கொரோனா வைரஸ்:"தமிழ்நாட்டுக்கு வந்தால் போதும் என்றே தோன்றியது" - மாலத்தீவுகளில் இருந்த தமிழர்கள்

indiannavy

பட மூலாதாரம், SpokespersonNAvy Twitter Page

படக்குறிப்பு, இந்தியர்களைத் திரும்ப அழைத்துவர மாலே துறைமுகத்துக்குள் நுழையும் ஐ.என்.எஸ் மகர் கடற்படை கப்பல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேசப் போக்குவரத்து தடைபட்டுள்ளதையடுத்து பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை அன்று மாலத்தீவுகளில் சிக்கியிருந்த 700க்கும் மேற்பட்ட இந்தியர்கள், இந்திய கடற்படையின் கப்பலில் கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களில், கோவை, திருச்சி, நீலகிரி, கரூர், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், அரியலூர், சென்னை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 52 தமிழர்கள் கோவைக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாலத்தீவுகளில் 30 நாட்களுக்கும் மேலாக சரியான உணவு மட்டும் உறக்கமின்றி தவித்து வந்ததாக கூறுகிறார் சமையல் பணிக்காக அங்கு சென்ற ஷங்கர் திருமூர்த்தி.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

"ஒரு வருடத்திற்கு முன்பு செஃப் பணிக்காக கோவையிலிருந்து மாலத்தீவுகளுக்கு சென்றேன். திகூராஹ் தீவுகளில் உள்ள தனியார் விடுதியில் வேலை செய்து வந்தேன். சுற்றுலாத்துறையை நம்பித்தான் மாலத்தீவுகளில் பெரும்பாலான விடுதிகள் இயங்கி வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாத்துறை அங்கு முற்றிலுமாக முடங்கியுள்ளது. உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், விடுதியில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் வேலையிழந்தனர்."

"வேலையில்லாததால் சம்பளமும் கிடைக்கவில்லை. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்துதான் மாலத்தீவிற்கு உணவு பொருட்கள் கொண்டுவரப்படுகிறது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் சர்வதேசப் போக்குவரத்து தடைபட்டு உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. 10 கிலோ அரிசி மற்றும் மைதாவை பயன்படுத்தி சமாளித்து வந்தோம்.

ஒரு கட்டத்தில் செலவிற்காக நான் வைத்திருந்த பணமும் முடிந்தது. ஒரு வாரமாக தூங்கவில்லை, தமிழ்நாட்டிற்குள் வந்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. என்ன செய்வது என புரியாமல் தவித்து வந்த சமயத்தில், இந்திய அரசு எங்களை மீட்டு வந்துள்ளது," என்கிறார் ஷங்கர்.

மாலத்தீவுகளில் உள்ள விடுதிகளில் மீண்டும் தனக்கு வேலை கிடைக்க வாய்ப்பில்லை என கூறுகிறார் இவர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

"கோவை வந்ததும் எங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமை படுத்தப்பட்டுள்ளோம். எனது மனைவி, இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் மற்றும் எல்.கே.ஜி படிக்கும் மகன் என அனைவரும் எனக்காக காத்திருக்கின்றனர். கொரோனா ஏற்படுத்திய கடுமையான சூழலில் இருந்து தப்பித்து அவர்களை பார்க்கப்போகிறேன் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், எதிர்காலம் குறித்த கவலை அதிகமாகவே உள்ளது. மாலத்தீவுகளில் மீண்டும் விடுதிகள் திறக்கப்பட்டதும், சொந்தநாட்டினருக்கே முன்னுரிமை வழங்கப்படும், மற்ற நாட்டினருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காது," என்கிறார் ஷங்கர்.

மாலத்தீவின் மாலே நகரில் தங்கியிருந்தவர்களையும், மற்ற தீவுகளில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தாமல் அழைத்து வந்தது கொரோனா அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ்

"மாலேநகரில் தான் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருந்தது. மற்ற தீவுகளில் கொரோனா பாதிப்பு அச்சப்படும் அளவிற்கு இல்லை. ஆனால், கப்பலில் மாலே நகரில் வசித்து வந்தவர்களை தனிமைப்படுத்தாமல் அனைவரையும் ஒன்றாக அழைத்து வந்தனர். இதனால், பலருக்கு கொரோனா பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. அவர்களின் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது," என்கிறார் மாலத்தீவுகளிலிருந்து மீட்கப்பட்ட மற்றொருவர்.

கோவையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 52 நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில், 3 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: