பெட்ரோல்: மலிவான விலையில் விற்கும் நிறுவனம் - எங்கே, ஏன்? - விரிவான தகவல்கள் மற்றும் பிற செய்திகள்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனில் ஒரு பவுண்டுக்கு பெட்ரோல் விற்கும் முதல் முக்கிய சில்லறை விற்பனை நிறுவனமாக மோரிசன் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தை உள்ளடக்கிய ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதிலும் உள்ள தங்களது பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஒரு பவுண்டுக்கு பெட்ரோலை விற்று வருகிறது.

ஏப்ரல் மாதம் பிரிட்டனில் ஆங்காங்கே உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் ஒரு பவுண்டுக்கு பெட்ரோல் விற்கப்பட்டாலும், பிரிட்டன் முழுவதும் ஒரே சமயத்தில் இந்த விலையில் விற்கப்படுவது கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவே முதல் முறை. 50 லிட்டர் பெட்ரோல் வாங்கும் போது குறைந்தது 4.50 பவுண்டுகளை மக்கள் சேமிப்பார்கள் என்கிறது மோரிசன் நிறுவனம்.

சர்வதேச அளவில் கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெட்ரோல் விலை வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. மோரிசனை தொடர்ந்து பல பெட்ரோல் விற்பனை நிலையங்கள் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Presentational grey line

கொரோனா வைரஸ்: தொடங்கும் ரயில் சேவை; புதிய விதிமுறைகள் என்னென்ன? - விரிவான தகவல்கள்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் முதன்முதலில் ஒரே நாளில் 4200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட அதேசமயத்தில் இந்திய ரயில்வே மே மாதம் 12ஆம் தேதி முதல் ரயில் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இந்த முடிவின் முதல் கட்டத்தில் 15 ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 25 தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னரே பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது மூன்றாம் கட்ட முடக்கம் முடியும் முன்னரே ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் இந்த முடிவு அதிர்ச்சியைத் தருகிறது.

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவை முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸும் வரவேற்கின்றது.

Presentational grey line

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் புதிதாக 798 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளதால், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8002ஆக உயர்ந்துள்ளது.

இன்று 789 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதில் 538 நபர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துவருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிக பாதிப்புள்ள மாவட்டங்களாக சென்னை(538), செங்கல்பட்டு(90), திருவள்ளுர்(97) உள்ள நிலையில், பிற மாவட்டங்களில் புதிதாக தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமாரி, பெரம்பலூர், ராணிப்பேட்டைவேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு மட்டுமே புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Presentational grey line

"என்னுடைய ரயில் எப்போது வரும்?"

கோப்புப்படம்

வெளிமாநில தொழிலாளர்கள் ரயில்களுக்காக பதிவுசெய்து, டிக்கெட் கிடைத்தவுடன்தான் வரவேண்டுமெனக் கூறப்பட்டிருந்தாலும் ஊர் செல்லும் பரிதவிப்போடு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொழிலாளர்கள் வருவது தொடர்ந்தபடியே இருக்கிறது.

தென்னக ரயில்வேயின் தலைமையகத்திற்கு வெளியில் ஒரு அழுக்குப் பையோடு 40 டிகிரி வெயிலில் உட்கார்ந்திருக்கிறார் 26 வயது தீபக் பந்திர். பிஹார் மாநிலம் பட்னாவிலிருந்து சிறிது தூரத்திலிருக்கிறது இவரது கிராமம். திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

அத்திப்பட்டு புதுநகரில் கட்டட வேலை பார்த்துக்கொண்டிருந்தார் தீபக். ஊரடங்கினால் வேலை போன பிறகு, இத்தனை நாட்களாக ஏதோ கையில் இருந்த காசை வைத்து சமாளித்திருக்கிறார். பிறகு பிஹாருக்கு ரயில் செல்வதாகத் தெரிந்தததும் இதற்காகப் பதிவும் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை.

Presentational grey line

'கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டும் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை'

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதி அல்லாத பிற பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் அமலாகியுள்ள நிலையில், இயல்பு நிலையில் வியாபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, மளிகைக் கடைகள், டீ கடைகள், பேக்கரிகள், ஜெராக்ஸ் கடைகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், வீட்டு உபயோக இயந்திரங்களை பழுதுபார்க்கும் கடைகள், குளிர் சாதன பயன்பாடு இல்லாத துணிக்கடைகள் உள்ளிட்ட 34 வகையான கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: