’கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டும் வியாபாரம் சூடுபிடிக்கவில்லை’ - கவலையில் வியாபாரிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரிமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதி அல்லாத பிற பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் அமலாகியுள்ள நிலையில், இயல்பு நிலையில் வியாபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, மளிகைக் கடைகள், டீ கடைகள், பேக்கரிகள், ஜெராக்ஸ் கடைகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், வீட்டு உபயோக இயந்திரங்களை பழுதுபார்க்கும் கடைகள், குளிர் சாதன பயன்பாடு இல்லாத துணிக்கடைகள் உள்ளிட்ட 34 வகையான கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியது.
தனிமனித இடைவெளி அவசியம் பின்பற்றப்பட வேண்டும், கடைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படவேண்டும், ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் மற்றும் குளிர்சாதன பயன்பாடு இருக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றும்போதும்,வாடிக்கையாளர்களின் வருகை குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள் போன்ற கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் சிக்கல் இருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர்.
திருச்சி நகரத்தில் பெரும்பாலான டீ கடைகள் திறந்திருந்தாலும், பார்சல் மட்டுமே வழங்கப்படுவதால், கடையை நடத்துவது சிரமமாக இருப்பதாக டீ கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். "டீ கடைக்கு வருபவர்கள் இங்கே டீ அருந்திவிட்டு செல்பவர்களாக இருப்பார்கள். பார்சல் வாங்குபவர்கள் குறைவு. அதனால் பலர் கடையை திறந்தாலும், டீ கேன் வைத்து குவளைகளில் டீ விற்கவேண்டியுள்ளது. டீ கடை பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், கேன் மூலம் உரிமையாளர்களே விற்பனை செய்கிறோம். வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பும்வரை சிக்கல்தான்,''என்கிறார் டீ கடை உரிமையாளர் செந்தில்.

பட மூலாதாரம், Getty Images
சென்னை நகரத்தில் அதிக பாதிப்புக்கு காரணமாக இருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ள திருமழிசை சந்தையில் முன்னனுமதி பெற்ற வியாபாரிகள் மட்டுமே காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள். இன்று அந்த சந்தையில் ரூ.60 லட்சம் ரூபாய்க்கு 3 ஆயிரம் டன் காய்கறி விற்பனை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமழிசையில் இருந்து சென்னை நகரத்திற்கு காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்யும் கடைகளில் விலையை குறைத்து விற்பதில் சிரமம் இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ''காய்கறி திருமழிசை சந்தையில் இருந்து கொண்டுவருகிறோம். பழங்களை மாதவரம் பகுதியில் இருந்து வாங்கிவருகிறோம். குழப்பமான நிலை உள்ளது. காய்கறிகளை நகரத்திற்கு கொண்டுவந்து விற்பனை செய்வதால், எங்களுக்கு லாபம் பெரியளவில் இல்லை. ஆனாலும் தொடர்ந்து கடையை நடத்தவேண்டும் என்பதால், வியாபாரம் செய்கிறோம்,''என்கிறார் சென்னையைச் சேர்ந்த பழவியாபாரி சாந்தா.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் சுமார் 150 அப்பளம் தயாரிக்கும் வியாபாரிகள் தயாரிப்பு பணிகளை தொடங்கவில்லை என தெரிவித்துள்ளனர். ''அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி 30 சதவீத ஊழியர்களை வைத்து தயாரிப்பு பணிகளை நடத்துவது சிரமம், அதோடு, தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனைக்கு அனுப்புவதற்கு போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளது என்பதால் தயாரிப்பை நிறுத்திவைத்துள்ளோம்,''என்கிறார் வியாபாரி ராஜு.
தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளைச் சேர்ந்த ஆலை உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்ற திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், ஆலைகள் 30 சதவீத பணியாளர்களுடன் பணிகளை தொடங்க அனுமதி அளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். விவசாயத்திற்குத் தேவையான விளைபொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு உதவியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் .

பட மூலாதாரம், Getty Images
தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்களைத் திறப்பது தொடர்பாக மே 15 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என, அனைத்து மத தலங்களையும் திறக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் பதில் அளித்துள்ளதால், வழிபாட்டுத் தலங்கள் விரைவில் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு என்ன விதமான நிபந்தனைகளை விதிப்பது என்பதை ஆலோசித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி, முடிதிருத்தும் நிலையங்களையும் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அடுத்தவரும் சில நாட்களுக்கு புதிய தொற்றுகள் ஏற்படுவதைத் தடுத்தால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
''கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் ஏப்ரல் மாத இறுதியில் தமிழகம் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியிருந்தது. ஏப்ரல் இறுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்தவர்களை விட, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு விடும் என்று நினைத்த போதுதான், கோயம்பேடு சந்தை மூலம் தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது,'' என்று கூறியுள்ள அவர்,புதிய தொற்றுகள் ஏற்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.












