்கினார். அந்த காலகட்டத்தில் எய்ட்சிற்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூறிவந்தார் தணிகாச்சலம்.

2001-02வாக்கில் பல தொலைக்காட்சிகளில் இரவு நேர ஸ்லாட்களை வாங்கி மருத்துவம் தொடர்பான ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்தார் திருத்தணிகாச்சலம். இதற்குப் பிறகு தொடர்ச்சியாக இவருக்கு ஏறுமுகம்தான்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ரத்னா சித்தா ஹாஸ்பிடல் என்ற மருத்துவமனையை இவரும் இவரது மனைவியும் துவங்கினர். இந்த மருத்துவமனையின் இணையதளத்தில் இவர் ஒரு நேச்சுரோபதி மருத்துவராகக் குறிப்பிடப்படுகிறார். சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், ஆண்மைக் குறைவு, ஆட்டிசம் ஆகிய குறைபாடுகளைக் குணப்படுத்துவதாக அவரது இணைய தளம் குறிப்பிடுகிறது.

சமீபகாலமாக, ஆட்டிசம் குறைபாட்டிற்கு மருத்துவம் செய்வது குறித்து தீவிரமாகப் பேசிவந்தார் திருத்தணிகாச்சலம். ரத்னா சித்தா மருத்துவமனையின் இணையதளத்தில், இவர் எழுதியிருக்கும் கட்டுரை, ஆட்டிசம் என்பது குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதால் வரும் பிரச்சனை என்று குறிப்பிடுகிறது. ரத்னா சித்தா ஹாஸ்பிடல் மற்றும் ஆட்டிசம் க்யூர் என இரண்டு இணையதளங்கள் திருத்தணிகாச்சலத்தின் பெயரோடு இயங்கிவருகின்றன. இதில் ஆட்டிசம் க்யூர் இணையதளத்தில், மருத்துவத் துறையின் அளவிலாத வளர்ச்சியின் காரணமாகவும் ஆட்டிசம் ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறார் திருத்தணிகாச்சலம்.

ஆனால், இவரிடம் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றவர்கள் பெரும் ஏமாற்றங்களையே சந்தித்தார்கள். பலருக்கு விபரீத அனுபவங்களும் ஏற்பட்டன. திருத்தணிகாச்சலம் கைதுசெய்யப்பட்ட பிறகு, பலரும் அந்த அனுபவங்களை வெளிப்படையாக எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். பத்திரிகையாளரான அந்தணன் ஷண்முகம், ஆட்டிசம் பிரச்சனை இருந்த தன் மகனை எவ்வித சோதனைகளும் செய்யாமல் மாதம் ஏழாயிரம் வாங்கிக்கொண்டு, மருந்து கொடுத்ததாகவும் ஆனால், அந்த மருந்தை சாப்பிட ஆரம்பித்த பிறகு மகனின் பிரச்சனைகள் மிகத் தீவிரமானதாகவும் எழுதினார்.

அவர் ஆட்டிசம் குறைபாட்டைக் குணப்படுத்துவதாக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க ஆரம்பித்த பிறகு, போலி மருத்துவர்கள், போலி மருந்துகளை விற்பவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் "ஃபார்மகோ விஜிலென்ஸ்" அவரை பலமுறை எச்சரித்ததாகத் தெரிகிறது. இருந்தபோதும் அவர் அப்படி விளம்பரம் செய்வதை நிறுத்தவில்லை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்க ஆரம்பித்ததும், ஜனவரி 27ஆம் தேதியன்று இந்தியாவில் கொரோனா நோயாளிகளே அடையாளம் காணப்படாத நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்தார் திருத்தணிகாச்சலம்.

அந்த செய்தியாளர் சந்திப்பில் கொரோனா வைரஸை ஒளிவட்ட வைரஸ் என்று குறிப்பிட்ட திருத்தணிகாச்சலம், அதற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் அந்த மருந்தில் நிலவேம்பு, வெள்ளெருக்கை, கருங்காலிவேர் ஆகியவை இருக்கும் என்றும் அந்த மருந்துக்கு 'தணிகா - 1' என பெயர் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தி சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. வெளிநாடுகளில் இருந்து வெளியாகும் சில இணைய இதழ்களிலும் தமிழ் மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக செய்திகள் வெளியாயின.

கொரோனா வைரஸ் மருந்து

பட மூலாதாரம், Getty Images

மார்ச் மாதவாக்கில், சீன பாரம்பரிய வைத்திய முறைகளோடு, தான் கண்டுபிடித்த மருந்தையும் செயல்படுத்திப் பார்க்க, சீனத் தூதுவர் தனக்கு அழைப்பு விடுத்ததாக ஒரு வாட்ஸப் மெஸேஜை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார் திருத்தணிகாச்சலம்.

இதற்கிடையில் தில்லிக்குச் சென்ற அவர், அங்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், ஆயுஷ் துறையின் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் ஆகியோரையும் சந்தித்து தன்னிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாகத் தெரிவித்ததாக ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.

ஆனால், அவர்கள் சென்னையில் உள்ள அரசு சித்தா மருத்துவமனையின் இயக்குனரை அணுகும்படி கூறவே, அவரையும் சந்தித்துப் பேசினார் திருத்தணிகாச்சலம். ஆனால், கொரோனாவுக்கான மருந்தை முதலில் மிருகங்களிடம் பரிசோதித்துவிட்ட பிறகே, மனிதர்களிடம் பரிசோதிக்க வேண்டும் என்று அரசு சித்த மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் சொல்லிவிட்டனர்.

இதற்குப் பிறகு தொடர்ச்சியாக ஃபேஸ்புக் பதிவுகளை வெளியிட்ட திருத்தணிகாச்சலம், தன்னிடம் மருந்து இருப்பதாக அறிவித்தவுடன் போட்டிக்கு ட்ரம்பும் அதேபோல அறிவித்ததாகத் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, "கொரோனோ நோயாளரை கட்டிபிடிக்க நான் ரெடி . என் சவால் ஏற்க யாரும் ரெடியா? மூலிகையால் குணமாக்கலாம்" என்று ஒரு செய்தியை வெளியிட்டார்.

இதற்குப் பிறகு, வீடியோக்களை வெளியிட ஆரம்பித்த திருத்தணிகாச்சலம், ஒரு கட்டத்தில் ஆவேசமாகி தன்னிடம் இருக்கும் தீர்வைப் பயன்படுத்தாமல், அரசுகள் மக்களைக் கொல்வதாகக் கூறினார். மேலும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த சமூக விலகலோ, முகக் கவசமோ தேவையில்லை என்றும் கூற ஆரம்பித்தார்.

இந்த நிலையில்தான் கொரொனாவுக்கு மருந்து இருப்பதாகத் தொடர்ந்து பேச ஆரம்பித்ததும் அவர் மீது மத்திய குற்றப் பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, அந்த விவரம் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு ஒரு வீடியோவை வெளியிட்ட திருத்தணிகாச்சலம், டெங்கு நோய்க்கு மருந்து கண்டுபிடித்ததற்காக தன்னை கைதுசெய்தாலும் பரவாயில்லை என்றார்.

"புகழ்பெற்ற மருத்துவர் தெய்வநாயகம் இருந்தபோதுதான் சிக்கன்குனியா நோய்க்கு நிலவேம்புக் குடிநீரைக் கொடுத்துப் பார்க்கலாம் என பரிந்துரைத்தார். அதற்குப் பிறகு, டெங்கு பரவ ஆரம்பித்தபோது, அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த நிலவேம்பு பரிசீலிக்கப்பட்டது. இருந்தபோதும் தான் சொல்லித்தான் அதனை தமிழக அரசு டெங்குவுக்கு நிலவேம்பு கசாயத்தைக் கொடுத்ததாகக் கூற ஆரம்பித்தார் திருத்தணிகாச்சலம்" என்கிறார் அண்ணா நகரில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்.

திருத்தணிகாச்சலத்தைப் பொறுத்தவரை அவர் முறைப்படி சித்த மருத்துவத்தையோ, வேறு எந்த இந்திய மருத்துவ முறைகளையோ படித்தவர் இல்லையென்றாலும் குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியரிடம் தான் ஒரு பச்சிலை மருத்துவர் என ஒரு சான்றிதழைப் பெற்றுவைத்திருந்தார்.

கொரோனா வைரஸ் மருந்து

இந்திய மருத்துவ முறைகளை முறைப்படுத்தும் பணி 1970களில் துவங்கியபோது, பரம்பரையாக சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்து முறைகளை மேற்கொண்டுவந்தவர்களுக்கு Registered Indian Medical Practitioner எனச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பிறகு அந்த முறை நிறுத்தப்பட்டுவிட்டது. கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டுமே, இந்திய மருத்துவ முறையைச் சேர்ந்த மருத்துவர்களாகக் கருதப்பட்டனர்.

இந்த நிலையில் பல பாரம்பரிய மருத்துவர்கள் தங்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டுமெனக் கோரிவந்ததால் 80களில் HPIM என்ற பதிவு வழங்கப்பட்டது. ஆனால், இதற்கு அகில இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லையென்பதால் இந்த முறையும் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, யாருக்கும் இதுபோன்ற பதிவுகள் வழங்கப்படவில்லை. ஆகவே, ஒருவர் RIMP அல்லது HPIM என பதிவை பெற்று மருத்துவம் செய்துவந்தால், அவரது வயதே 60ஐத் தாண்டியிருக்கும்.

ஆனால், திருத்தணிகாச்சலம் 2016ல் வருவாய் வட்டாட்சியரிடம், தான் ஒரு பச்சிலை மருத்துவர் என்ற சான்றிதழைப் பெற்றுக்கொண்டு மருத்துவம் பார்த்து வந்தார்.

இதற்கிடையில், 2019ஆம் ஆணடில் தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், திருத்தணிகாச்சலத்தில் தகுதி குறித்து கேள்வியெழுப்ப, அவருக்கு எவ்வித மருத்துவச் சான்றிதழும் வழங்கப்படவில்லையென பதில் அளிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதைத் தொடர்ந்துவந்தார் திருத்தணிகாச்சாலம்.

Banner image reading 'more about coronavirus'

திருத்தணிகாச்சலத்தைப் பொறுத்தவரை, கொரோனா பதற்றத்தைப் பயன்படுத்தி எல்லோரது கவனத்தையும் தன் மீது ஈர்ப்பதிலேயே தீவிரமாக இருந்தார். தமிழக அரசானது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்காக, பரவலாக கபசுர குடிநீரை வழங்க ஆரம்பித்த பிறகு திருத்தணிகாச்சலம் கொரோனாவுக்கு வாதசுர குடிநீரைப் பரிந்துரைத்தார்.

அதிர்ந்துபோன சித்த மருத்துவர்கள், இந்த நோய்க்கு வாத சுர குடிநீரைக் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்திய நிலையிலும் வாதசுர குடிநீர், வேறு சில மூலிகை மருந்துகளை பரிந்துரைத்துவந்தார்.

இந்த நிலையில்தான், இந்திய மருத்துவத் துறையின் இயக்குனர் காவல்துறையில் புகார் அளிக்கவே, அவரைக் கைதுசெய்திருக்கிறது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை.

தமிழ்நாட்டில், இதற்கு முன்பாக இதேபோல கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதாகப் பேசிவந்த ஹீலர் பாஸ்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பாக கைதுசெய்யப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: