கொரோனா வைரஸ்: தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது - அண்மைய தகவல்கள்

தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் புதிதாக 798 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளதால், தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8002ஆக உயர்ந்துள்ளது.

இன்று 789 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதில் 538 நபர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துவருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிக பாதிப்புள்ள மாவட்டங்களாக சென்னை(538), செங்கல்பட்டு(90), திருவள்ளுர்(97) உள்ள நிலையில், பிற மாவட்டங்களில் புதிதாக தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமாரி, பெரம்பலூர், ராணிப்பேட்டைவேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு மட்டுமே புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஆறு நபர்கள் பலியாகியுள்ளதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 92 நபர்கள் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என்பதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,051ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்ய 2,43,952 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் 11,584மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் இல்லை என்றும் பிற இடங்களில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், பார்சல் தரும் உணவகங்கள், டீ கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தனிக்கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர். இருந்தபோதும், விற்பனை மந்தமாக இருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

சென்னை நகரத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளதால், திருமழிசை பகுதியில் தற்காலிக சந்தை இயங்கத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் காய்கறிகளின் விலை கட்டுப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை நகரத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கல்லூரிகள், கண்காட்சி வளாகங்கள் தற்காலிக முகாம்களில், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

’ஆயிரம் கோடி தேவை’: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்

தமிழகத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கிட சிறப்பு நிதியாக முன்னர் கேட்டிருந்த ரூ.2000 கோடி மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்காகவும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காகவும் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.1,000கோடியை விரைவாக தரவேண்டும் என பிரதமருடனான ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட முதல்வர்,

நலத்திட்டங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த நிதியை விரைந்து கொடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பேசிய காணொளி ஆலோசனை சந்திப்பில், நடப்பு நிதியாண்டில் 33% தொகை, நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும் என்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள் வழங்க, கூடுதல் தானியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவுக்கு மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சையால், தமிழகத்தில் உயிரிழப்பு 0.67% ஆக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27% பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 37 அரசு பரிசோதனை மையங்களும் 17 தனியார் பரிசோதனை மையங்களும் செயல்படுகின்றன என்றும் இந்த மையங்களின் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 13 ஆயிரம் சோதனைகள் செய்வதற்கு ஏற்றவாறு வசதிகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு அதிக எண்ணிக்கையிலான பிசிஆர்(PCR) கிட்டுகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ்

மத்திய அரசின் ஆயுஷ் வழிகாட்டுதல்கள்படி,தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய மருந்துகளைப் பயன்படுத்த உத்தரவுகள் பிறப்பிக்கபட்டுள்ளன என்றார். ''கப சூரக்குடிநீர் இலவசமாக, கட்டுப்பாட்டு மண்டலங்களில் விநியோகிக்கப்படுகிறது. முன்னணி ஆலோசகர்களுக்கு துத்தநாகம் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரை வழங்கப்படுகிறது, கூடுதலாக மருத்துவ ஆலோசனையின் படி முற்காப்பு ஹைட்ராக்ஸி குளோரோகுயின். தமிழகத்தில் 123 அரசு மற்றும் 169 தனியார் மருத்துவமனைகளில் 29,000 படுக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயாராக உள்ளன,'' என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை குறைக்க, மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக மூலதன மானியம், வட்டி விலக்குதல் உள்ளிட்டவை அளிக்கப்பட்டுள்ளன என்பதால், தற்போது, இதுபோன்ற 50 நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அளிப்பது தொடர்பாக பேசிய முதல்வர் பழனிசாமி, கார்பரேட் நிறுவனங்கள் சமூக பணிகளுக்காக வழங்கும் நிதியை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில், ஏற்றுக்கொள்வதற்கான மாற்றத்தைக் கொண்டுவரலாம் என பரிந்துரை செய்துள்ளார்.

அதேபோல, விவசாய துறை குறித்து பேசும்போது, நெல் கொள்முதல் செய்வதற்கு தேவையான1,321 கோடி ரூபாய் மானியத்தை முன்னதாகவே தரலாம் என்றும் மின் துறையில் உடனடி சுமையை குறைக்க நிவாரணத்தை அறிவிக்குமாறு கோரியுள்ளார்.

எடப்பாடி

பட மூலாதாரம், Getty Images

போக்குவரத்து குறித்து பேசிய முதல்வர், சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக மே 31ம் தேதி வரை தமிழகத்திற்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வரும் 31 ஆம் தேதி வரை விமான சேவையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுவரை, வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களாகவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் தமிழகம் வந்திருந்த 13,284 ஆயிரம் நபர்களை 12 ரயில்களில் அவர்களது மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தங்களது சொந்த மாநிலத்துக்கு செல்ல விருப்பம் உள்ள தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது திட்டத்தின் கீழ் 4 விமானங்கள் ஒரு கப்பல் மூலமாக சுமார் 900 பயணிகள் தமிழகம் வந்துள்ளனர் என்றும் அவர்கள் சோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தொழில்துறை குறித்து குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சிறு,குறு தொழில்நிறுவனங்கள் உள்ளன என்பதால்,அந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான ஆண்டு கடன் திட்ட இலக்கை 2020-21 ஆம் ஆண்டுக்கு ரூ .1,25,000 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

''2020 டிசம்பர் 31 வரை திருப்பிச் செலுத்தும் கடமைகள் இல்லாத வகையில் கடன் மறு கட்டமைக்கும் தொகுப்பும் வழங்கப்படலாம். புதிதாக முதலீடு செய்வதற்கு ஆதரவு வழங்குவதற்காக தமிழக தொழில்துறை முதலீட்டுக் கழகத்திற்கு எஸ்ஐடிபிஐ மற்றும் வணிக வங்கிகள் மூலம் ரூ .2,500 கோடி மறு நிதியளிப்பு உதவி வழங்கப்பட வேண்டும்,'' என்றும் கோரியுள்ளார்.

ஊரடங்கு தளர்வுகள் குறித்து விளக்கிய போது, ''விவசாய நடவடிக்கைகள், சிமென்ட், காகிதம், அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் மற்றும் அனைத்து வகையான உணவு பதப்படுத்தும் தொழில்களும் மாநிலம் முழுவதும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. தினசரி அடிப்படையில் 134 உழவர் சந்தைகள் மற்றும் 9,200 மொபைல் வாகனங்கள் மூலமாக 5,700 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக, உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு போக்குவரத்து மானியத்தை வழங்கவேண்டும். இதனால் விவசாயிகள் உற்பத்தியை நேரடியாக நுகர்வோருக்கு எடுத்துச் செல்லமுடியும்,'' என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: