கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை மதுபானக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்

பட மூலாதாரம், ARUN SANKAR

தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை மதுபானக் கடைகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது; ஆனால் அந்த நிபந்தனைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்பதால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரம்

தமிழகத்தில் புதிதாக 600 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6009ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட 600 நபர்களில், 399 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களில், சென்னை நகரத்தில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தாக்கத்தால் மூவர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

52 சோதனை மையங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. இந்த மையங்களில் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகளவில் சோதனைகள் செய்யப்படுவதால், தினமும் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இதனால் எண்ணிக்கையை கொண்டு மக்கள் அச்சப்படவேண்டாம் என்றார்.

மேலும், வீடுகளில், வயதில் மூத்தவர்கள், காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதிக கவனம் கொடுக்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Banner image reading 'more about coronavirus'

''நோய் கட்டுப்பாடு பகுதியில் வசிப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், கர்ப்பிணி பெண்கள், உடல்நலமற்றவர்களை கணக்கில் கொண்டு சோதனைகளை செய்வதால், எண்ணிக்கை அதிகரிக்கின்றது. பிற மாநிலங்களை காட்டிலும் நாம் சோதனைகளை அதிகப்படுத்தியுள்ளதால், பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துள்ளது. நாம் உயர்தரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்கிறோம். மக்கள் அச்சப்படத்தேவையில்லை,''என்றார்.

''தமிழகத்தில் இன்று மூன்று பேர் உயிழந்துள்ளனர். அவர்கள் மூவரும், கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன்பே, பிற வியாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாக இருந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் திருநெல்வேலியை சேர்ந்தவர் அவருக்கு 83 வயது; மேலும் இருவர் சென்னையைச் சேர்ந்தவர்கள், அதில் ஒருவருக்கு 56 வயது மற்றவருக்கு 78 வயது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவர்களின் வயது மற்றும் ஏற்கனவே இருந்த வியாதிகளால் அவர்கள் இறந்துள்ளனர்,'' என்றார்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு கிட் வழங்கப்படுவதாக தெரிவித்தார். ''வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மருத்துவர் பரிசோதனை செய்தபின்னர், அந்த நபர்கள் அவர்களின் வீடுகளில் தனி கழிவறை மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதி உள்ளதா என அவர்களின் கருத்து பெறப்படுகிறது. முகக்கவசம், சோப்பு, நிலவேம்பு குடிநீர், கபசூரக்குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், கிருமிநாசினி தெளிப்பான் உள்ளிட்டவை அடங்கிய கிட் வழங்குகிறோம். தமிழகத்தில் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன,'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: