கொரோனா ஊரடங்கு: தளர்த்த ‘வேண்டும்’, ‘வேண்டாம்’ - மாநில முதல்வர்கள் என்ன கூறினார்கள்?

கோப்புப்படம்

பட மூலாதாரம், PMO INDIA

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை: கொரோனா ஊரடங்கு - மாநில முதல்வர்கள் மாநாட்டில் நடந்தவை என்ன?

மாநில முதல்வர்களுடன் கொரோனா தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பேசியதாவது:

கொரோனா வைரஸுக்கு எதிரான போரை இந்தியா திறம்பட நடத்தி வருவதாக உலக நாடுகள் புகழாரம் சூட்டி வருகின்றன. இதில் மாநில அரசுகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

வைரஸ் பரவலை தடுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வெளிமாநிலங்களில் உள்ளவர்கள், சொந்த ஊருக்கு செல்ல விரும்புகின்றனர். இது இயல்பானது. எனவே, மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொழிலாளர்களின் இடபெயர்வால் கிராமங்களுக்கு கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது. இது மிகப்பெரிய சவால். இந்த சவாலை மாநில அரசுகள் வெற்றிகரமாக சமாளிக்க வேண்டும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு பிரதமர் மோதி தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி கருத்து

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, ''இது அரசியல் செய்ய வேண்டிய நேரமல்ல. எங்களது கருத்துகளை யாருமே கேட்பது இல்லை. மத்திய அரசுக்கு மேற்கு வங்க அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. ஆனால், எப்போது பார்த்தாலும் மேற்குவங்க அரசை விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. கரோனா வைரஸுக்கு எதிராக மேற்கு வங்க அரசு தீவிரமாக போரிட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசோ எங்களுக்கு எதிராக போர் தொடுக்கிறது'' என்றார்.

மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்குவங்கம், தெலங்கானா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட சில மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் விமானம் மற்றும் ரயில் போக்கு வரத்தை மே 31-ம் தேதி வரை தொடங்க அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் மோதியிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தமிழகத்துக்கான நிதியுதவியை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Presentational grey line

இந்து தமிழ் திசை

Cartoon

பட மூலாதாரம், இந்து தமிழ் திசை

Presentational grey line

தினமணி: 'ஒரு கையில் கபசுரக் குடிநீர், மறுகையில் மதுபானம்'

நோய் எதிா்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீா் வழங்கும் அரசு, மறு கையில் மதுபானத்தை வழங்கலாமா என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

அரசு மதுபானக் கடைகளை திறப்பதற்கு தடை கோரி, மதுரையைச் சோ்ந்த போனிபாஸ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தற்போது, தமிழகத்தில் கரோனா பரவல் 3 ஆம் நிலையை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகையச் சூழலில், தமிழக அரசு மதுபானக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் கரோனா அச்சத்தில் இருக்கும் நிலையில், அரசின் இந்த முடிவு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

மதுபானம்

பட மூலாதாரம், Getty Images

மது அருந்துவோருக்கு நோய் எதிா்ப்பு சக்தி குறைந்து, அவா்கள் எளிதில் கரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடும். எனவே, தமிழகத்தில் மதுபானக் கடைகளைத் திறக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மதுபானக் கடைகளை திறக்க சென்னை உயா் நீதிமன்றம் ஏற்கெனவே தடைவிதித்துள்ளது. அதை எதிா்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரா் தரப்பில், மதுபானக் கடைகள் திறக்கப்படுவதால் கரோனா பாதிப்பு அதிகமாகும். அதனால், குடும்ப வன்முறையும், குற்றச்செயல்களும் அதிகரிக்கும். எனவே, மதுபானக் கடைகளைத் திறக்க தடைவிதிக்க வேண்டும் என்பதே இந்த மனுவின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நோய் எதிா்ப்பு சக்திக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் அரசு, மறு கையில் மதுபானத்தை வழங்கலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

மதுபானக் கடைகளை திறக்க சென்னை உயா் நீதிமன்றம் ஏற்கெனவே விதித்த தடை உத்தரவு இவ்வழக்குக்கும் பொருந்தும் என்றும், வழக்கை சென்னை உயா் நீதிமன்றத்துக்கு மாற்றியும் உத்தரவிட்டனா்.

Presentational grey line

தினத்தந்தி: "டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்"

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டாலும் நடப்பாண்டுக்கான தேர்வு அட்டவணையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) கால அட்டவணைப்படுத்தப்பட்டு இருந்த சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையில் தமிழக அரசு, அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி உத்தரவிட்டது.

இதனால் நடப்பாண்டில் ஓய்வுபெற இருந்தவர்களின் பதவி 2021-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால், ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருந்த தேர்வுகளில் சில மாற்றங்கள் வரும் என்றும், திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்த முடியாது என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வந்தன. சில அரசு ஊழியர்கள் சங்கங்களும் இதே கருத்தை முன்வைத்தன. ஏற்கனவே நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இனி வரக்கூடிய நாட்களிலும் நடைபெற உள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விகள் தேர்வர்கள் மத்தியில் எழுந்தது.

திட்டமிட்டபடி நடைபெறும்

இந்த நிலையில் இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

அரசு தரப்பில் இருந்து எப்போது காலிப்பணியிடம் குறித்த விவரங்கள் வருகிறதோ, அதன் பிறகுதான் எங்களுடைய அட்டவணை தயாரிக்கும் பணிகளை தொடருவோம். எனவே அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பாண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் ஏற்படாது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கும் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு விரைவில் தேர்வு நடக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: